லார்ட்ஸ் டெஸ்ட்டில் மார்க்ரம், பவுமா அபார ஆட்டம்; ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டம் கைப்பற்றும் தென்ஆப்ரிக்கா: ரூ. 30.80 கோடி பரிசையும் அள்ளுகிறது

லண்டன்: 2023-25ம்ஆண்டு 3வது சீசன் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்தொடரின் இறுதி போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்து வருகிறது. இதில் ஆஸ்திரேலியா-தென்ஆப்ரிக்கா அணிகள் மோதி வருகின்றன. முதல் இன்னிங்சில் முறையே ஆஸ்திரேலியா 212 ரன்னும், தென்ஆப்ரிக்கா 138ரன்னும் எடுத்தன. இதையடுத்து 74ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணியில் கவாஜா 6, லாபுசாக்னே 22, கேமரூன் கிரீன் 0, ஸ்டீவன் ஸ்மித் 13, டிராவிஸ் ஹெட், பியூ வெப்ஸ்டர் தலா 9, அலெக்ஸ் கேரி 43, கம்மின்ஸ் 6ரன்னில் அவுட் ஆகினர். 2ம் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலியா 8 விக்கெட் இழப்பிற்கு 144ரன் எடுத்திருந்தது. 3வது நாளான நேற்று 3வது ஓவரிலேயே நாதன் லயன் 2ரன்னில் ஆவுட் ஆக கடைசி விக்கெட்டிற்கு ஸ்டார்க்-ஹேசல்வுட் 59ரன் எடுத்தனர். ஹேசல்வுட் கடைசி விக்கெட்டாக 17ரன்னில் மார்க்ரம் பந்தில் அவுட் ஆக, அரைசதம் அடித்த ஸ்டார்க் 58ரன்னில் நாட் அவுட்டாக இருந்தார்.

65 ஓவரில் 207 ரன்னுக்கு ஆஸ்திரேலியா ஆல்அவுட் ஆனது. தென்ஆப்ரிக்க பவுலிங்கில் ரபாடா 4, லுங்கிநிகிடி 3 விக்கெட் எடுத்தனர். பின்னர் 282 ரன் இலக்குடன் 2வது இன்னிங்சை தொடங்கிய தென்ஆப்ரிக்க அணியில், ரியான் ரிக்கல்டன் 6ரன்னில் ஸ்டார்க் பந்தில் வெளியேற 2வது விக்கெட்டிற்கு மார்க்ரம்-வியான் முல்டர் 61ரன் எடுத்தனர். அணியின் ஸ்கோர் 70வது இருந்த போது வியான் முல்டர் 27ரன்னில் ஸ்டார்க் பந்தில் கேட்ச் ஆனார். இதையடுத்து மார்க்ரமுடன் கேப்டன் பவுமா ஜோடி சேர்ந்தார். இருவரும் பொறுமையாக ஆடி ரன் சேர்த்தனர். மார்க்ரம் 69 பந்திலும், பவுமா 83பந்திலும் அரைசதம் அடித்தனர். இவர்களின் விக்கெட்டை வீழ்த்த ஆஸி. பவுலர்கள் மாறிமாறி பந்துவீசியும் பலன் கிடைக்கவில்லை.

சிறப்பாக ஆடிய மார்க்ரம் 156 பந்தில் 11 பவுண்டரியுடன் சதம் அடித்தார். டெஸ்ட்டில் இது அவருக்கு 8வது சதமாகும். நேற்று 3ம்நாள் ஆட்டநேர முடிவில் தென்ஆப்ரிக்கா 56 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 213ரன் எடுத்திருந்தது. மார்க்ரம் 102, பவுமா 65 ரன்னில் களத்தில் இருந்தனர். இன்னும் 8 விக்கெட் கைவசம் இருக்க வெற்றிக்கு 69 ரன்னே தேவை. இதனால் 4வது நாளான இன்று தென்ஆப்ரிக்கா இலக்கை எட்டி வெற்றிபெறும் விளிம்பில்உள்ளது. 1998ம் ஆண்டு சாம்பியன் டிராபி தொடரில் தென்ஆப்ரிக்கா பட்டம் வென்றது. அதன்பின்னர் 27 ஆண்டு கழித்து ஐசிசி தொடர் ஒன்றில் அந்த அணி பட்டம் வெல்ல இருக்கிறது. பட்டம் வெல்லும் அந்த அணிக்கு சாம்பியன் கதாயுதத்துடன் ரூ.30.80கோடி பரிசுத்தொகை வழங்கப்படும்.

 

The post லார்ட்ஸ் டெஸ்ட்டில் மார்க்ரம், பவுமா அபார ஆட்டம்; ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டம் கைப்பற்றும் தென்ஆப்ரிக்கா: ரூ. 30.80 கோடி பரிசையும் அள்ளுகிறது appeared first on Dinakaran.

Related Stories: