கடலூர் ரயில் விபத்தில் பள்ளி மாணவர்கள் பலி: அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்

சென்னை: கடலூர் அருகே பள்ளி வேன் மீது ரயில் மோதியதில் மாணவர்கள் உயிரிழந்தசம்பவத்துக்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

எடப்பாடி பழனிசாமி (அதிமுக பொதுச்செயலாளர்): கடலூர் அருகே பள்ளி வேன் மீது ரயில் மோதி உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு முறையான சிகிச்சை அளிக்க, உரிய நடவடிக்கை எடுக்க அரசை வலியுறுத்துகிறேன்.

செல்வப்பெருந்தகை (தமிழக காங்கிரஸ் தலைவர்): பொதுமக்கள் தினமும் கடக்கும் ரயில்வே வழிகளில் பாதுகாப்பு இல்லாமல் இருப்பது மிகவும் வருத்தத்திற்குரியது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.

அன்புமணி (பாமக தலைவர்): விபத்துக்கு யார் காரணமாக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இந்தியா முழுவதும் கிட்டத்தட்ட ஆளில்லா கடவுப்பாதைகள் முடிவுக்கு கொண்டு வரப்பட்டதைப் போல, கடவுப்பாதைகள் இருக்கும் இடங்கள் அனைத்திலும் மேம்பாலங்களை அமைக்க மாநில அரசுகளுடன் இணைந்து ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முத்தரசன் (சிபிஐ மாநில செயலாளர்): கடலூர் ரயில் விபத்துக்கு ஒன்றிய அரசும், ரயில்வே அமைச்சகமும் முழுப்பொறுப்பேற்க வேண்டும். ஒன்றிய அரசு உயிரிழந்த குழந்தைகள் குடும்பங்களுக்கு ரூ.5 கோடி இழப்பீடு வழங்க வேண்டும்.

டிடிவி.தினகரன் (அமமுக பொதுச்செயலாளர்): கேட் கீப்பரின் கவன குறைவால் ரயில்வே கேட் மூடப்படாததே விபத்திற்கு காரணம் என்ற மக்களின் புகார் மீது கூடுதல் கவனம் செலுத்தி நடவடிக்கைகளை ஒன்றிய அரசு மேற்கொள்ள வேண்டும்.

மநீம தலைவர் கமல்ஹாசன்: ரயில் மோதி பள்ளிக் குழந்தைகள் இறந்ததை ஒப்பவே மனம் மறுக்கிறது. உயிருக்கு உயிரான பிள்ளைகளைப் பறிகொடுத்து கலங்கி நிற்கும் பெற்றோர், உறவினர், நண்பர்களுக்கு என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா: உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.50 லட்சம் ஒன்றிய, மாநில அரசுகள் நிவாரணம் வழங்க வேண்டும். உயிரிழந்த பள்ளி குழந்தைகளின் ஆன்மா சாந்தியடையவும், அவரது குடும்பத்திற்கும், உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

வேல்முருகன் (தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர்): தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான ரயில்வே கேட்டுகளில் வட மாநிலத்தவர்களே நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மொழி பிரச்னையின் காரணமாக, சரிவர பணி செய்ய முடியாமல், மது அருந்திவிட்டு தூங்கி விடுகிறார்கள். இதனால் இது போன்ற விபத்துகள் அடிக்கடி ஏற்படுகிறது.

மமக தலைவர் ஜவாஹிருல்லா: பாஜ ஆட்சியில் ரயில்வே துறையில் தொடர்ந்து விபத்துக்கள் நடந்து வருவது மிகுந்தவேதனையாக இருக்கிறது. தமிழ்நாட்டில் ரயில்வே துறையில் கேட் கீப்பரகளாக பணியாற்றுகிறார்கள் கூட தமிழகத்தைச் சேர்ந்தவர்களாக இல்லை என்பது வருத்தத்திற்குரியது. விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

The post கடலூர் ரயில் விபத்தில் பள்ளி மாணவர்கள் பலி: அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் appeared first on Dinakaran.

Related Stories: