புதுடெல்லி: ஆங்கிலம் பயின்றால் அதிகாரமளிக்கும் என்றும் அவமானம் அல்ல என்று உள்துறை அமைச்சர் கருத்துக்கு எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பதிலடி கொடுத்துள்ளார். டெல்லியில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா,‘‘ஆங்கிலத்தில் பேசும் இந்தியர்கள் வெட்கப்பட வேண்டிய நாள் வெகு தொலைவில் இல்லை. அந்நிய மொழியில் நமது கலாசாரம், பண்பாடு, வரலாற்றை புரிந்துகொள்ள முடியாது’’ என கூறினார்.அமித்ஷாவின் இந்த பேச்சுக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.இந்த நிலையில் மக்களவை எதிர்க்கட்சி தலைவரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான ராகுல் காந்தி எக்ஸ் தளத்தில் நேற்று பதிவிட்டுள்ளதாவது: ஆங்கிலம் என்பது அணை இல்லை.அது ஒரு பாலம். ஆங்கிலம் அவமானம் அல்ல, அது அதிகாரமளிக்கும். ஆங்கிலம் சங்கிலி அல்ல,சங்கிலியை உடைக்கும் கருவி.இந்தியாவில் ஏழை குழந்தைகள் ஆங்கிலம் கற்பதை பாஜ,ஆர்எஸ்எஸ் விரும்பவில்லை.
ஏனென்றால் நீங்கள் கேள்வி கேட்பது, முன்னேற்றம் அடைவது, சமநிலை அடைவதை அவர்கள் விரும்பவில்லை. இன்றைய நிலையில் ஒவ்வொருவரின் தாய்மொழியை போல் ஆங்கிலமும் முக்கியமானதாகும். இது வேலைவாய்ப்பு அளிப்பதோடு, ஒருவரின் நம்பிக்கையை அதிகரிக்க செய்யும். இந்தியாவின் ஒவ்வொரு மொழிக்கும் ஆன்மா, கலாசாரம், அறிவு உண்டு. அவற்றை நாம் பாதுகாக்க வேண்டும்.ஒவ்வொரு குழந்தைக்கும் ஆங்கிலம் கற்பிக்க வேண்டும். உலகத்தில் போட்டியிடுவதற்கான பாதை ஆங்கிலம். ஒவ்வொரு குழந்தைக்கும் சமமான வாய்ப்பை வழங்கும். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.
The post ஆங்கிலம் என்பது அதிகாரமளிக்கும், அவமானம் அல்ல: அமித்ஷா கருத்துக்கு ராகுல் காந்தி பதிலடி appeared first on Dinakaran.