பாகம் 9
இந்த பாகத்தில் மேலும் சில சைவ – வைணவ ஒற்றுமை கோயில்களை தரிசிக்கலாம்:
24. பழையாறை / திருநந்திபுரவிண்ணகரம்
பழையாறை, சோழர்களின் தலை நகரமாக இருந்தது. இன்று சில கிராமங்கள் அங்கே உள்ளன. கும்பகோணத்திலிருந்து 8 கி.மீ தூரத்தில் உள்ளது. இங்கே வடதளி, மேற்றளி என்று இரண்டு கோயில்கள் உள்ளன. சோமேசர் கோயில், (வடதளி)
அப்பரால் பாடல் பெற்ற தலமாகும்.
ஆதி யைப்பழை யாறை வடதளிச்
சோதி யைத்தொழு வார்துயர் தீருமே.
(அப்பர், 5.58.6)
பழையாறை வடதளியில் உள்ள பெருமானைத் தொழும் அடியவர்க்கு துயரங்கள் தீரும் என்று கூறுகிறார். அப்பர் பழையாறை வந்தபோது சமணர்கள் பெருமானை மறைத்து வைத்தனர். பெருமானைக் காணாது அப்பர் பதிகம் பாட, இறைவன் காட்சி கொடுத்தார். திருநந்திபுரவிண்ணகரம் (நாதன் கோயில்) என்ற திவ்ய தேசம், சோமேசர் கோயிலிலிருந்து 1.3 கி.மீ தூரத்தில் உள்ளது. இத்தலத்தை திருமங்கை ஆழ்வார் 10 பாசுரங்களால் மங்களாசாசனம் செய்திருக்கிறார்.
“தம்பியொடு தாம் ஒருவர் தன் துணைவி காதல் துணை ஆக முன நாள்
வெம்பி எரி கானகம் உலாவும் அவர் தாம் இனிது மேவும் நகர்தான்
கொம்பு குதி கொண்டு குயில் கூவ மயில் ஆலும் எழில் ஆர் புறவு சேர்
நம்பி உறைகின்ற நகர் நந்திபுரவிண்ணகரம் நண்ணு மனமே’’
(திருமங்கை ஆழ்வார், 1443)
நந்திபுர விண்ணகர் உறையும் ஜகந்நாதர், தம்பியோடும் காதலியோடும் நடந்த ஸ்ரீ ராமரே என்கிறார் ஆழ்வார்.
25. திருக்கரம்பனூர்/திருவாசி
திருக்கரம்பனூர் என்ற உத்தமர் கோயில் திவ்ய தேசம், திருச்சியில் பிட்சாண்டார் கோயில் பகுதியில் உள்ளது. ஸ்ரீ ரங்கத்தில் இருந்து 4 கி.மீ. பெருமாள் புருஷோத்தமனாகவும், சிவபெருமான் பிட்சாடனர் ஆகவும், கூடவே பிரம்மனும் உள்ளனர். இங்கு திருமங்கை ஆழ்வார் மங்களாசாசனம் செய்து உள்ளார்.
“பேரானை குறுங்குடி எம் பெருமானை திருத்தண்கால்
ஊரானை கரம்பனூர் உத்தமனை முத்து இலங்கு
கார் ஆர் திண் கடல் ஏழும் மலை ஏழ்
இவ் உலகு ஏழ் உண்டு
ஆராது என்று இருந்தானைக் கண்டது தென் அரங்கத்தே’’
திருப்பேர் நகர், திருக்குறுங்குடி, திருத்தண்கால், திருக்கரம்பனூர் ஷேத்ரங்களில் இருப்பவனும், ஏழு கடல் ஏழு மலைகளை உண்டவனுமாகிய பெருமானை நான் தென் அரங்கத்தின் குளிர் நீரில் கண்டு கொண்டேன். அரங்கனே புருஷோத்தமன் – புருஷோத்தமனே அரங்கன் என்பது அவர் கூற்று. திருப்பாச்சிலாச்சிராமம் என்ற திருவாசி, பாடல் பெற்ற தலம், உத்தமர் கோவிலிலிருந்து 6 கி.மீ தூரத்தில் உள்ளது. இங்கு சம்பந்தர் 11 பாடல்களையும் சுந்தரர் 12 பாடல்களையும் பாடி உள்ளனர்.
“வைத்தனன் தனக்கே தலையும்என் நாவும் நெஞ்சமும் வஞ்சமொன் றின்றி
உய்த்தனன் தனக்கே திருவடிக் கடிமை உரைத்தக்கால் உவமனே யொக்கும்
பைத்தபாம் பார்த்தோர் கோவணத் தோடு பாச்சிலாச் சிராமத்தெம் பரமர்
பித்தரே யொத்தோர் நச்சில ராகில்
இவரலா தில்லையோ பிரானார்’’
(சுந்தரர் 7.14.1)
‘‘என் தலையையும் நாவையும் நெஞ்சத்தையும் அவருக்கே கொடுத்து அடிமையாக இருக்கிறேன். பாச்சிலாச்சிராமத்துப் பரமனாரான, மாற்றறி வரதரே எம் இறைவர். அவர் என் மீது இரக்கம் காட்ட வேண்டும்’’ அனைத்து பக்தர்களும் இறைவனுக்கு அடிமைகளே என்றும், அனைத்தையும் அவருக்கே கொடுத்துவிட்டால் அவர் எப்பொழுதும் இரக்கம் காட்டி அருள் புரிவார் என்றும் விளக்குகிறார்.
26. திருசிறுபுலியூர் / திருமீயச்சூர்
திருசிறுபுலியூர் என்ற திவ்ய தேசம், மயிலாடுதுறையிலிருந்து 16 கி.மீ தொலைவில் உள்ளது. திருமங்கை ஆழ்வார் 10 பாசுரங்களால் மங்களாசாசனம் செய்துள்ளார். அருள்மாகடல் பெருமாள், வயதான முனிவருக்குக் காட்சி கொடுப்பதால் பெரிய உருவமாக இல்லாமல் சிறிய உருவில் பால சயனமாகக் காட்சி அருள்கிறார். வ்யாக்ரபாத முனிவர் வழிபட்டதால் புலியூர் என்று பெயர். பாடல் பெற்ற பல தலங்கள் வ்யாக்ரபாத முனிவர் வழிபட்டதால் புலியூர் என்றே பெயர் கொண்டு உள்ளன.
“வான் ஆர் மதி பொதியும் சடை மழுவாளியொடு ஒருபால்
தான் ஆகிய தலைவன் அவன் அமரர்க்கு அதிபதி ஆய்
தேன் ஆர் பொழில் தழவும், சிருபுலியுர்ச் சலசயனத்து
ஆன் ஆயனது அடி அல்லது ஒன்று
அறியேன் அடியேனே’’
(திருமங்கை ஆழ்வார், 1631)
பெருமாளின் திருவடி தவிர தனக்கு எதுவும் தெரியாது என்று ஆழ்வார் சரணாகதித் தத்துவத்தை விளக்குகிறார். அடியவர்கள் அனைவர்க்கும் பெருமாளின் பாதங்களே துணை.
பாடல் பெற்ற தலங்களான திருப்பாம்புரம் (10 கி.மீ), திருமீயச்சூர் (6 கி.மீ), சிறுபுலியூர் ஆகியவை அருகருகே உள்ளன. திருமீயச்சூர், லலிதாம்பிகை உறையும் தலம். லலிதா சஹஸ்ர நாமம் இங்குதான் உருவானது. இங்கு பாடல் பெற்ற தலங்கள் இரண்டு, ஒரே கோயிலில் அருகருகே உள்ளன. அவை திருமீயச்சூர் (சம்பந்தர் 11); திருமீயச்சூர் இளங்கோயில் (அப்பர் 10).
“காயச் செவ்விக் காமற் காய்ந்து கங்கையைப்
பாயப் படர்புன் சடையிற் பதித்த பரமேட்டி
மாயச் சூரன் றறுத்த மைந்தன் றாதைதன்
மீயச் சூரே தொழுது வினையை வீட்டுமே (சம்பந்தர் 2. 62.1)
தோற்றுங் கோயிலுந் தோன்றிய கோயிலும்
வேற்றுக் கோயில் பலவுள மீயச்சூர்க்
கூற்றம் பாய்ந்த குளிர்புன் சடையரற்
கேற்றங் கோயில்கண் டீரிளங்
கோயிலே’’ .
(அப்பர் 5.11.1)
மாயங்கள் செய்த சூரபதுமனை வென்ற மைந்தன் (முருகன்) தந்தையாம் திருமீயச்சூரில் அமர்ந்த இறைவர். அவரை வணங்குவோர்க்கு வினைகள் நீங்கும். எல்லாக் கோயில்களிலும் பல தெய்வங்களாக இருப்பவர் மீயச்சூர் இறைவரே என்று அப்பர் கூறுகிறார். அப்பர் மீயச்சூர் வந்தபோது பாலாலயம் மேற்கொண்டிருந்ததால், அவரால் மூலவரைத் தரிசிக்க முடியவில்லை. பாலாலயம் செய்யப்பட்ட பெருமானும் (இளங்கொவில் பெருமான்), மூலவரும் ஒருவரே என்ற பொருளில் அருளப்பட்ட பதிகம் இது.
27. திருவெள்ளியங்குடி / திருப்பனந்தாள்
திருவெள்ளியங்குடி திவ்ய தேசம் கும்பகோணத்திலிருந்து 17 கி.மீ தொலைவில் உள்ளது. அங்கு பெருமாள், கோலவில்லி ராமனாய் சயனக் கோலத்தில் அருள் பாலிக்கிறார். மூன்று திவ்ய தேசக் கோயில்களில் ராமர் சயனக் கோலத்தில் உள்ளார்:
1. திருப் புள்ளம்பூதங்குடி – வல்வில் ராமர்
2. திருவெள்ளியங்குடி – கோலவில்லி ராமர்
3. திருப்புல்லாணி – தர்ப்ப சயன ராமர்.
கோலவில்லி ராமனைத் திருமங்கை ஆழ்வார் 10 பாசுரங்களில் மங்களாசாசனம் செய்து இருக்கிறார்.
“ஆய்ச்சியர் அழைப்ப வெண்ணெய் உண்டு ஒருகால் ஆல் இலை வளர்ந்த எம் பெருமான்
பேய்ச்சியை முலை உண்டு இணை மருது இறுத்து பெரு நிலம் அளந்தவன் கோயில்
காய்த்த நீள் கமுகும் கதலியும் தெங்கும் எங்கும் ஆம் பொழில்களின் நடுவே
வாய்த்த நீர் பாயும் மண்ணியின் தென்பால் திருவெள்ளியங்குடி அதுவே’’.
(திருமங்கை ஆழ்வார், 1338)
திருவெள்ளியங்குடியில் சயனித்திருக்கும் கோலவில்லி ராமன்தான், அந்நாளில் ஆய்ச்சியர் அழைக்க, ஓடோடி வந்து வெண்ணெய் உண்ட கண்ணன்; அவனே அன்று ஆலிலையில் துயின்ற பரமன்; அவனே குழந்தையாய்ப் பூதனையின் முலையில் பாலுண்டு அவளை அழித்தவன்; அவனே இரு மருத மரங்களுக்கு நடுவே சென்று அரக்கர் இருவருக்கு நற்கதி அளித்த மாயக் கண்ணன்; அவனே மாவலியிடம் நிலம் வேண்டி விண்ணை அளந்தவன். அவனைச் சென்று வணங்கு. திருவெள்ளியங்குடிக்கு மிக அருகிலேயே மூன்று பாடல் பெற்ற தலங்கள் உள்ளன:
1. சேஞ்சலூர் (2.3 கி.மீ)
2. திருவாய்ப்பாடி (4 கி.மீ)
3. திருப்பனந்தாள் (6 கி.மீ)
“கண்பொலி நெற்றியினான் றிகழ் கையிலொர் வெண்மழுவான்
பெண்புணர் கூறுடையான் மிகு பீடுடை மால்விடையான்
விண்பொலி மாமதிசேர் தரு செஞ்சடை வேதியனூர்
தண்பொழில் சூழ்பனந்தாட் டிருத் தாடகை ஈச்சரமே’’.
(சம்பந்தர் 3.62.1)
நெற்றியில் மூன்றாவது கண் உடையவனும் கையில் மழு ஏந்தியவனும் பெண்ணைப் பாகமாகக் கொண்டவனும் பெருமை மிக்க திருமாலை விடையாகக் கொண்டவனும், செஞ்சடையில் சந்திரனை அணிந்தவனும் ஆகிய பெருமான் உறையும் இடம் திருப்பனந்தாள் தாடகை ஈஸ்வரம் என்ற கோயில். அங்கு சென்று வழிபடுவீர்களாக. தாடகை என்ற பெண் வழிபட வந்தபொழுது அவள் அணிவித்த மாலையை ஏற்க இறைவன் சாய்ந்தார். குங்குலியக் கலய நாயனார் தன் நெஞ்சில் கயிறு கட்டி இழுத்து, லிங்க ரூப இறைவனை நேர் செய்தார்.
(தொடரும்)
The post பதிகமும் பாசுரமும் appeared first on Dinakaran.