பாட்னா: அயோத்தியைப் போல் பீகாரின் சீதாமடியில் சீதைக்கு பிரம்மாண்டமாகக் கோயில் கட்டப்பட உள்ளது. இதன் புதிய வடிவமைப்பை முதல்வர் நிதிஷ்குமார் பார்வையிட்டுள்ளார். பீகார் மாநிலத்தில் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான தேசிய ஜனநாயக முன்னணி அரசு ஆட்சியில் உள்ளது. இங்குள்ள சீதாமடியின் புனவுரா எனும் கிராமத்தில் சீதைக்காக ஒரு பழைய கோயில் உள்ளது. புனவுரா தாம் எனப்படும் இக்கோயில் உள்ள இடத்தில், சீதை பிறந்ததாகக் கருதப்படுகிறது. இந்த கோயிலின் மேம்பாட்டுக்காக கடந்த ஆண்டு நவம்பரில் பீகார் அரசு சுமார் 50 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தி ஒதுக்கியது. இத்துடன் கோயில் புனரமைப்புக்காக முதல்கட்டமாக, ரூ.120 கோடி நிதியும் ஒதுக்கியது. புனவுரா கோயிலை, அயோத்தியின் ராமர் கோயிலைப் போல் பிரம்மாண்டமாகக் கட்ட பீகார் அரசு முடிவு செய்துள்ளது.
இதன் புதிய வடிவமைப்பின் படங்களை நேற்று முதல்வர் நிதிஷ்குமார் பார்வையிட்டார். இதைப் பாராட்டி அவர் அப்படங்களை தன் எக்ஸ் தளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். இந்த பதிவில் முதல்வர் நிதிஷ் கூறுகையில், ’அன்னை ஜானகியின் பிறப்பிடமான புனவுரா தாம் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு தயாராக உள்ளது என்பதை தெரிவிப்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இங்கு அன்னை ஜானகியின் பிரம்மாண்டமான கோயிலைக் கட்டுவது பீகார்வாசிகள் அனைவருக்கும் பெருமை மற்றும் நல்ல அதிர்ஷ்டம் அளிக்கும் விஷயம். அன்னை சீதா கோயிலைக் கட்டுவதற்காக ஒரு அறக்கட்டளையும் அமைக்கப்பட்டுள்ளது’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
The post அயோத்தி ராமர் கோயிலை போன்று பீகாரில் சீதைக்கு பிரமாண்ட கோயில்: மாதிரி படங்களை வெளியீடு appeared first on Dinakaran.