இந்நிலையில், மன்னார் வளைகுடா மற்றும் குமரி கடல் பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மேலும் கடலோரப் பகுதியில் பலத்த மழை பெய்யும் வாய்ப்பு உள்ளதால், மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. வானிலை எச்சரிக்கை காரணமாக மீன்பிடி அனுமதி டோக்கன் வழங்கப்படாது என மீன்வளத்துறை மீனவர்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பு செய்தனர். இதனால் பாம்பன் தெற்குவாடியில் 100 படகுகள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் கரை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. இதேபோல இன்று மன்னார் வளைகுடா கடல் பகுதியான தென்கடலுக்கு மீன் பிடிக்க செல்ல தயாராகி வந்த மண்டபம் மீனவர்களுக்கும் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியில் 200-க்கும் மேற்பட்ட படகுகள் கரைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளன.
டெல்டா மாவட்டங்கள் இதேபோல், நாகை மாவட்டத்தில் நாகை, வேளாங்கண்ணி, வேதாரண்யத்தில் 750 விசைப்படகுகள், மயிலாடுதுறை மாவட்டத்தில் பூம்புகார், கொள்ளிடம், சீர்காழி, தரங்கம்பாடியில் 1,500 விசைப்படகுகள், தஞ்சை மாவட்டத்தில் சேதுபாவாசத்திரம், மல்லிப்பட்டினம், அதிராம்பட்டினத்தில் 151 விசைப்படகுகள், புதுக்கோட்டை மாவட்டத்தில் ஜெகதாப்பட்டினம், கோட்டைப்பட்டினத்தில் 380 விசைப்படகுகள், காரைக்காலில் 300 விசைப்படகுகள் மீன்வளத்துறை உத்தரவால் இன்று கடலுக்கு செல்லவில்லை. நாளை (ஜூன் 16) பாக்ஜலசந்தி கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவுள்ள ராமேஸ்வரம் மீனவர்கள் படகுகளில் மீன்பிடி உபகரணங்களை ஏற்றி தயாராக உள்ளனர். கடலில் தொடர்ந்து பலத்த காற்று வீசி வருவதால் தடை ஏற்படுமோ என்ற குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர். 61 நாட்கள் தடைக்காலம் முடிந்து முதல் நாள் மீன்பிடிக்க செல்ல ஆர்வத்துடன் மீன்பிடி சாதனங்களை சேகரித்துக் கொண்டு மகிழ்ச்சியில் மீனவர்கள் இருந்தனர். ஆனால் வானிலை மையம் எச்சரிக்கையால் மீனவர்கள் ெபரும் ஏமாற்றம் அடைந்தனர்.
The post மீன்பிடி தடைக்காலம் முடிந்தும் கடலுக்கு செல்லமுடியாத மீனவர்கள் appeared first on Dinakaran.