ஊசூர் அருகே காட்டு வழியில் 8 கி.மீ தூரம் நடந்து சென்று மலைவாழ் மக்களை சந்தித்து குறைகளை கேட்ட மாவட்ட வன அலுவலர்

அணைக்கட்டு : வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகா ஊசூர் அடுத்த அத்தியூர் ஊராட்சி குருமலையில் குருமலை, நச்சிமேடு, வெள்ளக்கல் மலை உள்ளிட்ட மலை கிராமங்கள் உள்ளது. இதில் நூற்றக்கணக்கான மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். மலைப்பகுதி முழுவதும் வனத்துறை கட்டுப்பாட்டில் இருப்பதால் வனத்துறை சார்பில் அங்கு வசிக்கும் மக்களுக்கு பல்வேறு உதவிகள் செய்யப்பட்டு வருகிறது.

நேற்று முன்தினம் மாவட்ட வன அலுவலர் அசோக்குமார் தலைமையில் வேலூர் வன சரக அலுவலர் தரணி, சோழவரம் பிரிவு வனவர் பன்னீர்செல்வம், அத்தியூர் பிரிவு வனவர் காந்தகுமார் மற்றும் வனக்காப்பாளர்கள், வன காவலர்கள் அடங்கிய குழுவினர் அத்தியூர் ஊராட்சி மன்ற தலைவர் அண்ணாமலையுடன் குருமலை பகுதிக்கு வந்து அங்கு வசிக்கும் மலைவாழ் மக்களிடம் குறைகளை கேட்டறிந்தனர்.

தொடர்ந்து அங்கிருந்து வெள்ளக்கல்மலை கிராமத்திற்கு நடந்தே சென்று அங்கிருந்த மலைவாழ் மக்களிடம் குறைகளை கேட்டறிந்தனர். தொடர்ந்து மாவட்ட வன அலுவலர் அங்கிருந்த மலைவாழ் மக்களிடம் உங்களுக்கு என்ன தேவைகள் உள்ளது, அடிப்படை வசதிகள், மருத்துவ வசதிகள் கிடைக்கிறதா வனத்துறை சார்பில் வழங்கப்படும் நல திட்ட உதவிகள் கிடைக்கிறதா என நேரடியாக விசாரணை நடத்தினார்.

மலைப்பகுதி இளைஞர்களுக்கு அதிக அளவில் வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது அதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். சுயதொழில் தொடங்குவதற்கு கடனுஉதவி வழங்கப்படும், உங்களுக்கு (மலைவாழ்) மக்களுக்கு அரசு வழங்கும் சலுகைகளை பயன்படுத்தி முன்னேற்றம் அடைய வேண்டும் என்றார். தொடர்ந்து அங்கிருந்து சோழவரம் மலை பகுதி வரை நடந்தே சென்று வனத்துறையினருடன் மாவட்ட வன அலுவலர் ஆய்வு செய்து அங்கிருந்த மக்களிடமும் குறைகளை கேட்டறிந்தார்.

The post ஊசூர் அருகே காட்டு வழியில் 8 கி.மீ தூரம் நடந்து சென்று மலைவாழ் மக்களை சந்தித்து குறைகளை கேட்ட மாவட்ட வன அலுவலர் appeared first on Dinakaran.

Related Stories: