பொறியியல் மாணவர் சேர்க்கை பொது பிரிவினருக்கான சிறப்பு கலந்தாய்வு தொடக்கம்

சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 417 இன்ஜினியரிங் கல்லூரிகளில் 1.90 லட்சம் இளநிலை இன்ஜினியரிங் படிப்புக்கான இடங்கள் உள்ளன. இதற்கான, 2025-26ம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கை கலந்தாய்வு 7ம் தேதி தொடங்கியது. முதல் கட்டமாக, அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீடு சிறப்பு பிரிவு கலந்தாய்வு நடந்தது. கலந்தாய்வில் பங்கேற்க மொத்தமுள்ள 699 இடங்களுக்கு, மாற்றுத்திறனாளி மாணவர்கள் 137 பேர் தகுதி பெற்றனர். அதேபோல், விளையாட்டு வீரர்கள் பிரிவில் மொத்தம் உள்ள 38 இடங்களுக்கு, 363 பேர் தகுதி பெற்றனர்.

முன்னாள் ராணுவ வீரர்கள் குழந்தைகள் பிரிவில் 11 இடங்களுக்கு 12 பேர் தகுதி பெற்றனர். கலந்தாய்வில் பங்கேற்ற மாணவர்கள் தங்களின் விருப்ப கல்லூரிகளை தேர்ந்தெடுக்க 7ம் தேதி இரவு 7 மணி வரை அவகாசம் வழங்கப்பட்டது. கல்லூரிகளை தேர்ந்தெடுத்த மாணவர்களுக்கு தற்காலிக ஒதுக்கீடு ஆணை 8ம் தேதி காலை 7 மணிக்கு வழங்கப்பட்டன. இதை தொடர்ந்து இன்று பொதுப்பிரிவுகளை சேர்ந்த சிறப்பு பிரிவு (மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரர்கள், முன்னாள் ராணுவ வீரர்களின் குழந்தைகள்) கலந்தாய்வு நேற்று தொடங்கியது.

கலந்தாய்வில் பங்கேற்க பொதுப்பிரிவில் மாற்றுத்திறனாளிகளுக்கு உள்ள 9,238 இடங்களுக்கு 485 பேர் தகுதி பெற்றனர். முன்னாள் ராணுவ வீரர்கள் குழந்தைகள் பிரிவில் 138 இடங்களுக்கு 1,377 பேர் தகுதி பெற்றனர். மேலும், விளையாட்டு வீரர்கள் பொதுப்பிரிவில் மொத்தம் உள்ள 457 இடங்களுக்கு, 2,449 பேர் தகுதி பெற்றனர். அதேபோல், தொழிற்கல்வி பிரிவில், மாற்றுத்திறனாளிகளுக்கு உள்ள 190 இடங்களுக்கு 4 பேரும், முன்னாள் ராணுவ வீரர்கள் குழந்தைகளுக்கு உள்ள 3 இடங்களுக்கு 2 பேரும் தகுதி பெற்றுள்ளனர். இவர்களுக்காக கலந்தாய்வு தொடங்கி நடந்து வருகிறது. இவர்களில் விருப்ப கல்லூரிகளை தேர்ந்தெடுத்த மாணவர்களுக்கு தற்காலிக ஒதுக்கீடு ஆணை நாளை காலை 7 மணிக்கு வழங்கப்படும்.

The post பொறியியல் மாணவர் சேர்க்கை பொது பிரிவினருக்கான சிறப்பு கலந்தாய்வு தொடக்கம் appeared first on Dinakaran.

Related Stories: