போலீசாரை பார்த்ததும் பாலத்தில் இருந்து குதித்து தப்ப முயற்சி காவல்நிலையத்தை சூறையாடியவர் கை, கால் உடைந்த நிலையில் கைது

பேரையூர்: மதுரை அருகே காவல் நிலையம் சூறையாடப்பட்ட சம்பவத்தில் தலைமறைவாக இருந்த இருவரும் நேற்று கைதானார்கள். முன்னதாக, ேபாலீசாரை பார்த்ததும் பாலத்தில் இருந்து குதித்து தப்ப முயன்றவரின் கை, கால் முறிந்தது. மதுரை மாவட்டம், பேரையூர் அருகே வெங்கடாசலபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரபாகரன் (29). சமீபத்தில் வாலிபர் கொலை வழக்கில் திண்டுக்கல் போலீசார் இவரை தேடி வந்ததாக தெரிகிறது.

ஜூன் 13ம் தேதி நள்ளிரவில் போதையில்நண்பர் அய்யனாருடன் (25) வி.சத்திரப்பட்டி காவல் நிலையத்திற்கு சென்ற பிரபாகரன், அங்கிருந்த ஏட்டு பால்பாண்டியை தாக்கி, அறைக்குள் வைத்து பூட்டி விட்டு, வாக்கி டாக்கி, கம்ப்யூட்டர் உள்ளிட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்களை அடித்து நொறுக்கி சேதப்படுத்திவிட்டு தப்பினர். இதுதொடர்பாக போலீசார் 4 தனிப்படைகள் அமைத்து பிரபாகரன் உள்ளிட்ட 2 பேரையும் தேடி வந்தனர்.

பிரபாகரனின் தந்தை முத்துவேலை திண்டுக்கல் மாவட்ட போலீசார், வழக்கு ஒன்றில் விசாரிப்பதற்காக அழைத்துச் சென்று, பிறகு விடுவித்திருக்கின்றனர். வாலிபர் கொலையில் தனக்கு பதில் தந்தையை வி.சத்திரப்பட்டி போலீசார் அழைத்துச் சென்றிருப்பதாக தவறாக கருதி, இதில் ஏற்பட்ட ஆத்திரத்திலேயே அந்த காவல்நிலையத்தை பிரபாகரன் சூறையாடியது தெரிந்தது.

இந்நிலையில் பிரபாகரன், அவரது நண்பர் அய்யனார் இருவரும் விருதுநகர் அருகே அல்லம்பட்டி பகுதியில் பதுங்கி இருந்தது தெரிந்தது. அவர்களை விருதுநகர் மாவட்ட போலீசார் நேற்று காலை விரட்டிப் பிடித்தனர். அப்போது தப்பி ஓடிய பிரபாகரன், அங்கிருந்த பாலத்தில் இருந்து கீழே குதித்ததில், வலது கை மற்றும் இடது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அய்யனாரும் தவறி விழுந்ததில் காயமடைந்தார். பின்னர் இருவரும் கைது செய்யப்பட்டு, பிரபாகரன் மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

* போலீஸ் இன்ஸ்பெக்டரை அதிமுக மாஜி அமைச்சர் மிரட்டும் வீடியோ வைரல்
காவல்நிலையம் சூறையாடப்பட்டதை அறிந்து அதிமுக முன்னாள் அமைச்சர் உதயகுமார் காவல் நிலையத்துக்கு ஆதரவாளர்களுடன் செல்ல முயன்றார். அவரை போலீசார் தடுத்தனர். அப்போது இன்ஸ்பெக்டரிடம், `‘நான் அங்கு போக தடை இருக்கா? என் தொகுதிக்குள் நான் வருவதை தடுக்க நீ யார்? மரியாதை கெட்டுப் போகும்..’’ என விரலை நீட்டி மிரட்டி பேசினார். இந்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

The post போலீசாரை பார்த்ததும் பாலத்தில் இருந்து குதித்து தப்ப முயற்சி காவல்நிலையத்தை சூறையாடியவர் கை, கால் உடைந்த நிலையில் கைது appeared first on Dinakaran.

Related Stories: