ராணிப்பேட்டை அருகே பரபரப்பு பாமக நிர்வாகியை சுட்டுக்கொலை செய்த குற்றவாளியை சுட்டுப்பிடித்த போலீசார்: கைத்துப்பாக்கியுடன் தப்பி ஓடியதால் அதிரடி

ராணிப்பேட்டை: பாமக நிர்வாகி சுட்டுக்கொலை செய்யப்பட்ட வழக்கில் கைத்துப்பாக்கியுடன் தப்பி ஓடிய குற்றவாளியை போலீசார் சுட்டுப்பிடித்த சம்பவம் சிப்காட் அருகே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரை சேர்ந்தவர் சக்கரவர்த்தி(48). வழக்கறிஞரான இவர் பாமகவில் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட இளைஞரணி தலைவராக இருந்தார். கடந்த 11ம் தேதி சோளிங்கர்- அரக்கோணம் செல்லும் சாலையோரத்தில் இறந்து கிடந்தார். முதலில் விபத்து வழக்காக பதிவு செய்தனர்.

அப்போது சமூக வலைதளங்களில் வெளியான சிசிடிவி காட்சியில் வேகத்தடை மீது ஏறி இறங்கும்போது டூ வீலரில் 2 மர்ம நபர்கள் சக்கரவர்த்தியின் பைக்கை பின்தொடர்ந்து சென்றதும், சிறிது நேரத்தில் அவர் பைக்குடன் சரிந்து விழுந்ததும் தெரியவந்தது. இதனால், அவரை திட்டமிட்டு கொலை செய்திருக்கலாம் என்று கூறி குற்றவாளிகளை கைது செய்யக்கோரி பாமகவினர் கடந்த 12ம் தேதி சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தனிப்படை விசாரணையில், சக்கரவர்த்தி பைக்குக்கு அருகில் சென்று கொண்டிருந்தவர்கள் சிப்காட் அடுத்த வசூர், மேல்பள்ளேரி கிராமத்தை சேர்ந்த பிரபு(28), சோளிங்கர் அருகே ரெண்டாடி குப்புக்கல்மேடு மாதவன்(26) ஆகியோர் என தெரியவந்தது. அவர்கள் ராணிப்பேட்டை சிப்காட் அருகே பெல் ஆன்சிலரி பகுதியில் இருப்பதாக தகவல் கிடைத்து நேற்று மாலை போலீசார் அங்கு சென்றனர். அங்கிருந்த பிரபு, மாதவன், செங்கல்நத்தம் துரைமுருகன்(22) ஆகிய 3 பேரையும் போலீசார் மடக்கினர்.

அப்போது பிரபு போலீஸ் பிடியில் இருந்து தப்பி ஓடினார். அவர் கைத்துப்பாக்கி வைத்திருப்பதும் தெரியவந்தது. இதனால் சோளிங்கர் இன்ஸ்பெக்டர் ராமசந்திரன் துப்பாக்கியால் பிரபுவின் இடது கால் முட்டியில் இரண்டு முறை சுட்டார். இதில் குண்டுகள் பாய்ந்து கீழே விழுந்த பிரபுவை மடக்கி அவரிடமிருந்து 6 எம்எம் துப்பாக்கியை பறிமுதல் செய்தனர். பின்னர் வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பிடிப்பட்ட மாதவன், துரைமுருகன் ஆகியோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘முன்விரோதம் காரணமாக வழக்கறிஞர் சக்கரவர்த்தி கொலை செய்யப்பட்டிருப்பதாக தெரிகிறது. சம்பவத்தன்று அவரை பின்தொடர்ந்து சென்றவர்கள் ஏர்கன் பயன்படுத்தி தலையில் சுட்டதாக தெரிகிறது. இதில் கீழே விழுந்தவர் படுகாயமடைந்து உயிரிழந்துள்ளார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பிரபுவிடமும் சில விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளது’ என்றனர். குற்றவாளிகள் நேற்று கைது செய்யப்பட்ட நிலையில, பாமக நிர்வாகிகள் சோளிங்கர் காவல் நிலையத்தில் முற்றுகையிட்டனர்.

* 5 நாய்கள் விஷம் வைத்து கொலை
கொலை செய்யப்பட்ட பாமக நிர்வாகி சக்கரவர்த்தி வசிக்கும் தெருவில், கொலை திட்டத்துக்காக மர்மநபர்கள் கடந்த 9ம் தேதி இரவு சென்று உளவு பார்த்துள்ளனர். அப்போது நாய்கள் குரைத்ததால், உணவில் விஷம் கலந்து நாய்களுக்கு வைத்துள்ளனர். இதில் 5 நாய்கள் கடந்த 10ம் தேதி மர்மமான முறையில் இறந்து கிடந்தது. தற்போது போலீசார் விசாரணையில் நாய்கள் திட்டமிட்டு விஷம் வைத்து கொல்லப்பட்டது தெரியவந்தது.

* கொலையாளிகளை ஜாமீனில் எடுத்ததால் கொலையா?
தற்போது போலீசாரால் சுட்டு பிடிக்கப்பட்ட பிரபு பெற்றோரிடம் ஏற்பட்ட தகராறில் வீட்டிலிருந்து வெளியேறி, சோளிங்கர் அடுத்த ரெண்டாடி குப்புக்கல்மேடு கிராமத்தை சேர்ந்த சிக்கன் கடை நடத்தி வந்த சீனு என்பவரது வீட்டில் தங்கி வருகிறார். கட்டப்பஞ்சாயத்து, ரவுடியிசம் உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த சீனு கடந்த மார்ச் மாதம் கொலை செய்யப்பட்டார்.

இதில் 8 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்கள் ஜாமீனில் வெளிவந்துள்ளனர். இதற்கு வழக்கறிஞரும், பாமக நிர்வாகியுமான சக்கரவர்த்தி உதவியதாக தெரிகிறது. அதில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக சக்கரவர்த்தி கொலை செய்யப்பட்டாரா? எனவும் போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது.

The post ராணிப்பேட்டை அருகே பரபரப்பு பாமக நிர்வாகியை சுட்டுக்கொலை செய்த குற்றவாளியை சுட்டுப்பிடித்த போலீசார்: கைத்துப்பாக்கியுடன் தப்பி ஓடியதால் அதிரடி appeared first on Dinakaran.

Related Stories: