ஆஞ்சநேயர் கோயில் கும்பாபிஷேகம்

 

திருவாடானை, ஜூலை 14: திருவாடானை அருகே அஞ்சுகோட்டை கிராமத்தில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள பஞ்சமுக ஆஞ்சநேயர் ஆலய மகா கும்பாபிஷேகம் நேற்று விமரிசையாக நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கோயிலின் யாகசாலையில் வேத மந்திரங்கள் முழங்க, புனித நீர் நிரப்பப்பட்ட கும்ப கலசங்கள் வைக்கப்பட்டு சிறப்பு யாக பூஜைகள் நடைபெற்றன. மங்கள வாத்தியங்கள் முழங்க, மேளதாளங்கள் இசைக்க சிவாச்சாரியார்கள் புனிதநீர் நிரம்பிய கும்ப கலசங்களை தலையில் சுமந்து கோயிலை வலம் வந்தனர்.பக்தர்கள் ராமா, ராமா என பக்தி கோஷங்களை எழுப்ப சிவாச்சாரியார்கள் கோயில் கோபுர கலசத்தின் மீது புனித நீரை ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

புனித நீர் அபிஷேகம் செய்யப்பட்ட கலசங்களுக்கு தீப ஆராதனை காண்பிக்கப்பட்டது. கும்பாபிஷேகத்தை தொடர்ந்து, மூலவரான பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு சந்தனம், குங்குமம், பூக்கள் மற்றும் வண்ணமயமான ஆடைகள் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. அலங்கரிக்கப்பட்ட பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பஞ்சமுக ஆஞ்சநேயரை தரிசித்தனர். விழாவை முன்னிட்டு கோயில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

The post ஆஞ்சநேயர் கோயில் கும்பாபிஷேகம் appeared first on Dinakaran.

Related Stories: