17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை வேலைநிறுத்தம் அனைத்து தொழிலாளர்களும் கலந்துகொள்ள வேண்டும்: தொமுச பேரவை சண்முகம் எம்பி அழைப்பு

சென்னை: தொமுச பேரவை சண்முகம் எம்பி வெளியிட்ட அறிக்கை: மாநில அரசுகளை வரைவு சட்ட நகல்கள் மீது உரிய கலந்தாலோசனை நடைபெறவில்லை. 100 ஆண்டு போராடி பெற்ற தொழிலாளர் சட்டங்களுக்கு மாற்றான 4 தொகுப்பு சட்டங்களை சில வினாடிகளில் பாஜ, அரசு நிறைவேற்றியது. இதனை தொடர்ச்சியாக தொழிற்சங்கங்கள் எதிர்த்து போராடி வருகின்றன. இச்சட்ட தொகுப்புகள் நடைமுறைக்கு வந்தால் 80 சதவீதம் தொழிலாளர்கள் சட்ட வரம்புக்கு வெளியே இருப்பார்கள் என்கிற அபாயம், அதன் காரணமாக வேலை நீக்கம், ஆட்குறைப்பு, ஆலை மூடல் போன்றவைகளுக்கு அரசின் அனுமதி பெறாமலேயே நடைமுறைப்படுத்த முடியும் என்கிற அபாயம் உள்ளது.

அபாயகரமான தொழிலில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு உடனடி மருத்துவ சிகிச்சை பெறுவதற்கேதுவாக தொழிற்சாலைகளில் ஆம்புலன்ஸ் இருக்க வேண்டும் என்கிற பிரிவும் நிர்த்துப்போக செய்யப்பட்டுள்ளது. அண்மையில் திருத்தப்பட்ட மூன்று குற்றவியல் சட்டங்கள் பாரதிய நியாய சன்ஹிட்ட பிரிவு 111-ன்படி தொழிற்சங்க நடவடிக்கைகள் மீது புகார் தருவதும், அதன்மீது ஒழுங்கமைக்கப்பட்ட குற்றம் சுமத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள நான்கு சட்டத் தொகுப்புகளை திருப்பப் பெற வலியுறுத்தியும், காலிப்பணியிடங்களை நிரப்பிட வலியுறுத்தியும், விலைவாசியை கட்டுப்படுத்தவும், பொதுத்துறைகளை தனியாருக்கு தாரை வார்க்காதே, பொதுத்துறை பங்குகளை விற்காதே என்கிற அடிப்படை பிரச்னைகளை முன்வைத்து உருவாக்கப்பட்டுள்ள 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை நடைபெறும் வேலை நிறுத்தத்தில், அனைத்து பிரிவு தொழிலாளர்களும் கலந்து கொண்டு வெற்றி பெறச் செய்ய வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

The post 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை வேலைநிறுத்தம் அனைத்து தொழிலாளர்களும் கலந்துகொள்ள வேண்டும்: தொமுச பேரவை சண்முகம் எம்பி அழைப்பு appeared first on Dinakaran.

Related Stories: