ஈரான்-இஸ்ரேல் மோதல் பாக். பலுசிஸ்தானில் பெட்ரோல் தட்டுப்பாடு

கராச்சி: ஈரான், ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டி பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணம் அமைந்துள்ளது. இங்கு, ஈரான்-இஸ்ரேல் மோதல் காரணமாக, ஈரானில் இருந்து கடத்தப்படும் பெட்ரோல், டீசல் அடியோடு நின்று விட்டது. இதனால் கடத்தல் ஈரான் பெட்ரோலை நம்பி உள்ள பல பெட்ரோல் பங்குகள் மூடப்பட்டுள்ளன. இது அம்மாகாணத்தில் பெரும் பெட்ரோல் தட்டுப்பாட்டை ஏற்படுத்தி உள்ளது. பல மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்தும் பெட்ரோல் கிடைக்காமல் பல பங்குகளில் இருந்து மக்கள் விரக்தியுடன் வெளியேறி வருகின்றனர். பல பெட்ரோல் பங்குகள் எரிபொருள் இல்லாமல் மூடப்பட்டு விட்டன.

மக்ரான், ரக்ஷன் மற்றும் சாகாய் பகுதிகள் வழியாக ஈரானிய கடத்தல் எரிபொருள் விநியோகம் நிறுத்தப்பட்டதால் சுமார் 60 முதல் 70 சதவீத பெட்ரோல் பங்குகள் மூடப்பட்டுள்ளன. பஞ்ச்கூர், குவாடர் மாவட்டங்களில் ஈரானுடன் எல்லைகளை பகிரும் பகுதிகள் பாதுகாப்பு காரணத்திற்காக சீல் வைக்கப்பட்டுள்ளன. இவ்வழியாக எரிபொருள் மட்டுமின்ற ஈரானிய உணவு வகைகளும் கொண்டு வரப்படுவது வழக்கம். இதனால், பலுசிஸ்தான் மக்களிடையே பீதி ஏற்பட்டுள்ளது. இந்த தட்டுப்பாட்டை ஒட்டி, பாகிஸ்தான் அரசு பெட்ரோல், டீசல் விலையை முறையே ரூ.4.80 மற்றும் ரூ.7.95 அதிகரித்துள்ளது. ஆனால் இந்த தட்டுப்பாடு போரால் ஏற்படவில்லை என்றும், சமீபத்தில் ஈரான் கடத்தல் பெட்ரோல் விற்க தடை விதிக்கப்பட்டதால், பாதிக்கப்பட்டவர்கள் தடையை நீக்குவதற்காக, பொய் செய்திகளை வெளியிடுவதாகவும் கூறப்படுகிறது.

The post ஈரான்-இஸ்ரேல் மோதல் பாக். பலுசிஸ்தானில் பெட்ரோல் தட்டுப்பாடு appeared first on Dinakaran.

Related Stories: