கட்டிட கழிவுகளை மறுசுழற்சி செய்து ஹாலோ பிரிக்ஸ் தயாரிக்கும் ஆலை

 

சேலம்: சேலம் மாநகரில் சேகரமாகும் கட்டிட கழிவுகளை பவுடராக்கி மறுசுழற்சி செய்யும் வகையில், செட்டிசாவடியில் ரூ.3கோடியில் 2 ஏக்கரில் விரைவில் ஆலை அமைக்கப்படுகிறது. அதற்கான பணிகள் மும்முரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தின் 5வது பெரிய நகரமாக சேலம் மாநகரம் உள்ளது. இந்த மாநகராட்சி 91.34 ச.கி.மீட்டர் பரப்பளவில் சூரமங்கலம், அஸ்தம்பட்டி, அம்மாப்பேட்டை, கொண்டலாம்பட்டி ஆகிய நான்கு மண்டலங்களை கொண்டுள்ளது. மொத்தமுள்ள 60 வார்டுகளில் சுமார் 10 லட்சம் மக்கள் வசிக்கின்றனர்.

மாநகரில் 2.38 லட்சம் குடியிருப்புகள், 25,457 வணிக நிறுவனங்கள், 78 தினசரி சந்தைகள், 2 பஸ் ஸ்டாண்டுகள் உள்ளன. இம்மாநகருக்கு வெளியூரில் இருந்து தினமும் 1 லட்சத்துக்கு மேல் மக்கள் வந்து செல்கின்றனர். இதனால் நாள் ஒன்றுக்கு 550 டன் திடக்கழிவுகள் உருவாகிறது. சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், குப்பையில்லா மாநகரமாக மாற்றும் வகையில் மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக குப்பையில் இருந்து மக்கும் குப்பை, மக்காத குப்பை பிரிக்கப்படுகிறது.

மக்கும் குப்பையில் இருந்து நுண்ணுயிரி உரம் தயாரிக்கப்பட்டு வருகிறது. இதற்காக மாநகரில் 33 இடங்களில் உரம் தயாரிக்கும் மையம் செயல்பட்டு வருகிறது. 60 வார்டுகளிலும் சேகரமாகும் குப்பைகளை, வீடு தோறும் வாகனங்கள் மூலம் சேகரிக்கப்பட்டு, நுண்ணுயிரி உரம் தயாரிக்கும் மையத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு மக்கும் குப்பையில் இருந்து நுண்ணுயிரி உரம் தயாரிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே, மக்காத உலர் குப்பைகளை தனித்தனியே பிரித்து எடுக்கும் வகையில், மாநகரில் 5 இடங்களில் மக்காத குப்பையை பிரித்து எடுக்கும் மையம் அமைக்கப்படுகிறது. ஒவ்வொரு மையமும் ₹85 லட்சத்தில் அமைக்கப்படுகிறது. மாநகராட்சி பகுதியில் சேகரமாகும் கட்டிட கழிவுகளை மறுசுழற்சி செய்யும் வகையில், தனியார் பங்களிப்புடன் செட்டிசாவடியில் ₹3 கோடியில் ஆலை அமைக்கப்படுகிறது.

The post கட்டிட கழிவுகளை மறுசுழற்சி செய்து ஹாலோ பிரிக்ஸ் தயாரிக்கும் ஆலை appeared first on Dinakaran.

Related Stories: