அகமதாபாத் விமான விபத்து; ஒன்றிய உள்துறை செயலாளர் தலைமையில் உயர்மட்ட குழு இன்று விசாரணை

அகமதாபாத்: அகமதாபாத் விமான விபத்து தொடர்பாக ஒன்றிய உள்துறை அமைச்சர் தலைமையிலான உயர்மட்ட குழு கூட்டம் இன்று பிற்பகல் தொடங்குகிறது. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், அகமதாபாத் விமான நிலையம் அருகே கடந்த 12ம் தேதி விபத்துக்குள்ளானது. இதில் விமானத்தில் பயணித்த 241 பேர் உள்பட மொத்தம் 274 பேர் உயிரிழந்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விபத்து நடந்த பகுதியில் பிரதமர் மோடி நேரில் ஆய்வு செய்தார். மேலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினார். இதனிடையே, உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.1 கோடி நிவாரணமாக ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது. விபத்தில் சிக்கிய விமானத்தின் கருப்பு பெட்டியை மீட்டு, விபத்துக்கான காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், 274 பேரை பலி கொண்ட விமான விபத்துக்கான காரணம் குறித்து விசாரிக்க, உயர்மட்ட விசாரணை குழுவை ஒன்றிய விமான போக்குவரத்து துறை அமைத்துள்ளது. இந்த குழுவின் முதல் கூட்டம் டெல்லியில் ஒன்றிய உள்துறை செயலாளர் தலைமையில் இன்று பிற்பகல் நடக்கிறது.

இந்த குழுவின் உறுப்பினர்களில் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சக செயலாளர், உள்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள், குஜராத்தின் உள்துறை மற்றும் மாநில பேரிடர் மீட்பு ஆணைய அதிகாரிகள், அகமதாபாத் காவல் ஆணையர், இந்திய விமானப்படையில் ஆய்வு மற்றும் பாதுகாப்பு இயக்குநர் ஜெனரல் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்துப் பாதுகாப்புப் பணியகத்தின் இயக்குநர் ஜெனரல் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இந்த குழுவினர், 270 பேர் கொல்லப்பட்ட விபத்துக்கான காரணங்களை விவரிக்கும் அறிக்கையை 3 மாதங்களுக்குள் சமர்ப்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் கே.ராம் மோகன் நாயுடு நேற்று தெரிவித்தார்.

இந்த குழுவானது, விபத்துக்கான காரணம் என்ன என்பதை ஆய்வு செய்து, நிலையான செயல்பாட்டு நடைமுறைகள் மற்றும் பாதுகாப்பு வழிகாட்டுதல்களை உருவாக்க நடவடிக்கை எடுக்கும். எதிர்காலத்தில் இதுபோன்ற நிகழ்வுகளைக் கையாள்வதற்கான விரிவான வழிகாட்டுதல்களை பரிந்துரைக்கும் என்று ஒன்றிய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தற்செயலாக வீடியோ எடுத்த சிறுவன் அதிர்ச்சி; அகமதாபாத்தில் விமான விபத்து ஏற்பட்ட வீடியோ காட்சி உலகம் முழவதும் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவை செல்போனில் எடுத்தது அகமதாபாத் விமான நிலையம் அருகே வாடகை வீட்டில் குடியிருக்கும் 17 வயது சிறுவன் ஆர்யன் என தெரியவந்துள்ளது. அவன், விமானம் அருகில் பறந்து செல்வதை தற்செயலாக படம் பிடித்துள்ளான். விமானம், கீழே விழுந்து ராட்சத தீப்பிழப்பு வெளிப்பட்டதை பார்த்து அதிர்ச்சியடைந்தான்.

தான் செல்போனில் பதிவு செய்த 24 நொடி வீடியோவை, முதலில் தனது சகோதரியிடம் கடும் அதிர்ச்சியுடன் காட்டியுள்ளான். அதன்பிறகே உலகம் முழுவதும் வைரலாக பரவ தொடங்கியது. இதையடுத்து அந்த சிறுவனை போலீசார் விசாரணைக்கு அழைத்தனர். அவன், தனது தந்தையுடன் வந்து சாட்சியம் அளித்தான். அவன் கூறுகையில், ‘விமான அருகில் பறந்து செல்வதை தற்செயலாக படம் பிடித்தேன். அது விழுந்து தீப்பிழப்பு வெளியானதை பார்த்து பயந்துவிட்டேன். இந்த வீடியோவை எனது சகோதரிதான் முதலில் பார்த்தார்’ என்றான். அதன்பின் ஆர்யனை போலீசார் அனுப்பி வைத்தனர். அவனது சகோதரி கூறுகையில், ‘விமான விபத்தை பார்த்து ஆர்யன் மிகவும் பயந்துபோய் பேச முடியாத நிலையில் இருந்தான். விமானம் நிலையம் அருகே குடியிருந்தால் ஆபத்து, வேறு இடத்துக்கு செல்லலாம் என கூறினான். எதுவும் சாப்பிடாமல் இரவு முழுவதும் தூங்காமல் இருந்தான்’’ என்றார்.

விமானிகள் அறையில் இருந்து பேசப்பட்ட கடைசி வார்த்தைகள்;
அகமதாபாத் விமான விபத்தில் விமானிகள் அறையில் இருந்து பேசப்பட்ட கடைசி வார்த்தைகள் வெளிவந்துள்ளன. அதில், ‘உந்துசக்தி கிடைக்கவில்லை, விழப்போகிறது, மேடே மேடே மேடே’’ என்று அதிர்ச்சியுடன் விமானி கூறியுள்ளார். அடுத்த சில வினாடிகளில் அனைத்து தகவல் தொடர்புகளும் துண்டிக்கப்பட்டன. இதுகுறித்து விசாரணையுடன் தொடர்புடைய வட்டாரங்கள் கூறியதாவது:

பொதுவாக, பெரிய விமானங்கள், மேலே பறப்பதற்கான உந்துசக்தியை பெற ஓடுபாதையில் 2.5 கி.மீ. முதல் 3 கி.மீ. தூரம் ஓடினால் போதும். ஆனால், விபத்துக்குள்ளான விமானம், மொத்தம் உள்ள 3.5 கி.மீ. தூர ஓடுபாதையையும் ஓடிவிட்டது. இது கண்காணிப்பு கேமரா காட்சிகளில் தெரிகிறது. எனவே, விமானத்துக்கு போதிய உந்துசக்தி கிடைக்கவில்லை என தெரிகிறது.

இருப்பினும், கருப்பு பெட்டி தரவுகளை ஆய்வு செய்த பிறகே உறுதி செய்யப்படும். முன்கூட்டியே எந்த எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை. ஓடுபாதை மாற்றத்துக்கோ, உந்துசக்தி தொடர்பாகவோ வேண்டுகோள் விடுக்கப்படவில்லை. வானிலை சீராக இருந்தது. தெளிவாக பார்க்க முடிந்தது. வெப்பநிலை அதிகமாக இருந்தது. ஆனால், வரம்புக்குள் காணப்பட்டது. ராடார் குறைபாடு எதுவும் காணப்படவில்லை. இன்ஜின் கோளாறு கண்டறியப்படவில்லை.

அனைத்து தகவல் தொடர்பு மற்றும் பாதுகாப்பு விதிமுறைகள் பின்பற்றப்பட்டன. உந்துசக்தி கிடைக்காததற்கான காரணங்களை விமான தரவுகள், விமானிகள் அறை குரல் பதிவுகள் ஆகியவற்றில் இருந்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள். இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

The post அகமதாபாத் விமான விபத்து; ஒன்றிய உள்துறை செயலாளர் தலைமையில் உயர்மட்ட குழு இன்று விசாரணை appeared first on Dinakaran.

Related Stories: