கல்லூரி திறந்த முதல் நாளே அட்டகாசம் பேருந்து மேற்கூரை மீது ஏறி மாணவர்கள் கடும் ரகளை: வியாசர்பாடியில் பரபரப்பு

பெரம்பூர், ஜூன் 17: சென்னையில் பேருந்துகள் மற்றும் ரயில்களில் கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள், பாட்டு பாடி, நடனமாடியபடி பயணிகளுக்கு தொந்தரவு செய்வது தொடர்கதையாகி வருகிறது. ஏற்கனவே பஸ் டே கொண்டாடிய வழக்கு, ரூட்டு தல வழக்கு, ரயில் நிலையத்தில் இருதரப்பு மாணவர்கள் மோதல் வழக்கு என பல்வேறு வழக்குகள் மாணவர்கள் மீது பதியப்பட்டு, சிலர் கல்லூரிகளை விட்டும் நீக்கப்பட்டு உள்ளனர். பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இருப்பினும் ஒவ்வொரு ஆண்டும் கல்லூரி மாணவர்களின் அட்டகாசம் தொடர்ந்து வருகிறது. இந்நிலையில், கோடை விடுமுறை முடிந்து கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் நேற்று தொடங்கின. மாணவ, மாணவியர் முதல் நாளில் உற்சாகமாக கல்லூரிகளுக்கு வந்தனர்.

இந்நிலையில், செங்குன்றம் காரனோடை அடுத்த எருமைவெட்டி பாளையம் பகுதியில் இருந்து பிராட்வே நோக்கி தடம் எண் 57 ஹெச் என்ற மாநகர பேருந்து சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து வியாசர்பாடி அம்பேத்கர் கல்லூரி சாலையை கடந்து சென்றபோது இந்த பேருந்தில் பயணம் செய்த சுமார் 15க்கும் மேற்பட்ட பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள், பேருந்தின் மேற்கூரை மீது ஏறி ரகளையில் ஈடுபட்டனர். இதை பார்த்து பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர் ஆகியோர் அந்த மாணவர்களை கண்டித்துள்ளனர். ஆனாலும், அவர்கள் தொடர்ந்து ரகளையில் ஈடுபட்டபடி வந்தனர். பேருந்து வியாசர்பாடி மேம்பாலம் பகுதி வழியாக மூலக்கொத்தளம் நோக்கி சென்றபோது பேருந்தில் பயணம் செய்த சில மாணவர்கள் கீழே இறங்கி ஓட தொடங்கினர்.

சில மாணவர்கள் தொடர்ந்து பேருந்தின் மேற்கூரை மீது ஏறி அட்டகாசத்தில் ஈடுபட்டனர். இதனை அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் தங்களது செல்போனில் வீடியோ எடுத்தனர். ஒரு கட்டத்தில் பேருந்து ஓட்டுனர் வாகனத்தை நிறுத்தியதும், வீடியோ எடுப்பதை பார்த்த மாணவர்கள் உடனடியாக பேருந்தின் மேற்கூரையில் இருந்து கீழே இறங்கி, பேருந்தின் உள்ளே சென்றனர். சிலர் அங்கிருந்து ஓட ஆரம்பித்தனர். சிறிது நேரம் கழித்து பேருந்தை மீண்டும் பேருந்து ஓட்டுனர் இயக்கினார். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. வியாசர்பாடி போலீசார் சமூக வலைதளங்களில் வெளியான வீடியோக்களை வைத்து அட்டகாசத்தில் ஈடுபட்ட மாணவர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post கல்லூரி திறந்த முதல் நாளே அட்டகாசம் பேருந்து மேற்கூரை மீது ஏறி மாணவர்கள் கடும் ரகளை: வியாசர்பாடியில் பரபரப்பு appeared first on Dinakaran.

Related Stories: