மண்டபம், ஜூலை 14: ராமநாதபுரம் முதல் கீழக்கரை, சாயல்குடி வழியாக தூத்துக்குடிக்கு ரயில் சேவை துவங்க சில ஆண்டுகளுக்கு முன்பு தென்னக ரயில்வே நிர்வாகம் அறிவித்திருந்தது. ஆனால் அறிவிக்கப்பட்ட ஆண்டு முதல் இன்று வரை இது குறித்து ரயில்வே நிர்வாகம் எந்த நடவடிக்கை எடுக்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இந்த வழித்தடம் ராமேஸ்வரத்தில் இருந்து தூத்துக்குடிக்கு மண்டபம், ராமநாதபுரம், கீழக்கரை, சிக்கல், சாயல்குடி வழியாக ரயில் சேவைகள் துவங்கும் பட்சத்தில் ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தொகுதி சட்டமன்ற தொகுதி, ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராமத்தில் வசித்து வரும் விவசாயிகள், மீனவர்கள், திருச்செந்தூர் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் மற்றும் ஆன்மீக வாதிகள் என ஆயிரக்கணக்கானோர் பயனடைவார்கள்.
அதுபோல இந்த வழித்தடம் செல்லும் அனைத்து கிராம பகுதிகளிலும் பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். மக்களின் வாழ்வாதாரமும் உயரும். அதனால் ரயில்வே நிர்வாகம் அறிவிக்கப்பட்ட இந்த வழித்தடங்களை நிலங்களை ஆய்வு செய்து புதிய ரயில் சேவை துவங்குவதற்கு ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மண்டபம் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post அறிவிக்கப்பட்ட புதிய வழித்தடத்தில் ராமேஸ்வரம்-தூத்துக்குடி ரயில் சேவை எப்போது? மண்டபம்,கீழக்கரை மக்கள் எதிர்பார்ப்பு appeared first on Dinakaran.
