இந்த வார விசேஷங்கள்

14.6.2025 – சனி சங்கடஹர சதுர்த்தி

ஸ்திர வாரமான சனிக்கிழமை சங்கடஹர சதுர்த்தி வருகிறது. சங்கடஹர சதுர்த்தி விரதம் என்பது, விநாயகப் பெருமானை வேண்டி விரதம் இருக்க உகந்த நாள் ஆகும். வாழ்வில் சேரும் சகல சங்கடங்களையும் நீக்கும் சதுர்த்தி விரதம். சங்கடஹர சதுர்த்தி அன்று, காலையில் குளித்துவிட்டு, அருகிலுள்ள விநாயகர் ஆலயத்துக்குச் செல்ல வேண்டும். பிள்ளையாரை 11 முறை வலம் வர வேண்டும். அறுகம்புல் கொடுத்து, விநாயகருக்கு அர்ச்சனை செய்தல் நல்லது. பின்னர் தோப்புக்கரணம் போட்டும் விநாயகரை வணங்க வேண்டும். கணபதியோடு பசு வழிபாடு செய்வது கூடுதல் நன்மை தரும்.

14.6.2025 – சனி – அரியக்குடி சீனிவாசப் பெருமாள் தெப்பம்

அரியக்குடி திருவேங்கடமுடையான் கோயில் காரைக்குடி அருகில் அரியக்குடி புறநகர்ப் பகுதியில் அமையப் பெற்றுள்ள ஒரு பெருமாள் கோயில் ஆகும் காரைக்குடியில் ஒரு தென்திருப்பதி என்று இக்கோயில் அழைக்கப்படுகிறது .இக்கோயிலின் மூலவர் திருவேங் கடமுடையான் மற்றும் தாயார் அலர்மேல்மங்கை ஆவர். உற்சவர் சீனிவாச பெருமாள் மற்றும் உற்சவ தாயார்கள் ஸ்ரீ தேவி மற்றும் பூதேவி ஆவர். இக்கோயிலின் கருடாழ்வார் தனது இருபுறமும் சிம்மங் களுடன் காட்சியளிக்கிறார். ஆண்டாள், சக்கரத்தாழ்வார், ஆஞ்சநேயர் ஆகியோரும் இக்கோயிலில் அருள்பாலிக்கின்றனர். மகாவிஷ்ணுவின் பத்து அவதாரங்களை நினைவூட்டும் சித்திரங்களைக் கொண்ட தசா வதார மண்டபம் ஒன்று இங்கு அமைக்கப்பட்டுள்ளது வைகாசி பிரம் மோற்சவத்தில் இன்று தெப்பம் நடைபெற உள்ளது.

14.6.2025 – சனி குமரகுருபரர் குருபூஜை

குமரகுருபர ஸ்வாமிகள் 17 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ்ப் புலவர் ஆவார். திருநெல்வேலி மாவட்டம் வைகுண்டத்தைச் சேர்ந்த சண்முக சிகாமணிக் கவிராயருக்கும், சிவகாம சுந்தரிக்கும் மகனாய்ப் பிறந்தவர். திருச்செந்தூர் செந்தில் வேலன் அருளால் பிறந்தவர் . குழந்தை 5 வயது ஆகியும் பேச்சுத் திறன் இல்லாமல் இருந்ததைப் பார்த்த பெற்றோர் செந்தில் வேலனிடமே வேண்ட முருகனின் அருளால் பேசும் திறனை அடைந்தவர்.முருகன் மீது கந்தர் கலி வெண்பா, கயிலைக் கலம்பகம் ஆகிய நூல்களை இயற்றிய குமரகுருபரர் மதுரைக்குச் சென்றார். அக்காலத்தில் மதுரையில் இருந்து அரசு புரிந்த திருமலை நாயக்கரின் வேண்டுகோளுக்கு இணங்க மதுரை மீனாட்சி அம்மன் பெயரில் மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் இயற்றினார். குமரகுருபரர் காசிக்குச் சென்று காசி மடம் என அழைக்கப்பட்ட ஒரு மடத்தை நிறுவி சைவ சமயத்தை வளர்த்தார். காசிமடம் திருப்பனந்தாழிலும் உள்ளது .மதுரைக் கலம்பகம், நீதிநெறி விளக்கம், திருவாரூர் நான்மணி மாலை, முத்துக் குமாரசாமி பிள்ளைத்தமிழ், காசிக் கலம்பகம், சிதம்பர மும்மணிக் கோவை, சகலகலாவல்லி மாலை என்பன இவர் இயற்றிய நூல் களாகும். அவர் குரு பூஜை இன்று.

15.6.2025 – ஞாயிறு ஆனி மாதப் பிறப்பு

ஆனி மாதம் என்பது உத்தராயண காலத்தின் கடைசி மாதம். தேவர்களுக்கு மாலை நேரம். அதாவது நான்கு முதல் ஆறு மணி வரை உள்ள நேரம். இந்த நேரத்தில் எந்தப் பிரார்த்தனையைச் செய்தாலும் பலிக்கும். மாதப் பிறப்பாக இருப்பதால் பிதுர் தேவதைகளை நினைப்பதும், குல தெய்வத்தை நினைப்பதும், இஷ்ட தெய்வத்தை நினைப்பதும் மிகச் சிறந்த பலனைத் தரும்.

15.6.2025 – ஞாயிறு திருவோண விரதம்

27 நட்சத்திரங்களில் திருவாதிரை, திருவோணம் ஆகிய இரண்டு நட்சத்திரங்களும் மங்களகரமான நட்சத்திரங்கள். இரண்டு நட்சத் திரத்திலும் திரு என்கின்ற அடையாளம் உண்டு. திரு என்பது செல் வத்தைக் குறிப்பது. பல அன்பர்கள் மாதா மாதம் திருவோண நட் சத்திரம் அன்று பெருமாளை நினைத்து விரதம் இருப்பார்கள். பல்வேறு ஆலயங்களில் பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடை பெறும். இந்த விரதத்தை மேற்கொள்ளும் பக்தர்கள் வாழ்வில் எல்லா விதமான தீமைகளும் குறைந்து வாழ்க்கை பிரகாசமாக இருக்கும். எல்லாவிதமான மனோரதங்களும் நிறைவேறும். நல்ல புத்திர பாக்கியம் ஏற்படும். பிள்ளைகள் கல்வியில் உயர்ந்து நல்ல உத்தியோகம் பெறுவார்கள்.

15.6.2025 – ஞாயிறு திருமங்கையாழ்வார் மங்களாசாசனம்

திருத்தஞ்சை அதாவது தஞ்சாவூர் மாமணி கோயில் என்பது பிரசித்தி பெற்ற திவ்ய தேசம். 108 திவ்யதேசங்களில் ஒன்று .இங்கே மூன்று திருத்தலங்கள்(பெருமாள் கோயில்கள்) ஒன்றாக இருக்கின்றன. ஒன்று தஞ்சை மாமணிக் கோயில். இங்கே நீலமேகப்பெருமாள் காட்சி தருகின்றார். இரண்டாவது கோயில் மணிக் குன்றம். இங்கே மணிக் குன்றப் பெருமாள் வீற்றிருந்த திருக்கோலத்தில் காட்சி தருகின்றார்.. மூன்றாவது அருகே இருக்கக்கூடிய தஞ்சை ஆளி நகர் நரசிம்மப் பெருமாள். மூன்றும் சேர்ந்துதான் ஒரே திவ்ய தேசமாக கருதப் படுகிறது. இங்கே வைகாசி மாதம் பிரசித்தி பெற்ற கருட சேவை உற்சவம் நடைபெறும்.. இன்று காலை 11:30 மணிக்கு மேல் வெண்ணாற்றங்கரை நரசிம்ம பெருமாள் சந்நதியில் திவ்ய தேசப் பெருமாள்களுக்கு திருமங்கை ஆழ்வார் மங்களாசாசனம் செய்யும் நிகழ்ச்சி நடைபெறும்.

16.6.2025 – திங்கள் – தஞ்சாவூர் 25 கருட சேவை உற்சவம்

வைகாசி மாதத்தில் ஆழ்வார் நவ திருப்பதி கருட சேவை, காஞ்சிபுரம் கருட சேவை, முதலிய கருட சேவை உற்சவங்கள் பிரசித்தமானவை. அதைப் போலவே தஞ்சாவூர் சுற்றியுள்ள பெருமாள் கோயில்களை இணைத்து நடத்தப்படும் 25 கருட சேவை உற்சவம் சமீபகாலமாகப் பிரபலமடைந்து வருகிறது. அதில் இன்று காலை 6:00 மணிக்கு வெண்ணாற்றங் கரையில் இருந்து திவ்யதேசப் பெருமாள்கள் கருட வாகனத்தில் புறப்பாடு நடைபெறும். காலை 7:00 மணிக்கு மேல் 12:00 மணி வரை பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள கீழராஜவீதி தெற்கு ராஜவீதி மேல ராஜவீதி வடக்கு ராஜ வீதிகளில் தஞ்சாவூரைச் சுற்றியுள்ள 25 பெருமாள் கோயில்களில் இருந்து கருட சேவை உற்சவம் கண்கொள்ளாக் காட்சியாக நடைபெறும்.

17.6.2025 – செவ்வாய் தஞ்சாவூர் 16 நவநீத சேவை

கண்ணன் என்றாலே வெண்ணெய் உண்ட காட்சிதான் ஞாபகத்துக்கு வரும். வெண்ணெய் என்பதுதான் தூய்மையான ஆன்மா. அதைத்தான் அவன் தன்னோடு சேர்த்துக் கொள்ளுகின்றான். வெண்ணெய் உண்ட வாயன் என் உள்ளம் கவர்ந்தானை என்று ஆழ்வார் மங்களாசாசனம் செய்கின்றார்.இடுப்பில் பானையை வைத்துக்கொண்டு தவழ்ந்தபடி வெண்ணெய் உண்ணும் கண்ணன் காட்சி நவநீத சேவை என்று சொல்லப்படும். தஞ்சாவூரைச் சுற்றியுள்ள 16 பெருமாள் கோயில் களில் இருந்து பெருமாள்கள் வீதி உலா கண்ணன் அலங்காரத்தில் நவநீத சேவையில் நடைபெறும். வெண்ணாற்றங் கரையில் இருந்து புறப்பட்டு காலை 7:30 மணி முதல் 11 மணி வரை நான்கு ராஜ வீதிகளிலும் நவநீத சேவை உற்சவம் நடைபெறும்.

18.6.2025 – புதன் பகவதாஷ்டமி

எட்டாவது திதியான அஷ்டமி திதி, ஆன்மிக செயல்பாட்டுக்கு உரியது. துர்க்கைக்கும், பைரவருக்கும் உரிய திதி அஷ்டமி திதி என்பதால் அஷ்டமி திதியில் துர்க்கை அம்மனையும், கால பைரவரையும் வணங்குவோர்க்கு கால பயம் இல்லை. வாழ்வில் எட்டாத உயரத்தை இந்த எட்டாவது திதி உயர வைக்கும். எண் கணிதத்தில் எட்டு என்கிற எண் சனியைக் குறிக்கும். ஒரு ஜாதகத்தில் சனியினால் ஏற்படும் பல விதமான தொல்லைகள் காலபைரவரை வணங்குவதாலும் , துர்க் கையை வணங்குவதாலும் அகலும். தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். வீட்டில் எதிர்மறை சக்திகள் அகன்று நேர்மறை சக்திகள் கூடும். எட்டுத் திசைகளிலும் வருகின்ற தொல்லைகள் நீங்கும். எனவே சிவபெருமானின் அம்சமான பைரவரை இன்றைய தினம் வணங்க வேண்டும்.

18.6.2025 – புதன் தஞ்சை மாமணிக் கோயில் விடையாற்றி உற்சவம்

இன்று காலை 9:00 மணி அளவில் வெண் ஆற்றங்கரையில் உள்ள பெருமாள் சந்நதிகளில் விடையாற்றி உற்சவம் நடைபெறும் இந்த உற்சவத்தை ஒட்டி புதன்கிழமை பிற்பகல் 3:00 மணிக்கு திருவாய்மொழி சேவை தொடங்கும். வியாழக்கிழமை இரவு 8:00 மணிக்கு சாற்று முறை நடைபெறும்.

20.6.2025 – வெள்ளி ஏயர்கோன் கலிக்காமர் குருபூஜை

அறுபத்தி மூன்று நாயன்மார்களில் கலிக்காம நாயனார் திருப்பெரு மங்கலம் என்ற ஊரில் வேளாண்மைக் குடியில் அவதரித்தவர். சிவ பக்தியில் சிறந்தவர். சிவ நிந்தை யார் செய்தாலும் பொறுக் காதவர்.வைத்தீஸ்வரன் கோயிலுக்கு அருகில் திருப்புன்கூர் திருத் தலப் பெருமானுக்கு பல திருப்பணிகள் புரிந்தவர்.ஒரு முறை சுந்தரமூர்த்தி சுவாமிகள் வரலாற்றைக் கேட்டவர், அவர் தன்னுடைய காதலுக்காக சிவபெருமானை தூது விட்டதாக அறிந்து, அவர் மீது கடும் கோபம் கொண்டார். “பெண்ணாசை காரணமாக தூது விட்டாரா சுந்தரர்? அவரை நான் காணும் போது என்ன நடக்கும் என்பது தெரியாது?”இந்தச் செய்தி சுந்தரருக்கும் தெரிந்தது. சிவபெருமான் வன் தொண்டரையும் மென்தொண்டரையும் இணைக்கத் திருவுள்ளம் கொண்டார். கலிக்காம நாயனாருக்கு கடுமையான சூலை நோய் கொடுத்தார்.

கலிக்காம நாயனார் வயிற்று வலியால் துடிக்க, சிவபெருமான் சுந் தரரிடம் சென்று,“ஏயர் கோன் நாயனார் சூலை நோயால் அவதிப் படுகின்றனர். நீ சென்று தீர்ப்பாய்” என்று சொல்லி அருளினார்.இதை அறிந்த கலிக்காம நாயனார் கடும் கோபம் கொண்டார். “சிவ நிந்தை கொண்ட வன்தொண்டர் வந்து தன்னுடைய நோயைத் தீர்க்கு முன் , இந்த நோயையும், இந்த நோய் கொண்ட உடலையும், என்னுடைய வாளால் கிழித்துக் கொள்வேன்” என்று உடைவாளால் தம்மைத் தாமே கிழித்துக் கொண்டு, சரிந்து விழுந்தார்.அவர் நிலையைக் கண்டு மனைவி அழுதார். தானும் உடன் உயிர் விட துணிவு கொண்டார்.அப்போது சுந்தரர் அந்த ஊருக்கு அருகில் வந்து விட்டதை மற்றவர்கள் சொல்ல, நாயனாரின் மனைவி அவரை எதிர்கொண்டு அழைத்து வந்து வணங்கி அவருக்குரிய ஆசனத்தில் அமர்த்தினார்.

அப்போது சுந்தரர் கலிக்காம நாயனார் எங்கே ?”என்று கேட்க, மற்ற வர்கள் திகைத்து, அவர் உள்ளே உறங்கிக் கொண்டிருக்கிறார் என்று அப்போதைக்கு சமாதானமாக சொல்லினர். அது கேட்ட சுந்தரர், உடனே அவரைக் காண வேண்டும் என்று உள்ளே செல்ல, அங்கே கலிக்காமர் குடல் சரிந்து, உயிர் மாண்டு கிடப்பதைக் கண்டு துடித்துப் போனார்.“ம்… இதுவரை நிகழ்ந்தது நன்றுதான். இனி நானும் இறப்பதே நலம்” என்று தன்னுடைய உடைவாளை பற்றினார். அப்பொழுது ஒரு அதிசயம் அங்கே நடந்தது.சிவபெருமான் அருளால் கலிக்காமர் உயிர் பெற்றார். உடனே எழுந்து சுந்தரர் கையிலுள்ள வாளைப் பிடித்துக் கொள்ள, ஆரூரர் விழுந்து வணங்கினார். கலிக்காமரும் சுந்தரரின் திருவடிகளில் விழுந்து வணங்கினார். ஒருவரை ஒருவர் அன்பினால் ஆரத் தழுவிக்கொண்டு பிரியா நண்பராக மாறினர். திருப்புன்கூர் திருத்தலம் சென்று அப்பெருமானை வணங்கிப் போற்றினர். அவருடைய பூசை நாள் ஆனி மாதம் ரேவதி, இன்று.

The post இந்த வார விசேஷங்கள் appeared first on Dinakaran.

Related Stories: