அயர்லாந்து அணிக்கு எதிராக வெஸ்ட் இண்டீஸ் விஸ்வரூபம்: டி20 தொடரை கைப்பற்றி அபாரம்

டப்ளின்: வெஸ்ட் இண்டீஸ் அணி, அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடியது. முதல் இரு போட்டிகள் மழையால் கைவிடப்பட்டதால், இரு அணிகளும் சம நிலையில் இருந்தன. இந்நிலையில், 3வது டி20 போட்டி, டப்ளினில் நடந்தது. முதலில் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி துவக்கம் முதல் வெளுத்து வாங்கத் துவங்கியதால், ரன்கள் மளமளவென உயர்ந்தன. 10.3 ஓவரில் அணியின் ஸ்கோர், 122 ஆக இருந்தபோது, சாய் ஹோப் (27 பந்து, 51 ரன்) ஆட்டமிழந்தார். பின் வந்த ரோமேன் பாவல் 2 ரன்னில் வீழ்ந்தார். மறுபுறம் நிலைத்து ஆடிக் கொண்டிருந்த துவக்க வீரர் எவின் லுாயிஸ் தொடர்ந்து அதிரடியாக ரன் குவிப்பில் ஈடுபட்டார்.

13வது ஒவரில் எவின் (44 பந்து, 8 சிக்சர், 7 பவுண்டரி, 91 ரன்) ஆட்டமிழந்தார். பின் வந்தோரில் கீஸி கார்டி 49 ரன் எடுத்தார். 20 ஓவர் முடிவில், வெஸ்ட் இண்டீஸ் அணி, 5 விக்கெட் இழப்புக்கு 256 ரன் குவித்தது. அதையடுத்து, 257 ரன் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் அயர்லாந்து ஆட்டத்தை துவக்கியது. அந்த அணியின் வீரர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். 20 ஓவர் முடிவில், அயர்லாந்து அணி 7 விக்கெட் இழப்புக்கு 194 ரன் மட்டுமே எடுத்தது. அதனால், 62 ரன் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அபார வெற்றி பெற்று, 1-0 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றியது. ஆட்ட நாயகனாக அதிரடி வீரர் எவின் லுாயிஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

The post அயர்லாந்து அணிக்கு எதிராக வெஸ்ட் இண்டீஸ் விஸ்வரூபம்: டி20 தொடரை கைப்பற்றி அபாரம் appeared first on Dinakaran.

Related Stories: