ஆஸி.யை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற தென்ஆப்ரிக்கா; பவுமா இன்னிங்ஸை மக்கள் எளிதில் மறந்துவிட மாட்டார்கள்: ஆட்டநாயகன் மார்க்ரம் பேட்டி

லண்டன்: 3வது சீசன் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த பைனலில் தென்ஆப்ரிக்கா-ஆஸ்திரேலியா அணிகள் மோதின. முதல் இன்னிங்சில் முறையே ஆஸ்திரேலியா 212, தென்ஆப்ரிக்கா 138 ரன் எடுத்தன. 74ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலியா 207ரன்னுக்கு ஆல்அவுட் ஆனது. பின்னர் 282 ரன் இலக்குடன் களம் இறங்கிய தென்ஆப்ரிக்கா மார்க்ரம் 136 , கேப்டன் பவுமா 66ரன் அடிக்க 83.4 ஓவரில் 5 விக்கெட் இழந்து இலக்கை எட்டி 5விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று சாம்பியன் பட்டம் வென்றது. ஐசிசி தொடரில் 27 ஆண்டுக்கு பின் அந்த அணி பட்டம் வென்றுள்ளனது.

மார்க்ரம் ஆட்டநாயகன் விருது பெற்றார். தென்ஆப்ரிக்காவுக்கு ரூ.30.80கோடி பரிசுத்தொகை வழங்கப்பட்டது. ஆஸ்திரேலிய அணிக்கு 18.49 கோடி கிடைத்தது.வெற்றிக்கு பின் ஆட்டநாயகன் மார்க்ரம் அளித்த பேட்டி: ‘\”சில நேரங்களில் நடக்கும் விஷயங்கள் விசித்திரமாக இருக்கும். முதல் இன்னிங்ஸில் டக் அவுட் ஆனேன். ஆனால், இப்போது என்னால் அணியின் வெற்றிக்கு பங்களிக்க முடிந்தது. லார்ட்ஸ் மைதானத்தில் ஆட வேண்டும் என்பது ஒவ்வொரு டெஸ்ட் கிரிக்கெட்டரின் கனவாகும். பல தென்ஆப்ரிக்க ரசிகர்கள் இங்கு கூடியிருக்கின்றனர். எங்கள் வாழ்நாளில் மிகவும் சிறந்த நாட்களில் இதுவும் ஒன்று.

ஆஸ்திரேலியாவின் பந்துவீச்சு எவ்வளவு சிறப்பானது என்பது தெரியும். அதனால், அவற்றை எவ்வளவு சிறப்பாக ஸ்கோர் செய்ய முடியும் என யோசித்து ஆடினோம். நாதன் லயன் மிகச் சிறந்த பந்துவீச்சாளர். போட்டி 5வது நாளுக்கு சென்றால், அவரை எதிர்கொள்வது மிகவும் கடினமாகிஇருக்கும் என்றார். காயத்துடன் கேப்டன் பவுமா ஆடியது குறித்து பேசுகையில், உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், அந்த முடிவை முழுமையாக எடுத்தது அவரே. 3 ஆண்டுகளாக அணியை முன்னின்று வழிநடத்தியவர் அவர். களத்தை விட்டு வெளியேற அவருக்கு விருப்பமில்லை. காயத்துடன் முக்கியமான ரன்களைக் குவித்தார். அவரது இன்னிங்ஸை மக்கள் எளிதில் மறந்துவிட மாட்டார்கள் என்றார்.

 

The post ஆஸி.யை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற தென்ஆப்ரிக்கா; பவுமா இன்னிங்ஸை மக்கள் எளிதில் மறந்துவிட மாட்டார்கள்: ஆட்டநாயகன் மார்க்ரம் பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: