துணை கலெக்டர், போலீஸ் டிஎஸ்பி உள்ளிட்ட குரூப் 1 பதவிக்கு நாளை முதல் நிலை தேர்வு: 72 பதவிக்கு 2.49 லட்சம் பேர் போட்டி

சென்னை: குரூப் 1 பதவியில் காலியாக உள்ள துணை கலெக்டர், போலீஸ் டிஎஸ்பி உள்ளிட்ட 72 பதவிகளுக்கான முதல்நிலை தேர்வு நாளை நடக்கிறது. 72 பதவிக்கு நடைபெறும் தேர்வை 2.49 லட்சம் பேர் எழுதுகின்றனர். தேர்வு மையங்களுக்கு செல்போன், ஸ்மார்ட் வாட்ச் அணிந்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) குரூப் 1 பதவியில் காலியாக உள்ள 70 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த ஏப்ரல் 1ம் தேதி வெளியிட்டது. இதில் துணை கலெக்டர் 28 இடங்கள், போலீஸ் டிஎஸ்பி 7 இடம், வணிகவரி உதவி ஆணையர் 19, ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர் 7, மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி 3, தொழிலாளர் நல உதவி ஆணையர் 6 ஆகிய 70 பணியிடங்கள் அடங்கும். அதோடு உதவி வனப் பாதுகாவலர் 2 காலியிடங்களுக்கான குருப் 1 ஏ அறிவிப்பும் வெளியிடப்பட்டது. அறிவிப்பு வெளியானது முதல் தேர்வுக்கு ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்திருந்தது.

தொடர்ந்து ஏப்ரல் 30ம் தேதி வரை விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டது. இத்தேர்வுக்கு ஏதாவது ஒரு இளங்கலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஏராளமான பட்டதாரிகள் போட்டி போட்டு கொண்டு தேர்வுக்கு விண்ணப்பித்தனர். மொத்தத்தில் குரூப் 1, குரூப் 1ஏ தேர்வுக்கு 2 லட்சத்து 49 ஆயிரத்து 296 பேர் விண்ணப்பித்தனர். இதில் குரூப் 1 பதவிக்கு 2,27,982 பேரும், குரூப் 1ஏ தேர்வுக்கு 6465 பேரும், குரூப் 1, குரூப் 1ஏ தேர்வுக்கு சேர்த்து 14849 பேரும் முதல்நிலை தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். இந்த நிலையில் குரூப் 1 முதல்நிலை தேர்வு நாளை(ஞாயிற்றுக்கிழமைசனிக்கிழமை) நடைபெறுகிறது. இதற்காக மாநிலம் முழுவதும் 38 மாவட்டங்கள் மற்றும் 6 தாலுகா மையங்கள் என 44 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தேர்வை கண்காணிக்க 987 முதன்மை கண்காணிப்பாளர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். சென்னையில் மட்டும் குரூப் 1 முதல்நிலை தேர்வை 41,094 பேர் எழுதுகின்றனர். இதற்காக சென்னையில் 170 தேர்வு அறைகள் அமைக்கப்பட்டுள்ளது. தேர்வு மையங்களுக்கு செல்போன், கால்குலேட்டர், ஸ்மார்ட் வாட்ச் உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அவ்வாறான பொருட்களை வைத்திருப்போர் கண்டறியப்பட்டால் அவர்கள் தொடர்ந்து தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

மேலும் அவர்களது விடைத்தாள் செல்லாததாக்கப்படும். தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கி வைக்கப்படுவார்கள் என்று டிஎன்பிஎஸ்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. தேர்வு நடைபெறும் அனைத்து இடங்களிலும் தேர்வு எழுதுபவர்கள் வசதிக்காக சிறப்பு பேருந்து வசதிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் தேர்வு நடைபெறும் இடங்களில் தேர்வு எழுதுபவர்கள் தவிர வேறு யாரும் நுழைய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதற்காக தேர்வு நடைபெறும் மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 

The post துணை கலெக்டர், போலீஸ் டிஎஸ்பி உள்ளிட்ட குரூப் 1 பதவிக்கு நாளை முதல் நிலை தேர்வு: 72 பதவிக்கு 2.49 லட்சம் பேர் போட்டி appeared first on Dinakaran.

Related Stories: