திருச்செங்கோடு அருகே ரவுண்டானாவில் ரிப்ளெக்டர் ஒளிரும் போர்டு வைக்க நடவடிக்கை

*வாகன ஓட்டிகள் வலியுறுத்தல்

திருச்செங்கோடு : திருச்செங்கோடு அடுத்த மேட்டுபாளையம் மாதா கோயில் அருகே சங்ககிரியில் இருந்து ராசிபுரம் ரோட்டை இணைக்கும் வகையில், புதியதாக சாலை அமைக்கப்பட்டுள்ளது. ராசிபுரம் ரோட்டில் தொடங்கி ஈரோடு ரோட்டில் தோக்கவாடி வரை புதியதாக புறவழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளது.

இந்த இரண்டு சாலைகளும் சந்திக்கும் இடமான மேட்டுப்பாளையம் மாதா கோயில் பகுதியில், பெரிய அளவில் ரவுண்டானா அமைக்கப்பட்டுள்ளது. ரோட்டில் இருந்து சில அடி உயரமே அமைக்கப்பட்டுள்ள இந்த ரவுண்டானா, தூரத்தில் வரும் வாகன டிரைவர்களுக்கு தெரிவதில்லை. மேலும் ரவுண்டானா இருப்பதற்கான எச்சரிக்கை அறிவிப்பு பலகைகள், சைன் போர்டுகள், பிரதிபலிப்பான்கள் எதுவும் இல்லை.

ராசிபுரம் ரோடு, திருச்செங்கோடு ரோடு, சங்ககிரி ரோடு, நாமக்கல் ரோடு என ரவுண்டானாவில் சந்திக்கும் நான்கு ரோடு பகுதிகளிலும் எச்சரிக்கை பலகைகள் அமைக்கப்படவில்லை. இந்த பகுதியில் சாலை சரிவாக இருப்பதால், வாகனங்கள் வேகமாக வருகின்றன.

அருகே வரும்போது தான் ரவுண்டானா தெரிவதால், டிரைவர்கள் தடுமாறுகின்றனர். சில நேரங்களில் தரையோடு தரையாக இருக்கும் ரவுண்டானா சுவரில் மோதி விபத்து ஏற்படுகிறது. எனவே, இந்த பகுதியில் விபத்துகளை தடுக்கவும், வாகன டிரைவர்களை எச்சரிக்கை செய்யும் வகையிலும், பிரதிபலிப்பான்கள், ஒளிரும் போர்டுகள் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post திருச்செங்கோடு அருகே ரவுண்டானாவில் ரிப்ளெக்டர் ஒளிரும் போர்டு வைக்க நடவடிக்கை appeared first on Dinakaran.

Related Stories: