சென்னை விமான நிலையத்தில் கடந்த ஜூன் மாதம் பயணிகள் எண்ணிக்கை விமானங்கள் வருகை, புறப்பாடு குறைந்தது

சென்னை: சென்னை விமான நிலையத்தில் கடந்த ஜூன் மாதத்தில் பயணிகள் எண்ணிக்கை, விமானங்கள் வருகை புறப்பாடு வெகுவாக குறைந்தது. சென்னை விமான நிலையத்தில், கடந்த ஜூன் மாதத்தில் 14,20,283 உள்நாட்டு பயணிகள் மற்றும் 5,17,194 சர்வதேச பயணிகள் என மொத்தம் 19,38,194 பயணிகள் பயணம் செய்துள்ளனர். கடந்த ஜூன் மாதம் 9,953 உள்நாட்டு விமானங்கள், 3,005 சர்வதேச விமானங்கள் என மொத்தம் 12,958 விமானங்கள் இயக்கப்பட்டுள்ளன.

ஜூன் மாதத்தில் ஒரு நாளுக்கு சுமார் 64,600 வருகை, புறப்பாடு பயணிகள் பயணித்து உள்ளனர். ஒரு நாளைக்கு 432 வருகை, புறப்பாடு விமானங்கள் இயக்கப்பட்டுள்ளன. துபாய், அபுதாபி, சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து, இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கும், உள்நாட்டு விமானங்களில் மதுரை, கோவை, திருச்சி, தூத்துக்குடி, டெல்லி, மும்பை, ஐதராபாத், கொச்சி, கொல்கத்தா, அந்தமான், பெங்களூர் உள்ளிட்ட நகரங்களுக்கும் அதிகளவில் பயணிகள் பயணம் செய்துள்ளனர்.

கடந்த மே மாதத்தில், சென்னை விமான நிலையத்தில் இயக்கப்பட்ட விமானங்களும், பயணித்த பயணிகளின் எண்ணிக்கை, இதைவிட அதிகமாக இருந்தது. மே மாதம், 20,57,848 பயணிகள், விமான பயணம் மேற்கொண்டு உள்ளனர். 13,449 விமானங்கள் இயக்கப்பட்டுள்ளன.சென்னை விமான நிலையத்தில் கடந்த மே மாதத்தோடு ஒப்பிடுகையில், ஜூன் மாதத்தில் பயணிகளின் எண்ணிக்கை 1,19,654 குறைவாக உள்ளது.

விமானங்களின் எண்ணிக்கை கடந்த மே மாதத்தை விட, ஜூன் மாதத்தில் 491 விமானங்கள் குறைவாக இயக்கப்பட்டன. கடந்த மே மாதத்தை விட, ஜூன் மாதத்தில் விமான பயணிகளின் எண்ணிக்கை, இயக்கப்படும் விமானங்களின் எண்ணிக்கை குறைந்தது குறித்து சென்னை விமான நிலையம் தரப்பில் விசாரித்தபோது, மே மாதம் முழுவதும், கோடை விடுமுறை.

எனவே சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகளவில் இருந்தன. சென்னையில் இருந்து வெளிநாடுகள், வெளி ஊர்களுக்கு செல்லும் பயணிகள், வெளிநாடுகள், வெளியூர்களில் இருந்து சென்னைக்கு வரும் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்டது. இதனால் மே மாதத்தில், பயணிகளின் எண்ணிக்கையும், விமானங்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது. மேலும், பயணிகள் வசதிக்கென கோடைகால சிறப்பு விமானங்களும் இயக்கப்பட்டன.

ஆனால் ஜூன் மாதத்தில் கோடை விடுமுறை முடிந்து, பள்ளி கல்லூரிகள், நீதிமன்றங்கள் போன்றவை திறக்கப்பட்டதால் சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைந்தது. சென்னை விமான நிலையத்தில், ஒரு மாதம் பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பதும், சில மாதங்களில் குறைவதும், வழக்கம். செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் பண்டிகை கால விடுமுறைகளின்போது மீண்டும் பயணிகள் எண்ணிக்கையும், விமானங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என்றனர்.

The post சென்னை விமான நிலையத்தில் கடந்த ஜூன் மாதம் பயணிகள் எண்ணிக்கை விமானங்கள் வருகை, புறப்பாடு குறைந்தது appeared first on Dinakaran.

Related Stories: