மேட்டூர், ஜூலை 8: மேட்டூர் அருகே மாரியம்மன் கோயிலில் நகையை திருடிய பிரபல குற்றவாளி, நேற்று நகையை விற்க எடுத்து சென்றபோது போலீசில் சிக்கிக்கொண்டான். சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே உள்ள வெள்ளக்கல்பட்டி பாம்பன் கராத்தை சேர்ந்தவர் பிரபாகரன்(40). இவர் கொலை, கொள்ளை, கஞ்சா விற்பனை போன்ற வழக்குகளில் தொடர்புடையவர். இவர் மீது கருப்பூர், தீவட்டிப்பட்டி, சேலம் ஜங்ஷன், ஆட்டையாம்பட்டி, கோவை சரவணம்பட்டி, கோவில்பாளையம் ஆகிய காவல் நிலையங்களில் பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. கடந்த மே மாதம் கோவையில் திருட்டு வழக்கில் கைதான பிரபாகரன், ஜாமீனில் வெளியே வந்து தலைமறைவானார். பின்னர், மேட்டூர் அடுத்த கருமலைகூடலில் உள்ள தனது தங்தை நித்யா வீட்டிற்கு வந்தார். செலவிற்கு பணம் இல்லாததால் கோபுரம் காட்டில் உள்ள மாரியம்மன் கோயிலுக்கு சென்று, சுவாமி கழுத்தில் இருந்த தங்க தாலி, அருகே இருந்த முனியப்பன் கோயிலில் உண்டியலை உடைத்து பணத்தை திருடிச்ெசன்றார். இதுகுறித்து கருமலை கூடல் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், நேற்று மாலை 16 கண் பாலம் எதிரே உள்ள புதுபாலத்தில் கருமலை கூடல் இன்ஸ்பெக்டர் பிரபா, எஸ்ஐ சீனிவாசன் ஆகியோர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது டூவீலரில் வந்த பிரபாகரனை சந்தேகத்தின் பெயரில் பிடித்து விசாரித்த போது, மாரியம்மன் கோயிலில் திருடிய நகையை விற்க சென்றதாக தெரிவித்தார். இதையடுத்து பிரபாகரனை கைது செய்த போலீசார், ஒரு கிராம் எடையுள்ள தங்கத்தாலி, திருட்டுக்கு பயன்படுத்திய டூவீலர், ஆயுதங்களை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட பிரபாகரன் மேட்டூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.
The post மேட்டூர் அருகே மாரியம்மன் கோயிலில் நகை திருடியவர் கைது விற்க எடுத்து சென்ற போது சிக்கினார் appeared first on Dinakaran.
