தீவிரமடைந்து வரும் ஈரான் – இஸ்ரேல் போர்: இந்திய மாணவர்களை மீட்க ஒன்றிய அரசு திட்டம்

ஈரான்: ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையேயான போர் தீவிரமடைந்து வரும் நிலையில் இந்தியர்களை பாதுகாப்பாக மீட்க இந்தியா திட்டமிட்டுள்ளது. இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போர் 4வது நாளாக நீடித்து வருகிறது. இன்று அதிகாலை இஸ்ரேல் மீது ஈரான் மீண்டும் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்திய நிலையில், போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தைக்கு ஈரான் மறுப்பு தெரிவித்துள்ளது. ஈரானில் உள்ள அணுசக்தி மையங்கள் மற்றும் ராணுவ மையங்கள் மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில், ஈரானும் இஸ்ரேலை கடுமையாக தாக்கி வருகிறது. இருநாடுகளும் பரஸ்பரமாக வான்வழி தாக்குதலை நடத்தி வருகின்றன.

டெல் அவிவ் அருகே உள்ள மத்திய இஸ்ரேலிய நகரமான பெட்டா டிக்வாவில் நகரை, ஈரானிய ஏவுகணைகள் தாக்கின. அங்குள்ள ஒரு குடியிருப்பு கட்டிடத்தை ஏவுகணைகள் தாக்கியதில், அந்த கட்டிடங்கள் பெரிதும் சேதமடைந்தன. மேலும் ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலில் டெல் அவிவில் உள்ள அமெரிக்க துணை தூதரகம் சேதம் அடைந்துள்ளது. இதனால் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இதனிடையே ஈரான் மற்றும் இஸ்ரேலில் வசிக்கும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்கும்படி இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

மேலும் உதவி தேவைப்படுவோர் தொடர்பு கொள்ள உதவி எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளது. இரு நாடுகளுக்கு இடையே தாக்குதல் தீவிரமடைந்துள்ள நிலையில், தங்களை உடனடியாக அழைத்துக் கொள்ளுமாறு ஒன்றிய அரசுக்கு ஈரானில் உள்ள இந்திய மாணவர்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த நிலையில், இந்தியர்களை பாதுகாப்பாக மீட்க இந்தியா திட்டமிட்டுள்ளது. முன்னதாக, ஈரானில் உள்ள இந்தியர்களை பேருந்து மூலம் அர்மேனியா எல்லைக்கு அழைத்து வந்து அங்கிருந்து விமானம் (அ) கப்பல் மூலம் அழைத்துவர திட்டமிடப்பட்டுள்ளது. ஈரானில் ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த மாணவர்கள் பெருமளவில் உள்ளனர். அவர்களை வெளியேற்ற முன்னுரிமை அளிக்கப்படவுள்ளது.

 

The post தீவிரமடைந்து வரும் ஈரான் – இஸ்ரேல் போர்: இந்திய மாணவர்களை மீட்க ஒன்றிய அரசு திட்டம் appeared first on Dinakaran.

Related Stories: