×

பெரவள்ளூர் எஸ்ஆர்பி காலனியில் உடற்பயிற்சி கூடத்தில் பயங்கர தீவிபத்து: 6 பேர் காயம்; ஒருவர் சீரியஸ்

 

பெரம்பூர், ஜூலை 14: பெரவள்ளூர் எஸ்ஆர்பி காலனி தெருவில் ஹரி கோவிந்த் (21) என்பவருக்கு சொந்தமான கட்டிடத்தில், உடற்பயிற்சி கூடம், ஸ்னூக்கர் விளையாட்டு கூடம் மற்றும் காபி ஷாப் இயங்கி வருகிறது. இதில், உடற்பயிற்சி கூடம் மற்றும் ஸ்னூக்கர் விளையாட்டு மையத்தை எம்கேபி நகர் பகுதியை சேர்ந்த கார்த்திக் (35) என்பவர் நடத்தி வருகிறார்.  காபி ஷாப்பை ஐயப்பன் என்பவர் நடத்தி வருகிறார்.

இந்நிலையில், நேற்று மதியம் 3 மணிக்கு இந்த கட்டிடத்தில் தீவிபத்து ஏற்பட்டது. தீ மளமளவென பற்றி எரிந்தது. இதில் கட்டிடத்தின் கீழ் தளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 5 இருசக்கர வாகனங்கள் தீயில் முற்றிலும் எரிந்து நாசமானது. கீழ்தளத்தில் இருந்த உடற்பயிற்சி கூடம், முதல் தளத்தில் இருந்த உடற்பயிற்சி கூடம், இரண்டாவது தளத்தில் இருந்த ஸ்னூக்கர் விளையாட்டு மையம் மற்றும் காபி ஷாப் ஆகிய கடைகளுக்கும் தீ பரவியது.

உடனடியாக அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், தீயணைப்பு நிலைய உதவி மாவட்ட அலுவலர் சுப்பிரமணி, செம்பியம் தீயணைப்பு நிலைய அலுவலர் பரமேஸ்வரன் மற்றும் செந்தில்குமார், கொளத்தூர் மற்றும் வியாசர்பாடி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.  முன்னதாக, கட்டிடத்தின் முதல் மாடியில் தீவிபத்து ஏற்பட்ட போது, 6 பேர் அங்கிருந்து கீழே குதித்தனர்.

இதில் 5 பேர் சிறு சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். இதில் கொளத்தூர் விநாயகபுரம் வீரராகவன் நகரை சேர்ந்த வழக்கறிஞர் சந்தோஷ் (42) படுகாயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

சுமார் 45 நிமிடங்கள் போராடி தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். அண்ணா நகர் உதவி கமிஷனர் மற்றும் பெரவள்ளூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில், முதல் தளத்திலிருந்த உடற்பயிற்சி கூடத்தில் இருந்த ஏசியில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post பெரவள்ளூர் எஸ்ஆர்பி காலனியில் உடற்பயிற்சி கூடத்தில் பயங்கர தீவிபத்து: 6 பேர் காயம்; ஒருவர் சீரியஸ் appeared first on Dinakaran.

Tags : Peravallur SRP Colony ,Perambur ,Hari Govind ,Peravallur SRP Colony Street ,Dinakaran ,
× RELATED கனமழை காரணமாக சேதமடைந்த சாலைகளை சீரமைக்க ரூ.13.35 கோடி ஒதுக்கீடு