இவர், தனது நண்பருடன் நேற்று முன்தினம் நள்ளிரவில் மது போதையில் வி.சத்திரப்பட்டி காவல் நிலையம் வந்தார். அங்கு பணியில் இருந்த ஏட்டு பால்பாண்டியை அறைக்குள் போட்டு பூட்டி விட்டு, டேபிள் மேல் இருந்த அவரது செல்போன், வாக்கி டாக்கி, கம்ப்யூட்டர், டிவி, உள்ளிட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்களை அடித்து நொறுக்கி சேதப்படுத்தினர். பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
நேற்று காலை 6 மணிக்கு மேல் அங்கு வந்த சிலர் சத்தம் கேட்டு, காவல்நிலையத்திற்குள் சென்று அறைக்குள் சிக்கியிருந்த ஏட்டு பால்பாண்டியை மீட்டுள்ளனர். தகவலறிந்து மதுரை மாவட்ட எஸ்பி அரவிந்தன், உசிலம்பட்டி டிஎஸ்பி சந்திரசேகர், டி.கல்லுப்பட்டி இன்ஸ்பெக்டர் குருநாதன், பேரையூர் இன்ஸ்பெக்டர் சந்தனமாரி உள்ளிட்ட போலீசார் சென்று விசாரணை நடத்தினர்.
இதுகுறித்து எஸ்பி அரவிந்த் கூறும்போது, ‘‘பிரபாகரனின் தந்தை முத்துவேலை திண்டுக்கல் மாவட்ட போலீசார், வழக்கு ஒன்றில் விசாரிப்பதற்காக அழைத்துச் சென்றதாக தவறாக கருதி ஆத்திரத்தில் நண்பருடன் வந்து காவல் நிலையத்தில் இச்செயலில் ஈடுபட்டதாகத் தெரிகிறது. தலைமறைவாக உள்ள இருவரை கைது செய்ய உசிலம்பட்டி உட்கோட்ட டிஎஸ்பி தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படையினர் அவர்களை தேடி வருகின்றனர்’’ என்றார்.
* அத்தை மகளை காதலித்தவரை கொன்றவர்
பிரபாகரன் குறித்து போலீசார் கூறியதாவது: பிரபாகரன் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையிலுள்ளன. கடந்த ஆண்டு ஜூன் 26ல் தனது அத்தை மகளைக் காதலித்த அருப்புக்கோட்டையைச் சேர்ந்த வாலிபரை, தனது நண்பர்களுடன் சேர்ந்து கழுத்தை அறுத்து துண்டித்து, வி.சத்திரப்பட்டியிலுள்ள காட்டுப்பகுதியில் போட்டுள்ளார். இவ்வழக்கில் கைதாகி குண்டர் சட்டத்தில் சிறையிலிருந்த பிரபாகரன் கடந்த 2 மாதங்களுக்கு முன்புதான் ஜாமீனில் வெளிவந்துள்ளார்.
இதனால் இவரை போலீசார் இப்பகுதியில் இருக்கிறாரா என விசாரிப்பது வழக்கம். நேற்று முன்தினம் இரவு இவரது தந்தையை திண்டுக்கல் மாவட்ட போலீசார் வேறொரு வழக்கு விசாரணைக்கு அழைத்து விசாரித்து விடுவித்துள்ளனர். ஆனால் வி.சத்திரப்பட்டி போலீசார்தான் தன்னையும், தனது குடும்பத்தினர்களையும் அடிக்கடி துன்புறுத்துவதாக நினைத்து காவல்நிலையத்தை சூறையாடியுள்ளார். இவ்வாறு தெரிவித்தனர்.
* தடையை மீறி சென்ற அதிமுக எம்எல்ஏ கைது
அதிமுக முன்னாள் அமைச்சரும், மதுரை திருமங்கலம் தொகுதி எம்எல்ஏவுமான ஆர்.பி.உதயகுமார் தனது ஆதரவாளர்களுடன் வி.சத்திரப்பட்டி காவல்நிலையத்திற்கு புறப்பட்டு வந்தார். என்.முத்துலிங்காபுரம் என்ற இடத்திற்கு வந்தபோது போலீசார் அவரை தடுத்து நிறுத்தி, சம்பவ இடத்திற்கு சென்றால் சட்டம், ஒழுங்கு பாதிப்பு ஏற்படும் எனக் கூறினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஆர்.பி.உதயகுமார் மற்றும் அவரது ஆதரவாளர்கள் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதைத்தொடர்ந்து டி.கல்லுப்பட்டி போலீசார் ஆர்.பி.உதயகுமார், உள்ளிட்ட 50 பேரை கைது செய்து, ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். தகவலறிந்து அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, ராஜன் செல்லப்பா எம்எல்ஏ அங்கு வந்து அவரை சந்தித்தனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கைதானவர்கள் பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
* எடப்பாடி கண்டனம்
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவு: மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே வி.சத்திரப்பட்டி காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் புகுந்த மர்மநபர்கள், காவல் நிலையத்தைத் தாக்கி, சூறையாடியதாக வந்த செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.
இதனையடுத்து, எனது அறிவுறுத்தலின்படி, சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார் அக்காவல் நிலையத்தை பார்வையிடச் சென்றபோது, காவல்துறையால் தடுத்து நிறுத்தப்பட்டு, கைது செய்யப்பட்டுள்ளதற்கு கடும் கண்டனம். மக்களை காக்க வேண்டிய காவல்துறைக்கு, காவல் நிலையத்திற்கே பாதுகாப்பு இல்லை. வி.சத்திரப்பட்டி காவல் நிலைய தாக்குதலில் ஈடுபட்டோர் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
The post மதுரை அருகே நள்ளிரவில் அட்டகாசம் ஏட்டுவை அறைக்குள் தள்ளி பூட்டி காவல் நிலையம் சூறை: தப்பிய போதை வாலிபர்களுக்கு வலை appeared first on Dinakaran.