மூணாறு, ஜூலை 14: இடுக்கியில் புதிய சுற்றுலாப் பகுதிகளை கண்டுபிடிக்க ஒத்துழைக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் விக்னேஸ்வரி தெரிவித்துள்ளார். பிரபல சுற்றுலா தலமான இடுக்கி மாவட்டத்தில் மூணாறு, வாகமன், இடுக்கி அணைக்கட்டு, மறையூர் உட்பட ஏராளமான சுற்றுலா மையங்கள் உள்ளன. இங்கு சுற்றுலாவை நம்பி சாலையோர வியாபாரம் முதல் ரிசார்ட் வரை ஏராளமானோர் வாழ்க்கையை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், நேற்று முன் தினம் கலெக்டர் அலுவலகத்தில் சுற்றுலா தொழில் புரிவோர் உடனான ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு கலெக்டர் விக்னேஷ்வரி தலைமை வகித்தார். மேலும் இந்த கூட்டத்தில் பீர்மேடு எம்எல்ஏ வாழூர்சோமன், சுற்றுலா உதவி இயக்குனர் ஷைன், மாவட்ட சுற்றுலா செயலர் ஜிதேஷ் ஜோஸ் உட்பட பலர் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் கலெக்டர் விக்னேஸ்வரி பேசுகையில், ‘‘இடுக்கி மாவட்டத்தில் சுற்றுலா வாய்ப்புகள் முடிந்த அளவில் பயன்படுத்தப்படும். அதற்கு புதிய சுற்றுலா பகுதிகளை கண்டுபிடிப்பதற்கு சுற்றுலா தொழில் புரிவோர் ஒத்துழைக்க வேண்டும். இடுக்கி அணையை காண வாய்ப்பு அளிக்கப்படும். மாவட்டத்திற்காக சிறப்பு ‘வெப் சைட்’ உருவாக்கப்படும். வானிலை எச்சரிக்கைகள், கட்டுப்பாடுகள் ஆகியவற்றை குறித்து தெரிவிக்க நிலையான இயக்க நடைமுறை செயல்படுத்தப்படும். சுற்றுலா பயணிகளுக்கு அடிப்படை வசதிகள் செய்யவதற்கு ‘இடுக்கி பிளாசா’ திட்டம் செயல்படுத்தப்படும். சுற்றுலா போலீஸ் சேவை நடைமுறைப்படுத்தப்படும்’’ என்றார்.
The post இடுக்கியில் புதிய சுற்றுலா பகுதிகளை கண்டுபிடிக்க ஒத்துழைக்க வேண்டும்: கலெக்டர் பேச்சு appeared first on Dinakaran.
