பெரம்பூர், ஜூன் 19: சென்னை புளியந்தோப்பு கனகராஜ் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ்(32). இவர், புளியந்தோப்பு பிகே காலனி 5வது தெருவில் உள்ள முத்துமாரியம்மன் கோயிலை பராமரித்து வருகிறார். இந்நிலையில், கோயில் அருகே உள்ள குடிசை மாற்று வாரிய வீடுகள் பழுதடைந்ததால், அனைத்து வீடுகளையும் இடித்துவிட்டு, புதிய வீடு கட்டித்தர அரசு ஏற்பாடு செய்த நிலையில், அங்கிருந்த கோயிலையும் இடித்து அனைத்து பொருட்களையும் எடுத்து வைத்துவிட்டு மீதமுள்ள பணிகளை அப்படியே விட்டுவிட்டு சென்றுள்ளனர். இந்நிலையில், நேற்று காலை கோயில் மேற்கூரையில் இருந்த 5 கலசங்கள் மாயமானதைக் கண்டு பிரகாஷ் அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து, புளியந்தோப்பு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும், கோயில் கலசம் திருட்டில் ஈடுபட்ட அதேபகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுவன், ஆவடி கவுரிபேட்டை பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுவன் ஆகியோரை கைது செய்தனர். ஓட்டேரி மேம்பாலம் அருகே உள்ள சாரதா 42 என்பவருக்கு சொந்தமான பழைய இரும்பு கடையில் இருந்து 5 கலசங்களையும் மீட்டனர். பின்னர், இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பிவைத்தனர். இரும்பு கடை வியாபாரி சாரதா மீது போலீசார் வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.
The post கோயில் கலசங்கள் திருடிய 2 சிறுவர்கள் கைது appeared first on Dinakaran.