×

சென்னையில் உள்ள 19 மண்டலங்களில் ரேஷன் கார்டு குறைதீர் முகாம்: நாளை நடக்கிறது

சென்னை, ஜூலை 11: சென்னையில் உள்ள 19 மண்டலங்களில் நாளை ரேஷன் கார்டு குறைதீர் முகாம் நடைபெறும் என தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பொது விநியோக திட்டத்தின் பயன்களை குடும்ப அட்டைதாரர்கள் எளிதில் பெறும் வகையில் தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு வட்டத்திலும் சென்னையை பொறுத்தவரை மண்டல அலுவலகங்களில் மக்கள் குறைதீர் முகாம், ஒவ்வொறு மாதமும் 2வது சனிக்கிழமை நடத்தப்படுகிறது. அதன்படி இந்த மாதத்திற்கான மாதாந்திர பொது விநியோக திட்ட மக்கள் குறைதீர் முகாம், சென்னையில் உள்ள உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையின் 19 மண்டல உதவி ஆணையாளர் அலுவலகங்களில் நாளை காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறவுள்ளது.

இதில் குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கல், முகவரி மாற்றம், செல்போன் எண் பதிவு, மாற்றம் செய்தல் மற்றும் அங்கீகாரச்சான்று உள்ளிட்ட பொது விநியோக திட்டம் தொடர்பான சேவைகள் மேற்கொள்ளப்படும்.
மேலும், பொது விநியோக கடைகளின் செயல்பாடுகள், தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் அல்லது சேவைகளில் குறைபாடுகள் குறித்த புகார்கள் ஏதேனும் இருப்பின் அவற்றை பொதுமக்கள் இம்முகாமில் தெரிவித்தால் குறைகளை விரைந்து தீர்வு செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எனவே, சென்னையிலுள்ள 19 மண்டல அலுவலக பகுதிகளில் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் இச்சேவையினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post சென்னையில் உள்ள 19 மண்டலங்களில் ரேஷன் கார்டு குறைதீர் முகாம்: நாளை நடக்கிறது appeared first on Dinakaran.

Tags : Chennai ,Tamil Nadu government ,
× RELATED கனமழை காரணமாக சேதமடைந்த சாலைகளை சீரமைக்க ரூ.13.35 கோடி ஒதுக்கீடு