* புதிய நிர்வாகிகளுடன் தைலாபுரத்தில் இன்று ராமதாஸ் ஆலோசனை, பொதுக்குழுவில் யாரும் பங்கேற்க கூடாது என உத்தரவு, நடைபயணத்தையும் முறியடிக்க புதிய வியூகம்
திண்டிவனம்: சென்னையில் மாவட்ட செயலாளர்களுடன் அன்புமணி நடத்திய கூட்டத்துக்கு போட்டியாக தைலாபுரம் தோட்டத்தில் ராமதாஸ் இன்று ஆலோசனை கூட்டத்தை நடத்துகிறார். இந்த கூட்டத்தில் அன்புமணியின் மாவட்ட பொதுக்குழு மற்றும் 100 நாள் நடைபயண திட்டத்தை முறியடிக்க புதிய நிர்வாகிகளுக்கு அதிரடி கட்டளை பிறப்பிக்க உள்ளார். தந்தை, மகன் போட்டி கூட்டத்தால் பாமக இரண்டாக உடையும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
பாமகவில் தந்தை ராமதாசுக்கும், மகன் அன்புமணிக்கும் இடையேயான மோதல் ஒரு முடிவுக்கு வராமல் நாளுக்கு நாள் வலுத்துக்கொண்டே செல்கிறது. கட்சியின் எதிர்கால நலன் கருதி சீனியர் நிர்வாகிகள் சமாதான பேச்சுவார்த்தை நடத்தியும் மோதலை முடிவுக்கு கொண்டு வரமுடியவில்லை. பாஜ தூதர்கள் அன்புமணிக்கு ஆதரவாக பேசி பார்த்தும் ராமதாஸ் அசைந்து கொடுக்கவில்லை. தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்ற கருத்தை ஏற்று செயல் தலைவர் பதவியை அன்புமணி ஏற்றால் பிரச்னை ஒரு முடிவுக்கு வரும் என்று ராமதாஸ் எதிர்பார்க்கிறார்.
ஆனால் எந்த காரணம் கொண்டும் தலைவர் பதவியை விட்டுக்கொடுக்க மாட்டேன் என அன்புமணி முரண்டு பிடித்து வருவதால் மோதல் வலுத்துக்கொண்டே செல்கிறது. 2026 வரை நான் தலைவர் என்று முதலில் கூறிய ராமதாஸ், அன்புமணியின் பிடிவாத குணத்தால் என் மூச்சு இருக்கும் வரை நான் தான் தலைவர் என்று கோபம் கொப்பளிக்க கூறும் அளவுக்கு கட்சியில் நிலைமை கைமீறி போய்விட்டது. இனி சமாதானம் பேசி பயனில்லை என சீனியர் தலைவர்கள் ஒதுங்கி நின்று வேடிக்கை பார்க்க துவங்கிவிட்டனர்.
தினமும் ராமதாசை சந்தித்து பேசி வந்த கட்சியின் கவுரவ தலைவர் ஜி.கே.மணி கடந்த ஒரு வாரமாக தைலாபுரம் வருவதை தவிர்த்துவிட்டார். முன்னாள் பாமக தலைவர் தீரன், வன்னியர் சங்க தலைவர் அருள்மொழி ஆகியோரையும் தோட்டம் பக்கம் காணமுடியவில்லை. கட்சியை தன் முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர ராமதாஸ் தினம்தோறும் நிர்வாகிகளை நியமித்து வருகிறார். இதுவரை 57 மாவட்ட செயலாளர்களையும், 35 மாவட்ட தலைவர்களையும் அவர் நியமித்துள்ளார்.
இது மட்டுமல்லாமல் நேற்று மயிலாடுதுறை மற்றும் கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்டங்களுக்கு ஒன்றிய செயலாளர்கள், தலைவர்கள் என 30க்கும் மேற்பட்ட புதிய நிர்வாகிகளை நியமித்துள்ளார். ராமதாஸ் ஒரு பக்கம் புதிய நிர்வாகிகளை நியமனம் செய்து வரும் அதே வேளையில் கட்சியை தன் கைப்பிடிக்குள் கொண்டு வர அன்புமணியும் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். சென்னை பனையூரில் அன்புமணி தொடர்ந்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு வழக்கறிஞர் சமூக நீதி பேரவை கூட்டத்தை கூட்டி ராமதாசால் பதவி நீக்கம் செய்யப்பட்ட வக்கீல் பாலுவை மீண்டும் தலைவராக தேர்வு செய்தார். நேற்று முன்தினம் பாமக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை கூட்டி ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில்தான், மக்கள் உரிமை மீட்பு என்ற பெயரில் அன்புமணி 100 நாள் நடைபயணம் செல்வது குறித்து ஆலோசித்து முடிவு செய்து அறிவிக்கப்பட்டது. கட்சியின் அடிமட்ட தொண்டர்களுடன் தொடர்பில்லாதவர்.
மேல்மட்ட அரசியல் செய்பவர் என்ற குறையை போக்க தந்தை வழியில் கிராமம் கிரமமாக சென்று கட்சியில் தன் செல்வாக்கை வளர்த்துக்கொள்ளவே அன்புமணி இந்த நடைபயண அஸ்திரத்தை கையில் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. அன்புமணி ஏற்கனவே மாவட்ட வாரியாக சென்று பொதுக்குழு கூட்டத்தை கூட்டி புதிய நிர்வாகிகளை நியமிக்க போவதாக அறிவித்திருந்தார். முதல்கட்டமாக 10 மாவட்டங்களுக்கு அவர் சுற்றுப்பயணம் செய்ய உள்ளார்.
இந்த பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் தலைவராக அன்புமணி தொடர சிறப்பு தீர்மானம் நிறைவேற்ற திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதன்படி இன்று காலை திருவள்ளூர் மாவட்டத்திலும் மாலை செங்கல்பட்டு மாவட்டத்திலும் பொதுக்குழு கூட்டம் நடக்கிறது. நாளை காஞ்சிபுரத்திலும், ராணிப்பேட்டையிலும் கூட்டம் நடக்கிறது. இந்த 10 மாவட்டங்கள் முடிந்ததும் அடுத்து 2ம் கட்ட சுற்றுப்பயணத்துக்கும் அவர் தயாராகி வருகிறார். இந்த கூட்டங்களில் ஒவ்வொரு மாவட்ட செயலாளர்கள், தலைவர்கள், ஒன்றிய நகர செயலாளர்கள் புதிதாக தேர்வு செய்து பொதுக்குழுவில் ஒப்புதல் பெற ஏற்பாடு செய்துள்ளார்.
இந்த பரபரப்பான சூழ்நிலையில் தான் தைலாபுரம் தோட்டத்தில் ராமதாஸ் தலைமையில் புதிய நிர்வாகிகள் கூட்டம் இன்று நடக்கிறது. இறுதி மூச்சு உள்ளவரை கட்சிக்கு தலைவராக செயல்பட போவதாக ராமதாஸ் கூறி உள்ளதால் கட்சியின் பொதுக்குழுவை விரைவில் கூட்ட வேண்டிய கட்டாய சூழ்நிலைக்கு அவர் தள்ளப்பட்டுள்ளார். இது குறித்து அவர் இன்று நடக்கும் கூட்டத்தில் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார். தற்போது உள்ள பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன், அன்புமணி முகாமுக்கு தாவி விட்டதால் புதிய பொதுச்செயலாளராக யாரை தேர்வு செய்வது என்பது குறித்தும் அவர் ஆலோசிக்க உள்ளார்.
இதுமட்டுமல்லாமல் அன்புமணி அறிவித்துள்ள 100 நாள் நடைபயணம் மற்றும் மாவட்ட வாரியாக அவர் நடத்த உள்ள பொதுக்குழு கூட்டத்தை முறியடிக்கவும் புதிய நிர்வாகிகளுக்கு ராமதாஸ் அதிரடி கட்டளைகளை பிறப்பிக்க உள்ளதாக கூறப்படுகிறது. அன்புமணி கூட்டும் கூட்டத்தில் எந்த நிர்வாகியும் கலந்துகொள்ள கூடாது என்று அதிரடி உத்தரவையும் அவர் பிறப்பிக்க உள்ளதாக கூறப்படுகிறது. நிறுவனரும் நானே.. தலைவரும் நானே… என்ற விஷயத்தை கட்சி தொண்டர்களுக்கு புதிய நிர்வாகிகள் கிராமம் கிராமமாக, வார்டு வார்டாக சென்று சந்தித்து கூற வேண்டும். இனி கட்சியில் எல்லாமே நான் தான்.
இதை மனதில் கொண்டு செயல்பட வேண்டும் என்றும் அவர் கட்சிக்கார்களுக்கு உத்தரவு பிறப்பிக்க உள்ளதாக தெரிகிறது. பாமகவில் இப்படி தந்தை, மகன் போட்டி போட்டு அதிரடியாக நிர்வாகிகளை நியமிப்பதும், நீக்குவதுமாக இருப்பதால் கட்சி தொண்டர்கள் கடும் விரக்தியில் உள்ளனர். போட்டி உச்சகட்டத்துக்கு சென்றுவிட்டதால் ஒவ்வொரு நிர்வாகியும் ஏதாவது ஒரு நிலைப்பாட்டை கையில் எடுக்க வேண்டிய கட்டாய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஏதாவது ஒரு பக்கம் செல்ல வேண்டும் என்ற இக்கட்டான சூழ்நிலை நிலவுவதால் பாமகவில் செங்குத்தான பிளவு ஏற்பட்டு கட்சி இரண்டாக உடையும் நிலையில் உள்ளது.
* அன்புமணி நியமித்த புதிய தலைமை நிலைய செயலாளர்
பாமகவின் புதிய செய்தி தொடர்பாளராகவும், தனிச்செயலாளராகவும் சுவாமிநாதனை ராமதாஸ் நியமித்து உத்தரவு பிறப்பித்த நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அன்புமணியும் ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளார். பாமகவுக்கு புதிய தலைமை நிலைய செயலாளரை அவர் நியமித்து உத்தரவு பிறப்பித்துள்ளார். கடலூர் மாவட்டம் பி.என்.பாளையத்தை சேர்ந்த மீ.கா.செல்வகுமார் என்பவரை புதிய தலைமை நிலைய செயலாளராக அன்புமணி நியமித்துள்ளார்.
ஏற்கனவே அன்பழகன் என்பவர் தான் தலைமை நிலைய செயலாளராக இருந்து வருகிறார். இவர் ராமதாசுக்கு வலதுகரமாக செயல்பட்டு வருகிறார். தினமும் தைலாபுரம் தோட்டதுக்கு வந்து கட்சி பணியில் ஈடுபட்டு வருகிறார். யார் யாருக்கு பதவி கொடுக்க வேண்டும் என்று அன்பழகன் தான் முடிவு செய்து ராமதாசுக்கு பரிந்துரை செய்வார். அதற்கு ராமதாஸ் ஒப்புதல் கொடுத்து அறிவிப்பு வெளியிட்டு வருகிறார். இந்த அன்பழகன் மீது தான், லட்சக்கணக்கில் பணம் வாங்கிக்கொண்டு பதவி கொடுத்து வருவதாக அன்புமணி குற்றம்சாட்டி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
* அன்புமணியின் மாஜி உதவியாளருக்கு செய்தி தொடர்பாளர் பதவி
ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சராக அன்புமணி இருந்தபோது அவருக்கு உதவியாளராக இருந்த சுவாமிநாதன் நேற்று தைலாபுரம் தோட்டம் வந்து ராமதாசை சந்தித்து பேசினார். இந்த சந்திப்புக்கு பின் சுவாமிநாதனை தனது தனிச்செயலாளராகவும், பாமக செய்தி தொடர்பாளராகவும் நியமனம் செய்து ராமதாஸ் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இந்த உத்தரவின் நகல் செயல் தலைவர் என்று குறிப்பிட்டு அன்புமணிக்கும் அனுப்பப்பட்டுள்ளது.
* பாமக பொதுச்செயலாளர் முரளிசங்கர்?
பாமகவில் பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன் அன்புமணி பக்கம் தாவி விட்டதால் அவரை மாற்ற ராமதாஸ் முடிவு செய்துள்ளார். நேற்றுமுன்தினம் பாமக மாநில மாணவர் அணி தலைவரான தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த முரளிசங்கர், ராமதாசை தைலாபுரம் தோட்டத்தில் சந்தித்து பேசினார். பாமக பொதுச்செயலாளராக தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவரே புதிதாக நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் பரவி வரும் நிலையில் தற்போது முரளிசங்கர் அப்பதவிக்கு நியமிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
* பேராசிரியர் தீரனை வளைத்த அன்புமணி
ராமதாசுக்கு ஆதரவாக உள்ள மூத்த நிர்வாகிகளை தன்பக்கம் இழுக்கும் முயற்சியில் அன்புமணி ஈடுபட்டு வருகிறார். இவரது முதல் தூண்டிலுக்கு இரையானவர் பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன். தீவிர ராமதாஸ் ஆதரவாளரான இவரை அன்புமணி தன் பக்கம் வளைத்து விட்டார். அணி மாறிய வடிவேல் ராவணனை கடந்த 3 நாட்களுக்கு முன்பு நடந்த செய்தியாளர் சந்திப்பில் சகட்டுமேனிக்கு விளாசி தள்ளி தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார் ராமதாஸ்.
இந்நிலையில் பாமகவின் முன்னாள் தலைவர் தீரனும் அன்புமணி பக்கம் தாவிவிட்டார். விழுப்புரம் கிழக்கு மாவட்ட பாமக நிர்வாகிகள் நேற்று அன்புமணியை சந்தித்தனர். அப்போது பாமக மாஜி தலைவரும் மாநில அரசியல் ஆலோசனை குழு உறுப்பினருமான பேராசிரியர் தீரனும் உடன் இருந்தார். ராமதாசுக்கு பக்கபலமாக இருக்கும் சீனியர் தலைவர்கள் ஒவ்வொருவராக அன்புமணி தன் பக்கம் இழுத்து வருவதாக கட்சியினர் தெரிவித்தனர்.
* அன்புமணி நடைபயண பேனரில் ராமதாஸ் படம் அதிரடியாக நீக்கம்
அன்புமணி ஜூலை 25ம் தேதி செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் தனது நடைபயணத்தை துவங்கி நவம்பர் 1ம் ேததி வரை 100 நாட்கள் மேற்கொள்கிறார். இந்த நடைபயண அறிவிப்பு நோட்டீஸ் மற்றும் பேனர்கள் அனைத்திலும் அன்புமணி படம் மட்டுமே இடம்பெற்றுள்ளது. கட்சியின் நிறுவனரான ராமதாஸ் படம் இடம் பெறவில்லை. எங்கள் குல சாமி என்று ராமதாசை வர்ணித்த அன்புமணி அவரது படத்தை போடாமல் புறக்கணித்துள்ளது பாமக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
* அன்புமணிதான் பாமக தலைவர்: திலகபாமா
அன்புமணியால் பொருளாளராக அறிவிக்கப்பட்ட திலகபாமா, நேற்று சிவகாசியில் அளித்த பேட்டி: பாமகவின் தலைவர் அன்புமணி தான். ராமதாஸ் வழிகாட்டுதலின்படி தான் எல்லா நிகழ்ச்சிகளும் நடந்தேறும். இவ்வாறு கூறினார். உரிமை மீட்பு நடை பயணத்தில் ராமதாஸ் படம் இடம் பெறவில்லையே என்ற கேள்விக்கு ‘‘குற்றம் சொல்ல முடிவு செய்தால் ஒன்றும் செய்ய முடியாது’’ என்றார்.
The post இரண்டாக உடையும் பாமக அன்புமணி தலைமையில் இன்று முதல் மாவட்ட பொதுக்குழு கூட்டம்: தலைவர் பதவியில் தொடர தீர்மானம்? செல்வாக்கை நிரூபிக்க கிராமம் கிராமமாக செல்கிறார் appeared first on Dinakaran.