ஊட்டி தாவரவியல் பூங்கா சாலையில் ஓடும் சாக்கடை கழிவுநீரால் துர்நாற்றம்

*நோய் பரவும் அபாயம்

ஊட்டி : ஊட்டி தாவரவியல் பூங்கா சாலையில் பாதாள சாக்கடை தொட்டியில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் கடும் துர்நாற்றத்துடன் வழிந்தோடுவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது.நீலகிரி மாவட்டம் ஊட்டி நகரில் சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிகமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.

இதுதவிர ஏராளமான சுற்றுலா பயணிகளும் வந்து செல்கின்றனர். ஊட்டி நகரில் தூய்மை பணிகள், வளர்ச்சி பணிகள் அனைத்தும் ஊட்டி நகராட்சி மூலமாகவே மேற்கொள்ளப்படுகின்றன. மொத்தமுள்ள 36 வார்டுகளில் 25க்கும் மேற்பட்ட வார்டுகளில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இந்த பாதாள சாக்கடை அமைக்கப்படடு நீண்ட நாட்களாகிய நிலையில் பல இடங்களில் சேதமடைந்தும் பழுதடைந்தும் காணப்படுகின்றன. இந்நிலையில், சுற்றுலா பயணிகள் அதிகம் வந்து செல்லக் கூடிய ஊட்டி தாவரவியல் பூங்கா சாலையில் பழங்குடியினர் பண்பாட்டு மைய கட்டிடத்திற்கு அருகில் உள்ள பாதாள சாக்கடை தொட்டியில் அடைப்பு ஏற்பட்டுள்ளது.

இதனால், கழிவுநீர் கடும் துர்நாற்றத்துடன் சாலை மற்றும் கால்வாயில் வழிந்தோடி வருகிறது. இதனால், அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.

இதனால், நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ள நிலையில், இதனை சரி செய்ய கோரி பொதுமக்கள் பலமுறை நகராட்சியை தொடர்பு கொண்டு தெரிவித்த போதும் அதனை கண்டு கொள்ளவில்லை என கூறப்படுகிறது. எனவே பழுதடைந்துள்ள பாதாள சாக்கடையை ஊட்டி நகராட்சி சாி செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

The post ஊட்டி தாவரவியல் பூங்கா சாலையில் ஓடும் சாக்கடை கழிவுநீரால் துர்நாற்றம் appeared first on Dinakaran.

Related Stories: