மாலை 4 மணியளவில் டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் இருந்து புறப்பட்டு மாநகராட்சி அலுவலகம் எதிரே முடிந்தது. அங்கு பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திருமாவளவன் பேசியதாவது: மற்ற கட்சிகள் தேர்தல் கூட்டணி குறித்தும், எத்தனை தொகுதிகள் குறித்தும் பேசி கொண்டிருக்கிறார்கள். அது குறித்து நாம் கவலைப்படுவதில்லை. திமுகவிடம் சிக்கிக்கொண்டு தவிக்கிறது என சில அறிவாளிகள் பேசுகிறார்கள். தமிழ்நாடு அரசியலின் திசை வழியை தீர்மானிப்பவர்கள் விடுதலை சிறுத்தைகள். அகில இந்திய அளவில் மதச்சார்பின்மைக்கு எதிரானவர்கள் மதச்சார்பின்மைக்கு ஆதரவானவர்கள் என்கிற கூர்மைப்படுத்தும் அரசியலை வி.சி.க.தான் செய்து வருகிறது.
முதலமைச்சர் பதவி குறித்து கவலைப்படுபவர்கள் அல்ல நாங்கள். எந்த நேரத்தில் எதை செய்ய வேண்டும் என்பது எங்களுக்கு தெரியும். அரசியல் களத்தில் சம காலத்தில் எங்களோடு புறப்பட்டவர்கள் வழி தவறி காணாமல் போய் விட்டார்கள். ஆனால் வி.சி.க தவிர்க்க முடியாத அரசியல் கட்சியாக உள்ளது. எங்களுக்கு யாருடைய ஆலோசனைகளும் தேவையில்லை. எதை எப்பொழுது செய்ய வேண்டும் என்பது குறித்து எங்களுக்கு தெரியும். ஒரு முடிவை எடுத்து தெளிவாக இருக்கிறோம்.
அதனால் தான் திமுக கூட்டணியில் இருக்கிறோம். திமுக உடன் நாம் கொண்டுள்ள உறவு கொள்கை உறவு. திமுக அரசுடன் எங்களுக்கு இருக்கும் விமர்சனங்களை தாண்டி கூட்டணி வைத்திருப்பது தொலைநோக்கு பார்வையுடன் கூடியது. பாஜ திட்டத்தை செயல்படுத்த பலர் பல வேஷம் போட்டு வந்துள்ளார்கள். சிலர் சினிமா புகழோடு நடிகர் போர்வையில் வேஷம் போட்டு வந்துள்ளார்கள். தலித்கள் அவர் பின் சென்று விடுவார்கள் என சிலர் கூறுகிறார்கள்.
அம்பேத்கரை தலைவராக ஏற்றுக்கொண்டவர்கள் வி.சி.கவினர். வி.சி.கவினர் எப்பக்கமோ அப்பக்கமே வெற்றி, அப்பக்கமே ஆட்சி. தொகுதி எத்தனை என்பது முக்கியமல்ல நம் கொள்கை தான் முக்கியம். சங்பரிவார்கள் அம்பேத்கரை கொண்டாடுவார்கள் ஆனால் அவர் இயற்றிய சட்டத்தை காலில் தூக்கி போட்டு மிதிப்பார்கள். முக்கியமாக, நம்மை எந்த சக்திகளாலும் வீழ்த்த முடியாது. தற்காலிக அரசியல் பயனுக்காக எந்த தவறான முடிவையும் எடுக்க மாட்டோம். நமக்கு இந்த நாடு முக்கியம்.
இவ்வாறு அவர் பேசினார்.
* 12 தீர்மானங்கள் நிறைவேற்றம்
பேரணியில் சமீபத்தில் அகமதாபாத்தில் ஏற்பட்ட விமான விபத்தில் பலியானோருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர், 12 தீர்மானங்காள் நிறைவேற்றப்பட்டன. அதில், இந்தியாவை மதச்சார்பற்ற நாடாகப் பாதுகாப்போம், வக்பு திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும், குடியுரிமைத் திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும், தேசிய மக்கள் தொகைப் பதிவேடு (NPR), தேசிய குடிமக்கள் பேரேடு (NRC) ஆகியன தயாரிப்பதைக் கைவிட வேண்டும், மதவாத வன்முறைத் தடுப்புச் சட்டத்தை நிறைவேற்ற வேண்டும், கும்பல் கொலைகளைப் பயங்கரவாதக் குற்றமாக அறிவித்திட வேண்டும், ஜம்மு-காஷ்மீரை மீண்டும் மாநிலமாக அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
The post தற்காலிக அரசியலுக்காக தவறான முடிவு எடுக்க மாட்டோம் திமுக – விசிக உறவு கொள்கை உறவு: திருச்சி பேரணியில் திருமாவளவன் பேச்சு appeared first on Dinakaran.