5 மாதங்களில் இல்லாத அளவில் விலை உயர்வு : ரஷ்யா, அமெரிக்காவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை அதிகரித்த இந்தியா !!

தெஹ்ரான் : இஸ்ரேல்-ஈரான் போர் தீவிரமடைந்துள்ளதால் 5 மாதங்களில் இல்லாத அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது. இன்று காலையில் கச்சா எண்ணெய் விலை பீப்பாய் ஒன்று 2.3% அதிகரித்து 78-79 டாலாாக உயர்ந்துள்ளது. இதனிடையே, ரஷ்யா மற்றும் அமெரிக்காவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை இந்தியா அதிகரித்துள்ளது. ரஷ்யாவில் இருந்து இம்மாதம் நாளொன்றுக்கு 20 முதல் 22 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெயை இந்தியா இறக்குமதி செய்துள்ளது. அமெரிக்காவில் இருந்து கடந்த மே மாதத்தில் நாளொன்றுக்கு 2.8 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்ட நிலையில், ஜூன் மாதத்தில் இதுவரை நாளொன்றுக்கு சுமார் 51 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெயை இந்தியா இறக்குமதி செய்துள்ளது.

இதனிடையே ஈரானில் அமைந்துள்ள அணுசக்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ள அமெரிக்காவிற்கு உரிய பதிலடி கொடுக்கப்படும் என அந்நாடு எச்சரித்துள்ளது. இந்த நிலையில், கச்சா எண்ணெய் வர்த்தகத்தில் முக்கிய பங்கு வகிக்கும் ஹார்மூஸ் நீரிணையை மூடுவதற்கு ஈரான் நாடாளுமன்றம் அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பெர்சியன் வளைகுடா, ஓமன் வளைகுடாவின் நடுவில் உள்ள ஹார்மூஸ் நீரிணையை கடந்துதான் உலகின் பிற பகுதிகளுக்கு கச்சா எண்ணெய் கப்பல்கள் செல்கின்றன. இந்த ஹார்மூஸ் நீரிணையை மூடப்பட்டால் கச்சா எண்ணெய் உலகின் மற்ற பகுதிகளுக்கு எடுத்துச் செல்வதில் சிக்கல் ஏற்படும். குறிப்பாக இந்தியாவின் 40% கச்சா எண்ணெய்யும், 50% எரிவாயு இறக்குமதியும் இந்த நீரிணை வழியாகவே நடைபெறுகிறது. இதனால் இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளில் பெட்ரோல், டீசல் விலை மிக கடுமையாக உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

The post 5 மாதங்களில் இல்லாத அளவில் விலை உயர்வு : ரஷ்யா, அமெரிக்காவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை அதிகரித்த இந்தியா !! appeared first on Dinakaran.

Related Stories: