கண்ணமங்கலம், ஜூலை 3: கண்ணமங்கலத்தில் நடந்த பணி நிறைவு வரவேற்பு விழாவில் தூய்மை பணியாளர்களுக்கு ராணுவவீரர் பரிசுகள் வழங்கினார். திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் பிள்ளையார் கோயில் வளாகத்தில் ராணுவத்தில் பணிபுரிந்து பணி நிறைவு பெற்ற ராணுவ வீரர் பாலகிருஷ்ணனுக்கு வரவேற்பு விழா நடந்தது. பேரூராட்சி கவுன்சிலர் பரத் தலைமை தாங்கினார். முன்னாள் ராணுவ அதிகாரிகள் கார்த்திகேயன், வெங்கடேசன் முன்னிலை வகித்தனர். அறங்காவலர் குழு தலைவர் பாண்டியன் வரவேற்றார்.
தொடர்ந்து, ராணுவத்தில் 35 வருடங்கள் பணிபுரிந்து பணி நிறைவு பெற்று வீடு திரும்பிய ராணுவ வீரர் பாலகிருஷ்ணனுக்கு பொதுமக்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். அப்போது பேசிய ராணுவ வீரர், உங்களின் அன்பான வரவேற்பு என்னை நெகிழ்சியடைய செய்கிறது. என் தாத்தா, என் அப்பா, நான் என மூன்று தலைமுறைகளாக ராணுவத்தில் பணிபுரிகிறோம். இந்திய ராணுவம் தான் எங்கள் குடும்பம். நாட்டுக்காக நாங்கள் சேவை செய்கிறோம். அதேபோல் இங்கு துய்மை பணியாளர்கள் நமக்காக சேவை செய்கிறார்கள். அவர்களை கவுரவிக்கும் வகையில், கண்ணமங்கலம் பேரூராட்சி பணியாளர்கள் அனைவருக்கும் பரிசுகள் வழங்கி பாராட்டுவதில் மகிழ்ச்சியடைகிறேன் எனக்கூறி அனைவருக்கும் பரிசுகள் வழங்கினார். அவருக்கு தூய்மை பணியாளர்கள் நன்றி தெரிவித்தனர். பின்னர், கிராம மக்கள் அவருக்கு மலர் தூவி ஊர்வலமாக வீட்டிற்கு அழைத்து சென்று மரியாதை செய்தனர்.
The post தூய்மை பணியாளர்களுக்கு பரிசு வழங்கிய ராணுவ வீரர் கண்ணமங்கலத்தில் பணி நிறைவு வரவேற்பு விழா appeared first on Dinakaran.
