சென்னை, ஜூலை 9: சென்னை தலைமை செயலக காலனி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் சிலர் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதாக தலைமை செயலக காலனி இன்ஸ்பெக்டர் அகிலனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீசார் நேற்று குன்னூர் நெடுஞ்சாலை பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த 3 பேரை மடக்கி பிடித்து சோதனை செய்தனர். அவர்களிடம், ஒரு கிலோ 300 கிராம் கஞ்சா சிக்கியது. விசாரணையில், ஓட்டேரி எஸ்.எஸ்.புரம் ஏ பிளாக் 6வது தெருவை சேர்ந்த குணசேகரன் (45), அரவிந்த் (29), புரசைவாக்கம் பகுதியை சேர்ந்த கோகுல் குமார் (30) என் தெரியவந்தது. இதில், கோகுல் குமார் மீது ஏற்கனவே 3 குற்ற வழக்குகளும், அரவிந்த் மீது 3 குற்ற வழக்குகளும், குணசேகரன் மீது 6 குற்ற வழக்குகளும் உள்ளது.
சரித்திர பதிவேடு ரவுடியான இவர், பாஜவில் வடசென்னை மேற்கு மாவட்ட வர்த்தகர் அணி மாவட்ட செயலாளராக உள்ளார். ஓட்டேரி காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் இரவு நேரத்தில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்ட போது அப்போதைய ஓட்டேரி இன்ஸ்பெக்டர் ஜானி செல்லப்பாவிடம் தகராறில் ஈடுபட்டு போலீசாரை தகாத வார்த்தைகளால் பேசி குணசேகரன் குடிபோதையில் அலப்பறையில் ஈடுபட்ட வீடியோ வைரலாகி அவர் அப்போது சிறைக்கு சென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதன் பிறகு தொடர்ந்து ஓட்டேரி பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதால் போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். அப்போது அவரது வீட்டில் இருந்து 6 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. அதன் பின்பு ஓட்டேரி ஏரியாவில் இருந்து தலைமை செயலக காலனி ஏரியாவில் தனது கஞ்சா விற்பனையை ஞானசேகரன் தொடர்ந்தார். தனது அடியாட்களை வைத்து ஆந்திராவிற்கு சென்று கஞ்சாவை வாங்கி வந்து அதனை சிறுசிறு பொட்டலங்களாக பிரித்து ஓட்டேரி, புளியந்தோப்பு ஆகிய பகுதியில் விற்பனை செய்தது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் வழக்கு பதிந்து பாஜ மாவட்ட செயலாளர் குணசேகரன், அரவிந்த், கோகுல் குமார் ஆகியோரை கைது செய்தனர். தொடர்ந்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
The post கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட பாஜ நிர்வாகி கைது: கூட்டாளிகளும் சிக்கினர் appeared first on Dinakaran.
