இந்த நிலையில் தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்ற பழைய மொழியையே முன்வைத்து ராமதாஸ் பேசி வருவதற்கான காரணம் குறித்து அக்கட்சி வட்டாரத்தில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி வருகின்றன. குடும்பத்தில் மட்டுமின்றி கட்சியின் முக்கிய நிகழ்வுகளிலும் அன்புமணியின் தனிப்பட்ட அதிகார தலையீடு காரணமாக தனது மதிப்பு குறைந்ததன் விளைவாகவே ராமதாஸ் கட்சியை முழுமையாக தன் கட்டுப்பாட்டில் எடுத்து தானே அதிகாரம் செலுத்த முடிவெடுத்து உள்ளதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கூட்டணி விவகாரத்திலும் தனக்குத் தெரியாமலே நடந்த சில நிகழ்வுகள், தன் சொல்லை மீறி செயல்படும் அன்புமணியின் செயல்பாடு ஆகியவை தான் அன்புமணி மீதான கோபம் ராமதாசுக்கு அதிகரிக்க முக்கிய காரணமாக தைலாபுரம் தோட்ட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பாமகவில் தனியாக ஒரு கோஷ்டியை அன்புமணி உருவாக்கி தனி வழியில் பயணித்தது தொடர்பாக ராமதாசுக்கு வந்த அடுத்தடுத்த புகார்களின் அடிப்படையிலேயே வரும் 2026 சட்டமன்றத் தேர்தலை தனது தலைமையில் சந்திக்க ராமதாஸ் முடிவெடுத்ததாகவும், இதன் மூலம் பாமகவில் அதிருப்தியில் இருக்கின்ற பல்வேறு மாஜி நிர்வாகிகளை சமாதானப்படுத்தி மீண்டும் கட்சியில் அவர்களுக்கு பதவிகளை வழங்கி கட்சியை வலுப்பெற செய்வதற்கான நடவடிக்கையில் மேற்கொண்டு வருவதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், அன்புமணியும் தனக்கு ஆதரவான மாவட்ட செயலாளர்கள், தலைவர்கள், மாநில நிர்வாகிகளை அழைத்து நேற்றும் ஆலோசனை நடத்தி இருக்கிறார். மேலும், ஜூலை மாதம் நடக்க இருக்கும் அன்புமணியின் நடைபயணம் குறித்தும் ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருவதாக பாமக தலைமை அலுவலக செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ராமதாசின் எந்த குற்றச்சாட்டையும் அன்புமணி ஏற்க தயாராக இல்லை என்று தெரிகிறது. இதனால் பாமகவின் எதிர்காலம் கேள்விக்குறி ஆகி வருவது மட்டுமின்றி கட்சி இரண்டாக உடையுமா? என்ற கேள்வியும் அரசியல் வட்டாரத்தில் பரவலாக எழுந்துள்ளது.
The post அன்புமணி தனியாக ஆலோசனை பாமக இரண்டாக உடைய வாய்ப்பு?: பரபரப்பு தகவல்கள் appeared first on Dinakaran.