வள்ளுவர், வள்ளலார், அய்யா வைகுண்டரை விடவா…. பெரியார் பற்றி சீமான் மீண்டும் சர்ச்சை பேச்சு

திருச்செந்தூர்: வள்ளுவர், வள்ளலார், அய்யா வைகுண்டரை விடவா பெரியார் சமூக சீர்திருத்தம் செய்துவிட்டார் என்று சீமான் மீண்டும் சர்ச்சையை கிளப்பி பேசியுள்ளார். திருச்செந்தூரில் நாம் தமிழர் கட்சியின் வீர தமிழர் முன்னணி மற்றும் தெய்வ தமிழ் பேரவை ஆகியவற்றின் சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாவது: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஜூலை 7ம் தேதி தமிழில் குடமுழுக்கு நடத்த வேண்டும்.

இதையொட்டி அமைக்கப்படும் யாகசாலையில் 76 குண்டத்தில் ஏதாவது ஒரு குண்டத்திலாவது தமிழில் வேதம் சொல்லி குடமுழுக்கு நடத்த வேண்டும். இல்லை என்றால் மாநிலம் முழுவதும் உள்ள தொண்டர்களை திரட்டி கோயிலை முற்றுகையிடுவோம். அங்கே முருகன் சிலையை வைப்பதோடு ஓதுவார்களை கொண்டு தமிழில் நாங்களே குடமுழுக்கு நடத்துவோம். சமயத்தில் உள்ள 63 நாயன்மார்களும் தமிழர்களே.

தமிழுக்கு உழைத்த திருவள்ளுவர், சமூக முன்னேற்றத்திற்கு பாடுபட்ட வள்ளலார், அய்யா வைகுண்டர் இவர்களை விடவா பெரியார் சமூக சீர்திருத்தம் செய்து விட்டார். ஐயா காமராஜர் தான் பள்ளிக்கூடம் கொண்டு வந்து எல்லோரையும் படிக்க வைத்தவர். வட இந்தியாவில் ராமரை வைத்தும், கேரளாவில் ஐயப்பனை வைத்தும், ஒடிசாவில் பூரி ஜெகநாதரை வைத்தும் அரசியல் செய்தவர்கள். தமிழகத்தில் சிவனை வைத்து தான் அரசியல் செய்ய நினைத்தார்கள். அது எடுபடாததால் முருகனை வைத்து அரசியல் செய்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

* கள் குடிக்க பனை மரம் ஏறிய சீமான்
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே பெரியதாழை மேடு, எள்ளுவிளை வைரவ நாடார் தோட்டத்தில் பனையிலிருந்து கள் இறக்கும் போராட்டம் நாதக சார்பில் நேற்று நடந்தது. இதில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்று வரிசையாக கட்டப்பட்டிருந்த கம்பை பற்றிக்கொண்டு பனை மரம் ஏறினார். அவருக்கு உதவியாக பனை தொழிலாளர்கள் இருவரும் மரத்தில் ஏறினர். 5 நிமிடத்தில் கீழே இறங்கிய சீமான் மேடையில் ஏறி நிர்வாகிகளுடன் பட்டையில் கள் ஊற்றி அருந்தினார்.

சீமான் பேசுகையில் ‘‘பனை கள், தென்னை கள் வேளாண்மையோடு சேர்ந்தது. தமிழகத்தில் தேசிய பானமான கள் இறக்க அனுமதி மறுக்கப்பட்டதை உடைத்தெறிவோம். இதற்காக நாதக சார்பில் அனைத்து இடங்களிலும் பனை விதை விதைத்து வருகிறோம். கள் இறக்குவது எங்களது உரிமை. கள்ளுக்கான தடை மீட்டெடுப்பதே எங்களது கடமை. எனவே, இந்த விஷயத்தில் அனைவரும் ஒன்றுபட்டு வென்று காட்டுவோம்’’ என்றார்.

The post வள்ளுவர், வள்ளலார், அய்யா வைகுண்டரை விடவா…. பெரியார் பற்றி சீமான் மீண்டும் சர்ச்சை பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: