சேலம், ஜூலை 8:சேலம் அருகே அடுத்தடுத்து 2 வீட்டின் பூட்டை உடைத்து பணம் திருடிய மர்மநபர்கள் பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர். சேலத்தை அடுத்துள்ள கருப்பூர் கோட்டகவுண்டம்பட்டியை சேர்ந்தவர் தனபால் (49). மாஜி ராணுவ வீரர். இவருக்கு நேற்று முன்தினம் இரவு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால், மனைவியை அழைத்துக்கொண்டு வீட்டை பூட்டி விட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்துள்ளார். நேற்று காலை மீண்டும் வீட்டுக்கு சென்று பார்த்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. இதேபோல், அவரது வீட்டின் மாடியில் வாடகைக்கு குடியிருக்கும் பெரியார் பல்கலைக்கழக கௌரவ விரிவுரையாளர் ரகுநாத் (32) என்பவரது வீட்டின் பூட்டும் உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, தனபாலின் வீட்டில் பீரோவில் இருந்த ரூ.5 ஆயிரம் திருடு போயிருந்தது. அதேபோல், ரகுநாத் வீட்டிலும் ரூ.5 ஆயிரம் திருடு போயிருந்தது. இதுபற்றி கருப்பூர் போலீசில் தனபால் புகார் கொடுத்தார். இன்ஸ்பெக்டர் கவிதா தலைமையிலான போலீசார் சம்பவ இடம் சென்று, பூட்டு உடைக்கப்பட்ட 2 வீடுகளிலும் விசாரணை நடத்தினர். அதில், வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்ட மர்மநபர்கள், இத்திருட்டில் ஈடுபட்டிருப்பது தெரிந்தது. தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து, இத்திருட்டில் ஈடுபட்டவர்கள் பற்றி போலீசார் விசாரிக்கின்றனர்.
The post சேலம் அருகே அடுத்தடுத்து 2 வீடுகளின் பூட்டை உடைத்து துணிகர திருட்டு appeared first on Dinakaran.
