×

பாமக நிர்வாகி கொலை வழக்கில் ஜாமீனில் வந்த தவாக மாவட்ட செயலாளர் சரமாரி வெட்டி படுகொலை: பட்டப்பகலில் காரை வழிமறித்து தீர்த்துக்கட்டிய கும்பல்

செம்பனார்கோயில்: பாமக செயலாளர் கொலை வழக்கில் ஜாமீனில் வந்த தவாக நிர்வாகி பட்டப்பகலில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். புதுச்சேரி மாநிலம், காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு மெயின்ரோடு பகுதியை சேர்ந்தவர் மணிமாறன் (32). திருமணமாகாதவர். இவர் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் காரைக்கால் மாவட்ட செயலாளராக இருந்தார். இந்நிலையில் நேற்று காலை மயிலாடுதுறையில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தவாக உட்கட்சித் தேர்தலுக்கு வேட்பு மனு வாங்கும் கூட்டத்தில் கலந்து கொள்ள மணிமாறன் ஒரு காரில் சென்றுள்ளார்.

கூட்டத்தை முடித்துவிட்டு மீண்டும் மயிலாடுதுறையிலிருந்து காரைக்கால் சென்று கொண்டிருந்தார். காரில் முன்சீட்டில் மணிமாறன் அமர்ந்திருந்தார். பகல் 3.20 மணி அளவில் மயிலாடுதுறை-தரங்கம்பாடி சாலையில் செம்பனார்கோயில் என்ற இடத்தில் சென்றபோது 2 கார்களில் பின் தொடர்ந்து வந்த ஏழு பேர் கொண்ட மர்ம கும்பல் திடீரென மணிமாறன் சென்ற காரை வழிமறித்தது.

பின்னர் அந்த மர்ம கும்பல், காரின் முன்புற கண்ணாடியை அடித்து நொறுக்கி கதவைத் திறந்து மணிமாறனை இழுத்து வெளியே தள்ளினர். சாலையோரம் விழுந்தவரை, சரமாரியாக அரிவாளால் தலையை வெட்டி சிதைத்தனர். இதில் சம்பவ இடத்திலேயே மணிமாறன் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார். இதைதொடர்ந்து அந்த கும்பல் தப்பி சென்றது. தகவல் அறிந்த செம்பனார்கோயில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மணிமாறனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனையடுத்து மயிலாடுதுறை மாவட்ட எஸ்பி ஸ்டாலின் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார். அப்போது அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களின் பதிவை சேகரித்து விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டார். மேலும் இந்த கொலை தொடர்பாக 5 தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொண்டார்.  பட்டப் பகலில் படுகொலை செய்யப்பட்ட மணிமாறன், கடந்த 2021ல் காரைக்கால் மாவட்ட முன்னாள் பாமக செயலாளர் தேவமணி கொலை வழக்கில் முதல் குற்றவாளி என்பது குறிப்பிடத்தக்கது. இவர் 2021 முதல் 2024 வரை ஜெயிலில் இருந்தார்.

அதன் பின் திருநள்ளாறு காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது. இதை தொடர்ந்து காரைக்கால் மாவட்டத்திற்கு வந்தால் பதற்றம் ஏற்படும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து அவரை காரைக்கால் மாவட்டத்திற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டு, புதுச்சேரியில் உள்ள காவல் நிலையத்தில் கையெழுத்திட அப்போதைய சப்-கலெக்டர் உத்தரவிட்டார். அதன்படி அவர் ஜாமீனில் தான் இருந்தார். முன்னாள் பாமக செயலாளர் தேவமணி கொலை வழக்கு காரைக்கால் நீதிமன்றத்தில் தற்போது நிலுவையில் உள்ளது குறிப்பிடதக்கது.

The post பாமக நிர்வாகி கொலை வழக்கில் ஜாமீனில் வந்த தவாக மாவட்ட செயலாளர் சரமாரி வெட்டி படுகொலை: பட்டப்பகலில் காரை வழிமறித்து தீர்த்துக்கட்டிய கும்பல் appeared first on Dinakaran.

Tags : Thavaga District ,PMK ,Sembanarkoil ,Manimaran ,Thirunallar Main Road ,Karaikal district, Puducherry ,Karaikal district… ,Dinakaran ,
× RELATED சென்னை பல்லாவரத்தில் யூடியூபர்...