இதில், மூத்த அரசியல் தலைவரும், கலைஞரின் அன்புக்குரியவருமான பெரியவர், மணிச்சுடர் இதழின் ஆசிரியரும் இந்திய அரசியல் பற்றிய ஆழமான புரிதலுடன், சமூக நல்லிணக்கத்துக்காக தன் வாழ்நாளெல்லாம் உழைத்து வரும் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீனை பெருமைப்படுத்தும் வகையில் இந்த ஆண்டிற்கான தகைசால் தமிழர் விருதுக்கு அவரது பெயர் பரிசீலிக்கப்பட்டு அவருக்கு விருது வழங்க முடிவு செய்யப்பட்டது. மேலும், கே.எம்.காதர் மொகிதீன் இந்திய யூனியன் முஸ்லிக் கட்சியின் தலைவர். தமிழ்நாட்டில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தேசிய பொதுச் செயலாளரும், தமிழ் மாநில தலைவராகவும் இருந்தவர். மனித நேய மாண்பாளர், பழகுவதற்கு இனிய பண்பாளர், அறிவார்ந்த சொற்பொழிவாளர், மனிதநேயத்திற்கும் மதநல்லிணக்கத்திற்கும் தம்மை அர்ப்பணித்துக் கொண்டவர்.
கோவையில் 2010ல் நடந்த உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் தமிழ்நாட்டிற்கும், அரபகத்துக்கும் உள்ள தொடர்புகள் பற்றிய ஆய்வுக் கட்டுரை வழங்கியவர். எட்டாண்டுகள் தொடர்ந்து தாருல் குர்ஆன் இதழில் ‘தமிழர்க்கு இஸ்லாம் வந்த மதமா? சொந்தமா?’ எனும் தலைப்பில் தொடர் கட்டுரையை எழுதியவர். வாழும் நெறி, குர்ஆனின் குரல், இசுலாமிய இறைக்கோட்பாடு உள்பட 6 நூல்களை எழுதியவர். ஜமால் முகம்மது கல்லூரியில் 15 ஆண்டுகள் வரலாற்று துறை பேராசிரியராக பணியாற்றியவர், காயிதே மில்லத் காலம் முதல் தொடர்ந்து சமூக நல்லிணக்கம் பரப்பி வரும் சிந்தனையாளர், பல நூறு பட்டதாரிகளை உருவாக்கி அவர்களின் வாழ்வினை உயரத்துக்கு உயர்த்திய ஆசான்.
‘தகைசால் தமிழர் விருது’க்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கே.எம்.காதர் மொகிதீனுக்கு ரூ.10 லட்சத்திற்கான காசோலையும் பாராட்டுச் சான்றிதழும் வருகிற ஆகஸ்ட் 15ம் நாள் நடைபெறும் சுதந்திர தின விழாவில் முதல்வர் மு.க. ஸ்டாலினால் வழங்கப்படும்.
* ‘திராவிட மாடல் அரசு பெருமிதம்’
முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பதிவில், ‘‘கண்ணியத் தென்றல் காயிதே மில்லத் காலந்தொட்டே சமூக நல்லிணக்கத்துக்காகத் தம்மை அர்ப்பணித்துக் கொண்டு பணியாற்றி வரும் சிந்தனையாளர் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தேசிய தலைவர் பல நூறு பட்டதாரிகளை உருவாக்கிய பேராசிரியர் காதர் மொகிதீனுக்கு இந்த ஆண்டுக்கான தகைசால் தமிழர் விருதினை அறிவிப்பதில் பெருமிதம் கொள்கிறது நம் திராவிட மாடல் அரசு என கூறியுள்ளார்.
The post தகைசால் தமிழர் விருதுக்கு காதர் மொகிதீன் தேர்வு: சுதந்திர தினத்தன்று முதல்வர் பரிசுத்தொகை வழங்குகிறார் appeared first on Dinakaran.
