விடுதியை நோக்கித் திருப்பாமல் இருந்திருந்தால் 2,000 பேரின் உயிரை காப்பாற்றிய விமானி; ராயல் சல்யூட் அடித்து நன்றி கூறும் இளைஞர்

அகமதாபாத்: விபத்துக்கு உள்ளான விமானத்தை விடுதியை நோக்கித் திருப்பாமல் இருந்திருந்தால் 2,000 பேர் பலியாகி இருப்பார்கள் என்றும், அவர்களை காப்பாற்றிய விமானிக்கு ராயல் சல்யூட் என்று இளைஞர் ஒருவர் கூறினார். அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்குப் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே மருத்துவக் கல்லூரி விடுதி மீது விழுந்து நொறுங்கியது நாட்டையே உலுக்கியுள்ளது. இந்த விபத்தில் விமானத்தில் இருந்த 241 பேர் மற்றும் தரையில் இருந்த 33 பேர் என மொத்தம் 274 பேர் உயிரிழந்தனர். இந்த சோகத்திற்கு மத்தியில், விபத்து நடந்த இடத்திற்கு அருகே கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த ஒருவர், இந்த விபத்தின் கோரத்தையும், ஒரு மிகப் பெரிய பேரழிவு எப்படித் தவிர்க்கப்பட்டது என்பதையும் விவரித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘விமானம் வழக்கத்தை விட மிகத் தாழ்வாக, எங்கள் தலைக்கு மேல் பறந்து சென்றது. நாங்கள் பார்த்ததை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.

கடைசி நேரத்தில் விமானி விமானத்தை விடுதியை நோக்கித் திருப்பாமல் இருந்திருந்தால், அந்த விமானம் அருகிலுள்ள குடியிருப்புப் பகுதிகளில் விழுந்து 1500 முதல் 2,000 பேர் வரை இறந்திருப்பார்கள். ஒட்டுமொத்த காலனியும் அழிந்திருக்கும். அந்த விமானிக்கு ராயல் சல்யூட். இறுதி நொடியில் அவர் விமானத்தை விடுதிப் பக்கம் திருப்பியதால்தான் மிகப் பெரிய சோகம் தவிர்க்கப்பட்டது. அந்த விமானியால்தான் நாங்கள் இன்று உயிருடன் இருக்கிறோம். விமானம் மோதியவுடன் எழுந்த பெரிய தீக்கோளத்தையும், உள்ளூர் மக்கள் சுமார் 15 முதல் 20 பேரையும் நாங்கள் காப்பாற்றினோம்’ என்றார். இந்த விபத்து இந்திய விமானப் போக்குவரத்து வரலாற்றில் ஒரு கரும்புள்ளியாக இருந்தாலும், விமானியின் கடைசி நேர சமயோசிதத்தால் ஆயிரக்கணக்கான உயிர்கள் காப்பாற்றப்பட்டிருப்பது, இந்தத் துயரத்தின் மத்தியிலும் தியாகத்தின் சாட்சியமாகப் பார்க்கப்படுகிறது.

 

The post விடுதியை நோக்கித் திருப்பாமல் இருந்திருந்தால் 2,000 பேரின் உயிரை காப்பாற்றிய விமானி; ராயல் சல்யூட் அடித்து நன்றி கூறும் இளைஞர் appeared first on Dinakaran.

Related Stories: