×

விண்ணப்பங்கள் மீது 45 நாட்களில் நடவடிக்கை

 

சேலம்: சேலம் மாவட்டத்தில் “உங்களுடன் ஸ்டாலின்” முகாம்களில் பெறப்படும் விண்ணப்பங்கள் மீது 45 நாட்களில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என, கலெக்டர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளார். சேலம் மாவட்ட கலெக்டர் பிருந்தாதேவி நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், வரும் 15ம் தேதி ‘‘உங்களுடன் ஸ்டாலின்’’ திட்ட முகாமை தொடங்கி வைக்கிறார். சேலம் மாவட்டத்தில் வரும் 15ம்தேதி முதல் நவம்பர் 15ம் தேதி வரை 432 சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளது. இதில், நகர்ப்புற பகுதிகளில் 168 முகாம் மற்றும் ஊரக பகுதிகளில் 264 முகாம் நடத்தப்படவுள்ளது. முதற்கட்டமாக 15ம் தேதி முதல் ஆகஸ்ட் 14ம் தேதி வரை ஒரு மாதத்திற்கு 120 முகாம்கள் நடத்தப்படவுள்ளது.

“உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமிற்கான விண்ணப்பம் மற்றும் தகவல் கையேடுகள் வழங்கும் பணி கடந்த 8ம் தேதி முதல் நடந்து வருகிறது. இதில், 1,161 தன்னார்வலர்கள் ஈடுபட்டுள்ளனர். முதற்கட்ட முகாம் நடக்கும் பகுதிகளில், இதுவரை 80 சதவீத விண்ணப்ப விநியோகம் முடிந்துள்ளது. நகர்ப்புற பகுதிகளில் 13 அரசுத்துறைகளை சார்ந்த 43 சேவைகளும், ஊரக பகுதிகளில் 15 அரசு துறைகளை சார்ந்த 46 சேவைகளும் வழங்கப்படவுள்ளது. இம்முகாமில் வழங்கப்படும் விண்ணப்பங்கள் மீது 45 நாட்களில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெற தகுதியுள்ள, விடுப்பட்ட மகளிர் எவரேனும் இருப்பின் இந்த முகாமில் விண்ணப்பத்தினை அளிக்கலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பேட்டியின் போது மாவட்ட வருவாய் அலுவலர் ரவிக்குமார் உடனிருந்தார்.

The post விண்ணப்பங்கள் மீது 45 நாட்களில் நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Salem ,Collector ,Brinda Devi ,Stalin ,Salem district ,District ,Tamil Nadu ,Chief Minister… ,Dinakaran ,
× RELATED பாதுகாப்பு கேட்டு காதல்ஜோடி தஞ்சம்