உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழியாக வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

தஞ்சாவூர்: உயர்நீதிமன்றம், உச்சநீதி மன்றங்களில் தமிழை வழக்காடு மொழியாக கொண்டு வர வேண்டும் என தஞ்சாவூர் திருமண விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று காலை தஞ்சாவூரில் சட்டமன்ற உறுப்பினரும், மத்திய மாவட்ட செயலாளருமான துரை.சந்திரசேகரனின் சகோதரர் துரைபாண்டியன் மகள் தனு மற்றும் மன்னார்குடி நகர செயலாளர் வீரா கணேசனின் சகோதரர் அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் வீரா கதிரவன் மகன் வீரவிஜயன் ஆகியோரது திருமணத்தை தலைமையேற்று நடத்தி வைத்தார். அப்போது முதல்வர் பேசியதாவது: இங்கே நீதியரசர்கள் மகாதேவன், சுந்தரேஷ் வந்திருக்கிறார்கள். இரண்டு பேரும் தமிழில் உரையாற்றி இருக்கிறார்கள். தமிழில் பேசிய நீதியரசர்களை நான் கேட்டுக்கொள்ள விரும்புவது, பல ஆண்டு காலமாக உச்சநீதிமன்ற நீதியசரசர்கள் தமிழ்நாட்டிற்கு வந்தபோது, நாங்கள் தொடர்ந்து வைக்கக்கூடிய கோரிக்கை என்னவென்றால், உச்சநீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக தமிழும் இருக்க வேண்டும் என்பதுதான். சட்டமன்றத்தில் ஏற்கனவே தலைவர் கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி அனுப்பி வைத்திருந்தார். இன்றைக்கு நீதிமன்றம் வழங்கக்கூடிய தீர்ப்புகள் தமிழில் வரக்கூடிய ஒரு சூழ்நிலையைப் பெற்றிருக்கிறது. அதற்காக நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம், பெருமைப்படுகிறோம்.

ஆனால், உச்சநீதிமன்றத்திலும், உயர்நீதிமன்றத்தில் வழக்காடுகின்ற நேரத்தில் தமிழில் வாதாடுகின்ற ஒரு சூழ்நிலையை உருவாக்கித் தரவேண்டும் என்று நாங்கள் நீண்ட நாட்களாக அந்தக் கோரிக்கையை வைத்துக் கொண்டிருக்கிறோம். அந்த கோரிக்கையை நிறைவேறுவதற்கு நீங்கள் எல்லாம் துணை நிற்கவேண்டும் என்று இந்த நேரத்தில் அன்போடு கேட்டுக் கொள்ள விரும்புகிறேன். ஏனென்றால், தமிழன், தமிழ் என்று நாம் பெருமையயோடு சொல்லிக் கொண்டிருக்கிறோம். இந்தத் தமிழ் மொழிக்கு செம்மொழி என்கின்ற அந்தஸ்தைப் பெற்றுத் தந்தவர் கலைஞர் என்பதை யாரும் மறுக்கமுடியாது.இன்றைக்கு நாங்கள் நீதியரசர்கள் வந்திருக்கக்கூடிய இந்தச் சூழ்நிலையை பயன்படுத்தி இந்த வேண்டுகோளை வைத்திருக்கிறோம் தவிர வேறோன்றுமில்லை. மற்றொரு வேண்டுகோள் மணமக்களுக்கு நான் வைக்கவேண்டிய வேண்டுகோள். உங்களுக்கு பிறக்கக்கூடிய குழந்தைகளுக்கு அழகான தமிழ்ப் பெயர்களை சூட்டுங்கள். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

 

The post உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழியாக வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: