நாமக்கல், ஜூன் 16: நாமக்கல் மாவட்டத்தில், 24 மையங்களில் நடைபெற்ற குரூப் 1 போட்டித்தேர்வில் 4620 பேர் பங்கேற்றனர். நாமக்கல் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில், குரூப்1 போட்டித்தேர்வு நேற்று 24 மையங்களில் நடைபெற்றது. 6,079 பேர் தேர்வெழுத தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. மேலும், மையங்களுக்கு காலை 6 மணி முதல் தேர்வர்கள் செல்வதற்கு ஏதுவாக அனைத்து தேர்வு கூடங்களுக்கும் பேருந்து வசதி மற்றும் தேர்வு மையங்களில் தேவையான குடிநீர், மின்சாரம், கழிவறை உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தேர்வு பணிகளில் 24 முதன்மை கண்காணிப்பாளர்கள், 6 நடமாடும் குழுக்கள், 24 ஆய்வு அலுவலர்கள் உட்பட கண்காணிப்பு குழுக்கள், பறக்கும் படைகள் மற்றும் ஆயுதம் ஏந்திய காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தொகுதி போட்டித்தேர்வினை, 4,620 தேர்வர்கள் எழுதினார்கள். 1,459 தேர்வர்கள் தேர்விற்கு வரவில்லை. நாமக்கல் அருகே நல்லிபாளையம் அரசினர் மேல்நிலைப்பள்ளி, பாப்பிநாயக்கன்பட்டி செல்வம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் ஏ.கே.சமுத்திரம் ஞானமணி தொழில்நுட்பக்கல்லூரி ஆகிய இடங்களில் நேற்று மாவட்ட கலெக்டர் உமா, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 1 பணியிடங்களுக்கான போட்டித்தேர்வு நடைபெற்று வருவதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து, தேர்வு மையங்களில் பார்வைத்திறன் குறைபாடு உடைய மாற்றுத்திறனாளி தேர்வர்களுக்கு ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு தேர்வு எழுதி வருவதை, கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
The post 24 மையங்களில் குரூப் 1 பணிக்கு முதல் நிலை தேர்வு appeared first on Dinakaran.