உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் தென் ஆப்ரிக்கா சாம்பியன்: திகில் போட்டியில் தூசியான ஆஸி

லண்டன்: ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில், தென் ஆப்ரிக்கா 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி, கடந்த 11ம் தேதி லண்டனில் லார்ட்ஸ் மைதானத்தில் ஆஸ்திரேலியா- தென் ஆப்ரிக்கா அணிகள் இடையே துவங்கியது. முதல் நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணி 212 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது.

அடுத்து ஆடிய தென் ஆப்ரிக்கா முதல் இன்னிங்சில் 138 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதைத் தொடர்ந்து, 2வது இன்னிங்சை தொடர்ந்த ஆஸ்திரேலியா, ரபாடா, லுங்கி நிகிடி ஆகியோரின் மந்திரப் பந்து வீச்சில் சிக்கி 207 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. அதைத் தொடர்ந்து, 282 ரன் வெற்றி இலக்குடன் 2வது இன்னிங்சை ஆடிய தென் ஆப்ரிக்கா, 3ம் நாள் ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 213 ரன் எடுத்திருந்தது. அய்டன் மார்க்ரம் 102, டெம்பா பவுமா 65 ரன்னுடன் களத்தில் இருந்தனர்.

இந்நிலையில், நேற்று 4ம் நாள் ஆட்டத்தை தென் ஆப்ரிக்கா தொடர்ந்தது. சிறிது நேரத்தில் அதிர்ச்சி அளிக்கும் வகையில், கேப்டன் டெம்பா பவுமா (66 ரன்) ஆட்டமிழந்தார். பின் வந்த டிரிஸ்டன் ஸ்டப்ஸ் (8 ரன்) மிட்செல் ஸ்டார்க் பந்தில் வீழ்ந்து தென் ஆப்ரிக்கா ரசிகர்களை கலங்கடித்தார். இருப்பினும், மறுபுறம் நங்கூரமாய் நிலைத்து ஆடிக் கொண்டிருந்த அய்டன் மார்க்ரம் அணியை திறம்பட நடத்தி வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.

வெற்றிக்கு இன்னும் 6 ரன்களே தேவைப்பட்ட நிலையில், ஹசல்வுட் பந்தில், மார்க்ரம் (207 பந்து, 14 சிக்சர், 136 ரன்) ஆட்டமிழந்தார். பின் இணை சேர்ந்த டேவிட் பெடிங்காம் (21 ரன்), கைல் வெரைனி (4 ரன்) பொறுப்புடன் ஆடி வெற்றி எல்லையை தொட்டு பிடித்தனர். அதனால், 83.4 ஓவரில் தென் ஆப்ரிக்கா 5 விக்கெட் இழப்புக்கு 282 ரன் எடுத்து, 5 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தலாக வரலாற்று சிறப்பு வாய்ந்த வெற்றியை முதல் முறையாக பதிவு செய்தது. ஆஸி தரப்பில், மிட்செல் ஸ்டார்க் 3, ஹசல்வுட், பேட் கம்மின்ஸ் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

* சோதனையை சாதனையாக மாற்றிய தென் ஆப்ரிக்கா
கடந்த 2021ல் நடந்த முதல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை போட்டியில் இந்தியாவை வீழ்த்தி நியூசிலாந்து கோப்பையை வென்றது. நியூசிலாந்து வென்ற ஒரே ஐசிசி உலக கோப்பை அது மட்டும்தான். அடுத்து, 2023ல் நடந்த 2வது உலக கோப்பையில் இறுதி ஆட்டத்துக்கு நடப்பு சாம்பியன் நியூசிலாந்து தகுதி பெறவில்லை. அந்த இறுதி ஆட்டத்தில் 2வது முறையாக களமிறங்கிய இந்தியாவை வென்று ஆஸி புதிய டெஸ்ட் சாம்பியன் ஆனது.

அதைத் தொடர்ந்து தற்போது நடந்த 3வது டெஸ்ட் உலக கோப்பைக்கு இந்தியா தகுதி பெறவில்லை. ஆனால் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா 2வது முறையாக இறுதி ஆட்டத்தில் களம் கண்டது. இப்போட்டியில் முதல் முறையாக தென் ஆப்ரிக்கா களம் இறங்கியது. தென் ஆப்ரிக்கா அணி, இதுவரை, எந்தவொரு ஐசிசி உலகக் கோப்பையையும் வென்றதில்லை என்பதால், தற்போதைய போட்டியில் ஆஸ்திரேலியா வென்று கோப்பையை தக்க வைக்கும் என்ற எதிர்பார்ப்பு காணப்பட்டது. அதை பொய்ப்பிக்கும் வகையில், ஆஸ்திரேலியா தோற்று வெளியேற, தென் ஆப்ரிக்க புதிய உலக டெஸ்ட் சாம்பியனாக உருவெடுத்து சாதனை படைத்துள்ளது.

* நூறு அடிச்ச காட்டாறு மார்க்ரமின் புது வரலாறு: 4ம் இன்னிங்சில் முதல் முறை
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் 4வது இன்னிங்சில் சதம் விளாசிய முதல் வீரர் என்ற சாதனையை, தென் ஆப்ரிக்கா வீரர் அய்டன் மார்க்ரம் அரங்கேற்றி உள்ளார். ஆஸி அணிக்கு எதிரான முதல் இன்னிங்சில் டக் அவுட் ஆன அவர், 2வது இன்னிங்சில் விஸ்வரூபம் எடுத்து சதம் விளாசினார். இதன் மூலம், ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் 4வது இன்னிங்சில் சதம் விளாசிய ஒரே வீரர் என்ற பெருமையை அடைந்துள்ளார்.

* 27 ஆண்டுக்கு பின் வென்ற ஐசிசி கோப்பை
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் வென்று சாம்பியன் பட்டம் வென்ற தென் ஆப்ரிக்கா அணி, இதற்கு முன், கடைசியாக, கடந்த 1998ம் ஆண்டு நடந்த ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியை வென்றது. அதன் பின் அந்த அணியால் பெரியளவில் கோப்பை எதையும் வெல்ல முடியவில்லை. இந்நிலையில், 27 ஆண்டுக்கு பின் முதல் முறையாக, ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை வசப்படுத்தி உள்ளது. மீண்டும் புத்துணர்ச்சி பெற்ற அணியாக நிமிர்ந்து எழுந்துள்ள தென் ஆப்ரிக்கா அணிக்கு, கிரிக்கெட் உலகினர் மட்டும் அல்லாது பல்வேறு தரப்பினர் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.

The post உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் தென் ஆப்ரிக்கா சாம்பியன்: திகில் போட்டியில் தூசியான ஆஸி appeared first on Dinakaran.

Related Stories: