நீர்நிலை புறம்போக்கு, கோயில் நிலங்களை, தனியார் பெயரில் பத்திரப்பதிவு செய்வதை தடுக்க, தமிழ் நிலம் தகவல் தொகுப்பில், தனி அடையாள குறியீடு அளிக்கப்பட்டுள்ளது. மேலும், பதிவுத் துறை அதிகாரிகள், இதுபோன்ற சர்வே எண்களுக்கு வழிகாட்டி மதிப்புகளை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதில், அரசு நிலங்களை, தனியார் பெயரில் பத்திரப்பதிவு செய்வதை தடுக்க, புதிய வழிமுறையை பதிவுத் துறை கடைபிடிக்க தொடங்கி உள்ளது.
இதுகுறித்து பதிவுத் துறை அதிகாரிகள் கூறியதாவது: அரசுக்கு சொந்தமான நிலங்களை போலி ஆவணங்களை பயன்படுத்தி, தனியார் அபகரிப்பதை தடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். அதன்படி, அரசு நிலங்களுக்கு வழிகாட்டி மதிப்பு நீக்கப்பட்டுள்ளது. இதற்கு அடுத்தபடியாக, பத்திரப்பதிவுக்காக இணையதளத்தில், சொத்தின் சர்வே எண்ணை உள்ளீடு செய்யும்போது, அது அரசு நிலமா என்பதை தானியங்கி முறையில், ‘தமிழ் நிலம்’ தகவல் தொகுப்பில் சரிபார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
உதாரணமாக, ஒரு குறிப்பிட்ட சர்வே எண்ணை உள்ளீடு செய்யும்போது, அது அரசு சார்ந்த நிலமாக இருந்தால், பத்திரப்பதிவு தொடர்பாக அடுத்தடுத்த கட்டத்துக்கு செல்ல முடியாது. இதனால், பத்திரப்பதிவுக்கான டோக்கன் பெறும் முன்பே தடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. முறையான தனியார் நிலமாக இருந்தால் மட்டுமே, பத்திரப்பதிவுக்கான டோக்கன் கிடைக்கும். இதனால், அரசு நிலங்கள் அபகரிப்பு தடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
The post அரசு நிலங்களை தனியார் பெயரில் பதிவு செய்வதை தடுக்க புதிய வழிமுறை: பதிவுத்துறை அதிகாரிகள் தகவல் appeared first on Dinakaran.