அமித்ஷா இந்தியில் கூறியதால் அது புரியாமல் எடப்பாடி பழனிசாமி கண்டுகொள்ளவில்லை. பின்னர் கூட்டணி ஆட்சி என்று அமித்ஷா சொல்லவில்லை என்று எடப்பாடியும், அதிமுக தலைவர்களும் கூறிவந்தனர். இந்நிலையில், கடந்த 7ம் தேதி மதுரை வந்த அமித்ஷா பாஜ நிர்வாகிகள் கூட்டத்தில் தமிழகத்தில் பாஜ-அதிமுக கூட்டணி ஆட்சிதான் என்று உறுதிபடக் கூறினார். இதனால் அதிமுகவினர் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்நிலையில் பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில் கூட்டணியில் 78 இடங்களை பெற வேண்டும் என்று கூறியிருந்தார். இது அதிமுக முன்னணி தலைவர்களை எரிச்சல் அடைய வைத்துள்ளது. ஆனாலும் எடப்பாடி, இதுகுறித்து அண்ணாமலைக்கு யாரும் பதில் அளிக்க வேண்டாம் என்று அதிமுகவினரிடம் கூறி இருந்தார். பாஜ தலைவர் நயினார் நாகேந்திரனும், அண்ணாமலை பற்றி மேலிடத்தில் புகார் செய்கிறேன், அதிமுகவினர் அவர் பேச்சை கண்டுகொள்ள வேண்டாம் என்று சமரசம் செய்துள்ளார்.
இந்நிலையில், பாஜ முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், ‘‘2026ல் கூட்டணி ஆட்சி என நான் சொல்ல மாட்டேன். பாஜ ஆட்சி என்றுதான் சொல்வேன்’’ என்று தெரிவித்திருந்தார். இது அதிமுகவினர் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. நேற்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசி ஒரு வீடியோ வெளியிட்டு இருந்தார். இதில் அண்ணாமலையை மறைமுகமாக விமர்சித்துள்ளார்.
வீடியோவில் ஆர்.பி.உதயகுமார் பேசி இருப்பதாவது: ஒன்றிய தலைமை தெள்ளத்தெளிவாக மக்களுக்கு அறிவித்திருக்கிறது. டெல்லிக்கு தலைமை மோடி. தமிழ்நாட்டுக்கு எடப்பாடி பழனிசாமியின் தலைமையில் மகத்தான மாபெரும் வெற்றி கூட்டணி. இதில் யாருக்கும் எந்த சந்தேகமும் இல்லை. மக்களுக்கும் சந்தேகம் இல்லை. எங்களுக்கும் சந்தேகமில்லை. ஆனால் சிலர் இருப்பிடத்தை தக்கவைத்துக் கொள்ள, தாங்கள் இருப்பதை காட்டிக் கொள்ள, கருத்து சுதந்திரத்தின் அடிப்படையிலே கருத்து சொல்வதை நாம் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை.
எடப்பாடி பழனிசாமி தலைமையில் தான் அதிமுக ஆட்சி மலரும். எடப்பாடி பழனிசாமி தலைமையில் தான் மகத்தான கூட்டணி. இதுதான் தமிழ்நாட்டு மக்களுடைய எதிர்பார்ப்பு. குழப்பமான எந்தவிதமான கருத்து மாறுபாடு, வேறுபாடு இல்லை. அதற்கான தேவையும் இல்லை. அதற்கான விவாதம் தேவை இல்லை. தெளிவாக இருக்கிறோம். எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக முன்னிறுத்துவோம். இதிலே எந்தவிதமான இடையூறும் இல்லை. இவ்வாறு பேசியுள்ளார்.
* கூட்டணி ஆட்சி தமிழகத்தில் அமித்ஷா சொல்வதே நடக்கும்: வானதி சீனிவாசன்
திருப்பூரில் நேற்று பாஜ தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் எம்எல்ஏ அளித்த பேட்டி: கீழடி விவகாரத்தில் மத்திய தொல்லியல் துறை ஆரம்பத்தில் ஆராய்ச்சி செய்தது. இது தொடர்பாக ஆவணங்களை பெற வேண்டும். இதற்காக சில தாமதங்கள் ஆகலாம். இதில் எந்த உள்நோக்கமும் கிடையாது. தேசிய கட்சியில் தேசிய தலைவர் எடுக்கும் முடிவுக்கு அனைவரும் கட்டுப்பட வேண்டும். 2026-ல் பாஜ தலைமையிலான ஆட்சி என அண்ணாமலை கூறியது, அவரது தனிப்பட்ட கருத்து. கட்சியின் நிலைப்பாடு ஒன்று தான். அதில் எந்த மாற்றமும் கிடையாது.
உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னையில் கூட்டணியின் போது கூறியபடி தான் நடைபெறும். அதிமுக தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தலைமை வகிக்கும். இதற்கு எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்குவார் என அறிவித்தார். இதில், எந்த மாற்று கருத்தும் கிடையாது. கூட்டணி அமைச்சரவை, கூட்டணி அரசு குறித்து தேசிய தலைமை என்ன முடிவு எடுக்கிறதோ அது தான் தமிழக பாஜ. இவ்வாறு அவர் கூறினார்.
* எடப்பாடியுடன் பாஜ துணை தலைவர் திடீர் சந்திப்பு
சேலத்தில் எடப்பாடி பழனிசாமியை, அவரது வீட்டில் நேற்று பாஜ மாநில துணை தலைவரும், சேலம் பெருங்கோட்ட தலைவருமான கே.பி.ராமலிங்கம் சந்தித்து பேசினார். பின்னர், அவர் நிருபர்களிடம் கூறியதாவது: வரும் 2026ம் ஆண்டு நடக்கும் சட்டமன்ற தேர்தலில், தேசிய ஜனநாயக கூட்டணி, எடப்பாடி பழனிசாமி தலைமையில் தான் போட்டியிடும். தற்போதுள்ள அரசியல் நிலவரம் குறித்து அவரிடம் பேசினேன். மதுரையில் நடக்கும் முருகர் மாநாட்டில் கலந்து கொள்வதற்கு பழனிசாமிக்கு அழைப்பு விடுத்தேன்.
பாஜவுக்கு எத்தனை தொகுதி ஒதுக்கப்படும் என தேசிய தலைமையும், பழனிசாமியும் தான் முடிவு செய்வார்கள். எந்த கட்சியுடன் கூட்டணி, வேட்பாளர்கள் யார்? யாருக்கு எத்தனை சீட் என்பது போன்ற அனைத்து முடிவுகளையும், பழனிசாமி தான் எடுப்பார். அவரது தலைமையில் புதிய ஆட்சி அமையும். அதற்கு பாஜ உதவியாக இருக்கும்,’ என்றார். தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா கூட்டணி ஆட்சி வரும் என அண்ணாமலை சொல்கிறாரே என்ற கேள்விக்கு, அவரவர் கட்சி ஆட்சிக்கு வர வேண்டும் என்று அனைவரும் விரும்புவர். அவருடைய ஆசையும் அப்படித்தான் என்றார்.
The post எடப்பாடி தலைமையில் அதிமுக ஆட்சிதான் இருப்பிடத்தை தக்க வைக்க பேசுறவங்களை கண்டுக்காதீங்க…அண்ணாமலைக்கு ஆர்பி.உதயகுமார் பதிலடி appeared first on Dinakaran.