காவிரியில் விசைப்படகு போக்குவரத்து தொடங்கியது

 

இடைப்பாடி: பூலாம்பட்டி – நெரிஞ்சிப்பேட்டை இடையே 12 நாட்களுக்கு பிறகு, தினகரன் செய்தி எதிரொலியாக நேற்று மீண்டும் விசைப்படகு போக்குவரத்து துவங்கியது. சேலம் மாவட்டம், மேட்டூர் அணையில் காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இடைப்பாடி அருகே உள்ள பூலாம்பட்டி – நெரிஞ்சிப்பேட்டை இடையே நீர்மின் கதவணை மூலம் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

விநாடிக்கு 30 ஆயிரம் கனஅடி வரை தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால், காவிரியில் இருகரைகளை தொட்டவாறு தண்ணீர் சீறிப்பாய்ந்து ஓடுகிறது. நீர்மின் கதவணை வழியாக தண்ணீர் நுங்கும், நுரையுமாக செல்கிறது. காவிரியில் நீர் அதிகமாக செல்வதால், சேலம் மாவட்டம் பூலாம்பட்டி, ஈரோடு மாவட்டம் நெருஞ்சிப்பேட்டை இடையேயான விசைப்படகு போக்குவரத்து, பாதுகாப்பு கருதி நிறுத்தப்பட்டது.

தொடர்ந்து, 12 நாட்களாக விசைப்படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் அரசு அலுவலர்கள், தனியார் தொழிலாளர்கள், பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் பெரிதும் அவதிக்குள்ளாகினர். 3 கி.மீ., நடந்து சென்றும், 11 கி.மீ., தூரம் சுற்றிச்சென்றும் அவதிக்குள்ளாகினர். இதுகுறித்து தினகரன் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது.

இதையடுத்து நடவடிக்கை எடுத்த பேரூராட்சி நிர்வாகம், பூலாம்பட்டி- நெரிஞ்சிப்பேட்டை இடையே விசைப்படகு போக்குவரத்துக்கு அனுமதி வழங்கியது. நேற்று குரூப் 4 தேர்வு எழுத சென்றவர்கள், வேலைக்காக சென்றவர்கள் விசைப்படகில் பயணித்தனர். மேலும், வார விடுமுறை நாளான நேற்று பூலாம்பட்டி வந்திருந்த சுற்றுலா பயணிகள், காவிரி ஆற்றை விசைப்படகு மூலம் சுற்றிப்பார்த்து மகிழ்ச்சியடைந்தனர்.

 

The post காவிரியில் விசைப்படகு போக்குவரத்து தொடங்கியது appeared first on Dinakaran.

Related Stories: