தஞ்சையில் ரோடு ஷோ 2.5 கி.மீ. நடந்து சென்று மக்களை சந்தித்த முதல்வர்: பொதுமக்கள் திரண்டு உற்சாக வரவேற்பு, இன்று 2.5 லட்சம் பேருக்கு நலத்திட்ட உதவிகள்

தஞ்சாவூர்: தஞ்சையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று 2.5 கி.மீ. தூரம் ரோடு ஷோவாக நடந்து சென்று மக்களை சந்தித்தார். பின்னர் பழைய பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் கலைஞர் சிலையை திறந்து வைத்தார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று மாலை கல்லணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறந்து வைத்தார். பின்னர் அங்கிருந்து கார் மூலம் தஞ்சைக்கு சென்றார். தஞ்சைக்கு வரும் வழியில் தமிழ் பல்கலைக்கழகம் அருகே மத்திய மாவட்ட திமுக சார்பில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.

தஞ்சைக்கு வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் இரவு 8 மணிக்கு தஞ்சை மணிமண்டபம் பகுதியில் இருந்து ரோடு ஷோவாக நடந்து சென்றார். ரோடு ஷோ செல்லும் வழியில் பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்டார். தஞ்சை மணிமண்டபம், ரயிலடி, ஆற்று பாலம், வழியாக 2.5 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்றார். வழிநெடுக பொதுமக்கள், கட்சியினர் உற்சாகமாக முதல்வரை வரவேற்றனர். சில இடங்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின், பெண்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

பொதுமக்கள் அளித்த மனுக்களை பெற்றுக்கொண்டார். முதல்வர் நடந்து செல்லும்போது பொதுமக்களை பார்த்து கையசைத்தும், கைகூப்பி வணங்கியபடியும் சென்றார். பின்னர், தஞ்சை பழைய பேருந்து நிலையம் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த கலைஞரின் 9 அடி முழுஉருவ வெண்கல சிலையை முதல்வர் திறந்து வைத்தார். பின்னர் சுற்றுலா மாளிகைக்கு சென்று ஓய்வு எடுத்தார்.

இன்று தஞ்சாவூர் மன்னர் சரபோஜி அரசு கல்லூரி வளாகத்தில் காலை 11 மணியளவில் நடக்கும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் 2.25 லட்சம் பயனாளிகளுக்கு ரூ.558 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். மேலும், ரூ.1,194 கோடியில் புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டப் பணிகளையும் திறந்து வைக்கிறார். தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களுக்கான 100 சிற்றுந்துகளின் இயக்கத்தைக் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.

* டெல்டா கலெக்டர்களுடன் ஆலோசனை
முதல்வர் கல்லணை சுற்றுலா மாளிகையில், தஞ்சாவூர் கலெக்டர் பிரியங்கா பங்கஜம், திருவாரூர் கலெக்டர் மோகனச்சந்திரன், திருச்சி கலெக்டர் பிரதீப் குமார், மயிலாடுதுறை கலெக்டர் ஸ்ரீகாந்த், நாகை கலெக்டர் ஆகாஷ், புதுக்கோட்டை கலெக்டர் அருணா உள்ளிட்ட கலெக்டர்களுடன் ஆய்வு நடத்தியபோது, டெல்டா பகுதிகளில் தூர்வாரப்பட்டதன் விவரங்கள் குறித்தும், சாகுபடி விவரங்கள் குறித்தும் கேட்டறிந்தார். மேலும், தேவைக்கேற்ப நெல் கொள்முதல் நிலையங்கள் திறந்திடவும், விவசாய இடுபொருட்களான உரங்கள், விதைகள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகள் போன்றவை தேவையான அளவு இருப்பதை உறுதி செய்திடவும் அறிவுறுத்தினார்.

* அரசு மருத்துவமனையில் ஆய்வு
கல்லணையை திறந்து வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் காரில் தஞ்சாவூர் சென்றார். செல்லும் வழியில் திடீரென்று தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சென்றார். அங்கு அவசர சிகிச்சை பிரிவுக்கு சென்றார். அங்குள்ள நோயாளிகளிடம், நலம் விசாரித்து சிகிச்சை குறித்து விசாரித்தார்.

சிகிச்சை சிறந்த முறையில் அளிக்கப்படுகிறதா? என்று கேட்டறிந்தார். பின்னர் டீன் (பொறுப்பு) பாலசுப்பிரமணியன், உள்மருத்துவ அதிகாரி செல்வம் ஆகியோரிடம் மருத்துவமனை வசதிகள் குறித்து கேட்டறிந்தார். பின்னர், தஞ்சை பாலாஜி நகரில் உள்ள முன்னாள் எம்பி, எல்.கணேசன் வீட்டுக்கு சென்று, நலம் விசாரித்தார்.

The post தஞ்சையில் ரோடு ஷோ 2.5 கி.மீ. நடந்து சென்று மக்களை சந்தித்த முதல்வர்: பொதுமக்கள் திரண்டு உற்சாக வரவேற்பு, இன்று 2.5 லட்சம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் appeared first on Dinakaran.

Related Stories: